இன்னும் ஓரிரு நாட்களில் புனித மிக்க ரமழான் மாதம் நம்மை வந்தடைய இருக்கிறது. அதனைப்போற்றும் விதமாக அதிரை எக்ஸ்பிரஸின் வாசகர்கள் தங்களது கருத்தாக்கத் திறமையை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம்.
மிகச்சிறப்பான முறையில் பங்களிக்கும் நபருக்கு சிறப்புப் பரிசாக ரூ 2000/- வழங்கப்படும். பங்குபெறும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் உண்டு (இன்ஷா அல்லாஹ்)
இப்புனித மிக்க ரமளான் மாதத்தில் அதிரை முஸ்லிம்களின் கலாச்சாரம் பற்றி எந்த ஒரு தலைப்பிலும் அதிரை எக்ஸ்பிரஸிற்கு உங்கள் ஆக்கங்களை அனுப்பலாம்.
* நோன்புக்காலங்களில் அதிரை, சிறப்பிக்கப்படும் பள்ளிவாசல்கள், ஹிஜ்ப் ஓதும் நிகழ்ச்சிகள், மார்க்க சொற்பொழிவு இடங்கள் etc...
* நோன்புக்கால அதிரை புகைப்படங்கள் (பள்ளிவாசல்களில் கஞ்சி ஊற்றும் நிகழ்ச்சி, பெருநாள் தொழுகைகள், etc...)
* சிறப்புச்செய்திகள், 'பத்ரு படை'(?) கூட்டம், நார்சா விவரங்கள், உங்கள் குடும்ப குழந்தைகளின் முதல்(தல) நோன்பு செய்திகள், சிறுவயது ஹாபிழ்கள் தொழவைக்கும் நிகழ்ச்சிகள் போன்றவை.
* ரமழான் சிறப்புக் கட்டுரைகள்
* நோன்புக்கால சிறப்பு உணவுப்பதார்த்தங்கள் செய்வது எப்படி (வாடா, கஞ்சி, கடப்(ற்)பாசி போன்றவை...), சத்தான உணவுகள், ரமழான் துணுக்குகள் ...
* ரமழான் மாதத்தில் அதிரையின் இரவுப்பொழுதுகள் (கபாப் கடைகள், புதிய தேனீர் கடைகள், பக்கிரிசாவின் மேலம், வித்ருத்தொழுகை, கண்விழிக்கும் இளைஞர்கள் ...)
* நோன்புக்காலங்களில் நடக்கும் அனாச்சாரங்கள், தவிர்க்கும் வழிகள்...
நீங்கள் பார்க்கும் அதிரையை அப்படியே புகைப்படங்களாகவோ, கட்டுரைகளாகவோ, செய்திகளாகவோ அனுப்பிவைக்கலாம்.
நீங்கள் கலந்து கொண்ட (நோன்பை ஒட்டிய) ஒரு நிகழ்வை (இப்ஃதார் நிகழ்ச்சி...) அப்படியே உங்களது சுய வலைப்பதிவாக எண்ணிப் பதியலாம்.
உங்களது ஆக்கங்கள் அனைத்தும் அதிரை முஸ்லிம்களின கலாச்சாரத்தை பிரதிபலிப்பனவாக இருக்க வேண்டும். மேற்கண்ட வகையில் சிறப்பான முறையில் பங்களிப்பாற்றும் புதிய வாசக பங்களிப்பாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன(இன்ஷா அல்லாஹ்).
குறிப்பு:1. போட்டியில் பங்குபெற உங்களது பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை adiraixpress[at]gmail.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவேண்டும்.
2. உங்கள் படைப்புகளை adiraixpress[at]gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்
3. கட்டுரைகள், செய்திகள் யுனிகோட் தமிழில் தட்டச்சிடப்பட்டிருக்கவேண்டும்.
4. உங்களது ஆக்கங்கள் அனைத்தும்
http://adiraixpress.blogspot.com என்கிற இந்த வலைப்பதிவில் இடம்பெறும்.
5. ஏற்கெனவே பங்களிப்பாளராக உள்ளவர்களும் இந்தப்பணியைச் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட மாட்டாது.
6. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அதிரை எக்ஸ்பிரஸ் பங்களிப்பாளர்களாகி தொடர்ந்து எழுதலாம்.
டிஸ்கிளைமர்:மேற்சொன்னவை அதிரையில் நடந்த/நடந்துவரும் விசயங்களே. ரமழான் மாதம் அமல்கள் மூலம் நன்மைகளை அறுவடை செய்யும் மாதம். எனினும் சினிமா, வீடியோகேம், கேரம், கிளித்தட்டு, SMS என நேரத்தை வீணடிக்காமல், அதிரையின் கலாச்சாரத்தைப் பதிவு செய்து வைத்தால், அவற்றின் நல்ல/கெட்ட விசயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்பாகும் என்பதே எங்களின் நோக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.
வாழ்த்துக்கள்!!!
அதிரை எக்ஸ்ப்ரஸில் சமீப நாட்களாக நடக்கும் கருத்துப்பரிமாற்றங்களால் இதை எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதிரை/அதிரைவாசிகள் குறித்தச் செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளவும்,மறைந்துகிடக்கும் எழுத்தாற்றலையும் கருத்தாக்கமாக்கி ஊடகப் பயிற்சி பெறவுமே அதிரை எக்ஸ்ப்ரஸ் என்ற இத்தளம் தொடங்கப்பட்டது.
அல்லாஹ்வின் பேரருளால் நமதூர் அல்அமீன் பள்ளிவாசல் பிரச்சினையை உலகலாவிய அளவில் நம்மக்களிடம் எடுத்துச் சென்று, பொய்வழக்குகளில் தேடப்பட்டவர்கள் சட்டரீதியாக வெளிவருவதற்குத் தேவையான நிதியுதவி கிடைப்பதில் பெரும்பங்காற்றியது. மட்டுமின்றி, அதிரை நகரப் பேரூராட்சி மன்றத்தின் முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வையும், தொடர்ந்த அதிகாரத் துஷ்பிரயோகங்களையும் ஓரளவு வெளிச்சம்போட்டுக் காட்டியது.
மேலும், சிறுநீரகம் மற்றும் இதய சிகிச்சைக்கு மருத்துவ நிதியுதவி கோரிய விளம்பரத்தைப் முகப்பில் பிரசுரித்ததுடன்,சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு அரசின் நிதியுதவி கிடைக்கவும் உதவியது.அல்ஹம்துலில்லாஹ்!
இணையமும் ஈமெயிலும் இல்லாதவர்களே இல்லை என்ற நிலையில் நம் மக்கள் குறித்தச் செய்திகளை ஊடகங்களில் தேடிப்பிடித்து தேவைப்படின் மொழியாக்கம்,எழுத்துருமாற்றம் செய்து அனைவரையும் சென்றடையச் செய்து வருகிறோம். எழுத்தாற்றல் மிக்கவர்களை ஊக்குவித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர அதிரை எக்ஸ்ப்ரஸ் ஓர் வடிகாலாகச் செயல்படுகிறது.
எழுத நேரமில்லாதவர்கள் அரட்டை அரங்கச் சாளரத்தில் ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துக்களைப் பதிக்கவும், பின்னூட்டம் மூலமாக தொடர்புடைய அல்லது மாற்றுக் கருத்துக்களையும், எவ்விதத்தடையுமின்றி பதிக்கவும் வசதியுள்ளது. சுருக்கக்கூறின் ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்த நமது செய்திகளை குறிப்பாக அதிரைவாசிகள் குறித்தவற்றை ஒளிவுமறைவின்றி பகிர்ந்து கொள்ளும் நோக்கில்தான் இலவசமாகக் கிடைக்கும் இத்தளத்தைப் பயன்படுத்தி வருகிறோம்.
எவ்வித முன்முடிவுமின்றி, விருப்பு/வெருப்பின்றி, எந்த இயக்கத்தையும் சார்ந்து/எதிர்த்து எழுதாமல் உண்மையை உள்ளபடிச் சொல்லவே அதிரை எக்ஸ்ப்ரஸை கூட்டாக,சேவை மனப்பான்மையுடன் இணைந்து இயங்கி வருகிறோம்.
இணையத்தில் கிடைக்கும் வசதிகளைக் கொண்டு யார் வேண்டுமானாலும் இலவசமாக இதுபோன்ற சேவையைச் செய்ய முடியும்.ஆனால் தனிநபர் கையாளும்போது தெரிந்தோ தெரியாமலோ தன் விருப்பு வெருப்புகளுக்கு இடமளித்து நோக்கம் நிறைவேறாமல் போகக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு கூட்டாக மாறுபட்ட கருத்துக்களையும் அனுமதித்து வாசகர்களின் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறோம். நமதூரைச் சார்ந்தவர்கள் தயங்காமல் இங்கு சுதந்திரமாக எழுத அனுமதிக்கிறோம். சிலபாதுகாப்புக் காரணத்திற்காகவும், நம்கபத்தன்மையை உறுதி செய்வதற்காகவும புதிய பதிவர்களின் உண்மை அடையாளங்களை அறிந்து கொண்டு தளத்தில் எழுத அனுமதிக்கிறோம்.
சமீபநாட்களாக அரட்டை மற்றும் பின்னூட்டங்களில் கருத்திடுபவர்கள் நிதானம்தவறி, உணர்ச்சிவயப்பட்டு, பெயரை மட்டும் வைத்து யாருடன் உரையாடுகிறோம் என்றே தெரியாமல் மனம்போக்கில் கருத்தாடுகிறார்கள். ஊடகங்களில் நமதூர் பெயர் சமீபநாட்களாக பரபரப்பாகப் பேசப்பட்டதால் பத்திரிக்கையாளர்கள்,உளவுத்துறையினர், ஊடகத்துறையினர் உட்பட நமதூர் பற்றிய செய்திகளை இணையத்தில் தேடும்போது அதிரை எக்ஸ்ப்ரஸ் முன்னனியில் வந்து நிற்பதால் இங்கு நடைபெறும் கருத்துப்பரிமாற்றங்கள் பலராலும் கவனிக்கப்படுகிறது என்பதை நினைவுறுத்துகிறோம்.
தனிநபர் விமர்சனம், இயக்கவெறி,தெருப்பாகுபாடு போன்ற ஊர்ஒற்றுமைக்கு ஊறுவிளைக்கும் செயல்களை அதிரை எக்ஸ்ப்ரஸ் அனுமதிக்காது. சுயமாக எழுதலாம் என்பதற்காக கட்டுப்பாடின்றி இதில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை குறைந்தபட்சம் இத்தளத்தில் மென்மேலும் உரையாட முடியாதவாறு தடுக்க முடியும். தேவைப்பட்டால் நிரந்தரமாக தடுக்கவும் மட்டுறுத்தல் செய்யவும் முடிந்தபோதிலும் ஒருசிலரின் பொறுப்பற்றச் செயலுக்காக பலருக்கும் பயன்படும் இவ்வசதிகளை தடுக்க விருப்பமின்றியே தவிர்த்து வருகிறோம்.
சிலமாதங்களுக்குமுன் நமதூரில் தனிநபர்களிடையே நடந்த ஹராமானச் செயலை யாரோசில விஷமிகள் சீடிக்களாகவும்,நோட்டிஸாகவும் சிலருக்கு அனுப்பி வைத்து "அதிரை எக்ஸ்ப்ரஸுக்கு நன்றி"என்றும் குறிப்பிட்டுள்ளது எங்கள் கவனத்திற்கு வந்து அதிர்ச்சி அடைந்தோம். அவர்களுடன் அதிரை எக்ஸ்ப்ரஸிற்கு எவ்விதத் தொடர்புமில்லை என்பதையும் இங்கு தெளிவு படுத்த விரும்புகிறோம்.
சுதந்திரமாக எழுத வாய்ப்பளித்திருக்கும்போது பதிவாக, முடிந்தால் சொந்தப் பெயருடன் அல்லது அதிரைவாசிகள் அறிந்து கொள்ளும்படியான புணைப் பெயருடன் எழுதலாம். இனியும் சம்பந்தப்பட்டவர்கள் உணர மறுத்தால் மேற்கண்ட தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கும் நிர்ப்பந்தத்தை அதிரை எக்ஸ்ப்ரஸ் குழுவினருக்குத் தரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இணையத்தில் பொதுவானச் செய்திகளை அந்தந்த தளங்களில் சென்றே படிக்கும் வசதி இருப்பின் அவற்றைக் காப்பி பேஸ்ட் செய்யாமல் சுட்டியை அரட்டை அரங்கத்திலோ அல்லது பின்னூட்டமாகவோ சுட்டலாம். விகடன், நக்கீரன் போன்ற இணைய சஞ்சிகைகளில் இடம்பெறும் செய்திகளை பணம் செலுத்தி வாசிப்பவர்கள் விரும்பினால் யூனிக்கோட் எழுத்துருவில் சேமித்து மின்மடலாக அனுப்பி வைத்தால் அதிரை எக்ஸ்ப்ரஸ் பரிசீலித்து பதிவாக மீள்பதிவு செய்யலாம்.
அதிரை குறித்த செய்திகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்பதால் முடிந்தவரை நமதூர் குறித்தச் செய்தியைக் கண்டவர்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்க. அமெரிக்கா,ஜப்பான்,ஆஸ்திரேலியா,லண்டன், மலேசியா, சிங்கப்பூர்,வளைகுடா நாடுகள் மற்றும் சென்னை,அதிரை எனப் பகுதிவாரிச் செய்திகளை எழுத விரும்பும் அதிரைவாசிகள் தயங்காமல் மடல் தொடர்பு கொள்ளவும். தேவைப்படின் வலைப்பூ குறித்த பயிற்சியுடன் எங்களுடன் இணைந்து எழுதவும் வாய்ப்பளிக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தயவு செய்து தெருப்பாகுபாடு, இயக்கவெறி, தேவையற்ற தனிநபர் சாடல் / துதிபாடல் போன்றகருத்துப் பரிமாற்றங்களை அதிரை எக்ஸ்ப்ரஸ் அரட்டை அரங்கிலோ அல்லது பின்னூடத்திலோ யாரும் செய்ய வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இங்கு நடக்கும் கருத்துப் பரிமாற்றங்கள் நம்மனநிலையை பிறர் உடனடியாக அறிந்து கொள்ள உதவுகிறது என்பதை மனதில் இருத்தி கண்ணியமாகவும், ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றக் களமாக அதிரை எக்ஸ்ப்ரஸ் தொடர்ந்து இயங்க உதவுங்கள்.
இச்சேவையை மென்மேலும் சிறப்பாகச் செயல்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மின்மடல் மூலமோ அல்லது பின்னூட்டமாகவோ பகிர்ந்து கொள்ளுங்கள். புரிந்து கொள்ளலுக்கு நன்றி!
அன்புடன்,
அதிரை எக்ஸ்ப்ரஸ் குழு
adiraixpressஅட்gmailடாட்com

தமிழகமெங்கும் பயங்கரவாதிகள் குண்டு வைக்கவிருப்பதாக வரும் செய்திகளைத் தொடர்ந்து கோயில், குளம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் என்று எல்லா இடங்களையும் போலீஸ் குடாய்ந்துகொண்டிருக்கிறது. சென்னை புழல் சிறையில் அலி அப்துல்லா மூலம் இதற்கான சதி உருவானதாகச் சொல்லும்காவல்துறை, நெல்லையைச் சேர்ந்த ஷேக் அப்துல் கபூர், ஹீரா, சென்னை மண்ணடியைச் சேர்ந்த அப்துல் காதர் ஆகியோரைக் கைது செய்திருக்கிறது. தப்பியோடியதாகக் கூறப்பட்ட அபுதாஹிர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தலைமறைவாக உள்ள 'இறைவன் ஒருவனே' அமைப்பின் தலைவர் தவுபீக்கை வலைவீசித் தேடிவருகின்றனர். இந்நிலையில், சர்வதேச மக்கள் வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோகரன் தலைமையிலான உண்மை அறியும் குழு கைதானவர்களின் குடும்பங்களைச் சந்தித்துள்ளது.

அந்தக் குழுவின் தலைவர் மனோகர னிடம் பேசினோம். ''தமிழகத்தில் திராவிட இயக்கங்களும், தமிழ்த்தேசிய அமைப்புகளும் இஸ்லாமிய இயக்கங்களோடு எப்போதுமே தோழமையோடு செயல்பட்டுவருகின்றன. பொது மக்களைக் கொல்லக்கூடிய அளவு நிலைமை இங்கே மோசமாக இல்லை. விசாரணையே இல்லாமல் பத்தாண்டுகளுக்கும் மேலாக பல முஸ்லிம் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க வேண்டுமென்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்துவரும் வேளையில், அவர்களின் சிறைவாசத்தை நீட்டிப்பதற்காகத் திட்டமிட்டே காவல்துறை பொய்ச்செய்தி பரப்பிவருகிறது.
பெட்ரோல் உள்ளிட்ட விலைவாசி உயர்வால் மக்கள் கொந்தளித்துப ்போயிருக்கிறார்கள். அவர்களுடைய கோபம் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் பிரச்னையைத் திசை திருப்ப தீவிரவாத பீதியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். 'என்னை என்கவுன்ட்டர் செய்ய முயன்றால், தமிழகத்தையே குண்டு வைத்துத் தகர்ப்பேன்' என்று தவுபீக் சொன்னதாகச் சொல்கிறார்கள். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பொய்க்குற்றம் சுமத்தப் பட்ட தவுபீக், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு நிம்மதியாக வாழ்ந்துவந்தார். உளவுத்துறை, அவரைத் தங்களின் உளவாளியாக மாறச்சொல்லி நெருக்கடி கொடுத்தது. இதை எதிர்த்த காரணத்துக்காக, ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் அவரை சம்பந்தப்படுத்தியதுடன், இந்துத் தலைவர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும், சுற்றி வளைத்தபோது தப்பிவிட்டதாகவும் கதை கட்டியிருக்கிறார்கள்'' என்றார்காட்டமாக.

தவுபீக்கின் அண்ணன் சாதிக்கிடம் பேசினோம். ''என் தம்பிக்கு மூன்று குழந்தைகள். கல்யாணமாகிப் பத்து வருஷங்கள் ஆகிறது. சின்ன வயதிலிருந்தே நியாயத்துக்காகக் குரல் கொடுப்பான். 2004 சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு ஐந்தாயிரம் வாக்குகள் பெற்றான். அவனை வாபஸ் வாங்கச்சொல்லி 13 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுப்பதாகச் சொன்னார்கள். அவர்களை அவமானப்படுத்தியதற்காகவும், ஓட்டுகளைப் பிரித்ததற் காகவும் சிலர் கோபத்தில் இருந்தார்கள். காவல்துறைக்கு மட்டும் லஞ்சம், வழக்கு என்று இதுவரை 21 லட்ச ரூபாய் செலவழித்திருக்கிறோம். ஆனா லும், எங்களை விடவில்லை. முஸ்லிமாகப் பிறந்தவர்கள் யாரும் இங்கே வாழக்கூடாதா? போலீஸாரால் எங்களுக்கு வாடகை வீடு கிடைக்கவில்லை. வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. எங்கள் குடும்பங்களில் யாரும் பெண் எடுப்பதோ பெண் கொடுப்பதோ அறவே நின்று விட்டது. போலீஸாரிடம் கேட்டால், 'எல்லாம் மேலிடத்து பிரஷர்' என்கிறார்கள். இந்தியாவில் அப்பாவி இஸ்லாமியனாகப் பிறப்பதைவிட செத்துப்போவதே மேல்'' என்றார் இயலாமையோடு.
மண்ணடி அப்துல் காதரின் அம்மாவான பஷீரா, ''கண்ட நேரங்களில் காவல்துறை வீட்டுக் கதவைத் தட்டுகிறது. மண்ணடியில் ரெடிமேட் வியாபாரம் செய்துகொண்டிருந்த என் மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள். அவனை விடுவிக்கச்சொல்லி மேலதிகாரிகளுக்குத் தந்தி கொடுத்தேன். நீதிமன்றத்தில் வழக்குப் போடலாம் என்றிருந்த சமயத்தில் தீவிரவாத முத்திரை குத்தி அவனை சிறையில் அடைத்துவிட்டார்கள்'' என்றார்.

அபுதாஹிரின் அம்மாவான ரம்ஜான் பீவியோ, ''என் பையன் துணி வியாபாரம் செய்துகிட்டிருந்தான். அவனை தவுபீக்கின் கூட்டாளி, குண்டு வைக்கத் திட்டமிட்டான்னு சொல்லிட்டதால போலீஸ§க்குப் பயந்து தலைமறைவாயிட்டான். 'அவனை ஒப்படைக்கலைன்னா என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்னு போட்டுடுவோம்'னு போலீஸ் மிரட்டியது. எங்களுக்கு போன் செய்தப்ப அபுதாஹிர்கிட்ட இதைச் சொன்னோம். அதனால எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தான். எந்தக் குற்றமும் செய்யாத அவனைப் பொய்வழக்குப் போட்டு சித்ரவதை செய்துவருகிறார்கள்'' என்றார்.
தவுபீக், அபுதாஹிர், அப்துல் காதர் ஆகியோரின் வழக்கறிஞர் ரஜினிகாந்த்திடம் பேசியபோது, ''கைது செய்யப்பட்ட மூவரிடமும் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கி மிரட்டி வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள். அதை வீடியோவிலும் பதிவு செய்திருக்கிறார்கள். இந்துமதத் தலைவர்களைக் கொல்லத் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கு, சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் பூக்கடை இன்ஸ்பெக்டர் மணிவண்ணனைச் சந்தித்தபோது, 'தவுபீக்கை என்கவுன்ட்டர் செய்யும் திட்டமெல்லாம் கிடையாது.
அப்துல் காதரைக் காப்பாற்றும் எண்ணத்தில்தான் அவரைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளோம். பத்திரிகைகளில் வரும் செய்திக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது' என்றார். உளவுத்துறை ஐ.ஜி-யான ஜாஃபர் சேட்டைச் சந்திக்க முயன்றோம். அவர் மறுத்துவிட்டார். யாரையாவது என்கவுன்ட்டர் செய்தால் பதவி உயர்வு கிடைக்கும். பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி அதிக நிதி பெறலாம் என்ற நோக்கத்தில்தான் போலீஸார் இப்படிச் செயல்படுகின்றனர்.
இவ்விஷயத்தில் தொடர்ந்து நடைபெறும் மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். உண்மை அறியும் குழுவின் சார்பாக இது குறித்து நாங்கள் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யவிருக்கிறோம்'' என்றார்.
- பாலா
அதிரை ஆலிம்களைப் பற்றி கொஞ்சம் அரைகுறையாகவும் கொஞ்சம் அவதூறு கலந்தும் எழுதி இருந்தனர். பொத்தாம் பொதுவாக அதிரையில் நடக்கும் மார்க்கவிரோதச் செயல்களுக்கு ஆலிம்களை மட்டும் குறை சொல்வது எதார்த்தமறியாமல் எழுதப்பட்டது என்பதைச் சொன்ன பிறகும், தங்கள் தவறைத் திருத்திக் கொள்ளாமல் அடம் பிடிக்கிறார்கள்.
எதிர்வினை என்ற பெயரில் நிதானமின்றி எழுதியுள்ளார்கள்!தர்காக்களில் தாயத்து முடிந்து கொடுப்பவரையும், ஆயுத பூசைக்கும் பணம் கொடுத்தால் பாத்திஹா ஓதுபவரையும், வயிற்றுக் கோளாராக இருந்தாலும் ஹத்தம் ஓதி உண்டுகழிப்பவரையும் ஆலிம்கள் என்று கற்பனையாக நினைத்துக் கொண்டு அதிரை-ட்ரூத் அன்பர் பிதற்றியுள்ளார்.
அதிரையில் ஆலிமாக இருப்பவர்களில் பலரும் தர்ஹா, ஹத்தம் மற்றும் இதர அநாச்சாரங்களைப் பற்றி அறிந்தும் தடுக்க முடியாத நிலைமைக்கு, அவர்களுக்குரிய கண்ணியம் வழங்கப்படாமலிருப்பதும், SO & SOவாதிகளைப் போல் ஆள்-படை-பண பலமின்றியும் இருப்பதே முக்கியக் காரணம் என்று சுட்டிக்காட்டி, எதார்த்தமாக எழுதுங்கள் என்று சொன்னால் உண்மைக்கு ஏன் கசக்கிறது?
நமதூர் ஆலிம்களில் இன்றளவும் நமதூர் தர்காவுக்கோ அல்லது வெளியூர் தர்காவுக்கோ சென்று ஜியாரத் செய்தவர்கள்:
1. மர்ஹூம் அஷ்ரஃப் அலி ஆலிம். (காளியார் தெரு)
2. நெய்னா ஆலிம் (புதுமனைத் தெரு/ நெசவுத் தெரு)
3. முஹம்மது குட்டி ஆலிம்
4. மற்றும் சில (அனேகமாக லெப்பைக் குடும்ப) ஆலிம்கள்?!.
லெப்பை குடும்பத்தவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் கந்தூரி விழாக்களில் கலந்து கொள்பவர் அல்லர்.அப்துல் காதிர் ஆலிம்,முஹம்மது குட்டி ஆலிம் போன்றோர் மூலமாக சுமார் 10-15 ஆண்டுகளுக்கு முன்னர் தர்கா மற்றும் கந்தூரி கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டுமென்று சம்பந்தப்பட்ட தர்கா டிரஸ்டிகளிடம் பேசி, அதிரை பைத்துல்மாலின் முயற்சியின் பேரில் ஓரிரு வருடங்கள் கடற்கரைப்பள்ளி தர்கா வளாகத்தில் மார்க்க பயான் நடைபெற்றது அதிரை-உண்மையில் எழுதும் இளையவருக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சேதுரோடு தைக்காவில்,மயிலிறகால் தடவி விடுவது,கப்ரில் சஜ்தா செய்தல் போன்றவற்றைக் கடுமையாகச்சாடிப் பேசினார் முஹம்மது குட்டி ஆலிம். தைக்காவின் வெளியே மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே, மேற்கூறிய அநாச்சாரங்கள் தர்ஹாவில் நடைபெற்றுக் கொண்டிருந்ததும் அதிரை-ட்ரூத் அன்பர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சிஷ்தியை அல்லாஹ்விடம் தவ்பாச் செய்யச் சொன்ன அப்துல் காதிர் ஆலிம், தர்ஹாவும் கந்தூரியும் மார்க்க விரோதமென பகிரங்கமாகச் சொன்ன முஹம்மது அலிய் ஆலிம், தர்காவுக்கே சென்று தவறென்று உரைத்த முஹம்மது குட்டி ஆலிம் உட்பட 99% ஆலிம்கள் தர்கா, கத்தூரி மற்றும் இதர மார்க்க விரோத அனாச்சாரங்களை எதிர்க்காவிட்டாலும் ஆதரிப்பவர்கள் அல்லர்.ஆதரிக்காமலிருப்பதும் ஒருவகை எதிர்ப்புநிலை என்பதை யாராச்சும் இந்த அதிரை-உண்மைக்கு எடுத்துச் சொல்லவும்.
நான் வெளிநாட்டில் இருப்பதால் உள்ளூர் நிகழ்வுகளைத் துல்லியமாக அறிய முடியவில்லை. அதிரை நகர உலமாக்களில் நானறிந்தவர்களைப் பற்றியும் அவர்களின் தன்னலமற்ற மார்க்கப் பணிகளையும் அறிந்தவரை பகிர்ந்து கொண்டுள்ளேன்.ஆலிம்களில் பலர் உலகக் கல்வியில் பின்தங்கி, இணையம், ஈமெயில் என்றால் என்னவென்றே அறியாத நிலையில்தான் அவர்களின் கல்வியறிவு இருக்கிறது.
அல்லாஹ்விற்காக உண்மையைச் சொல்வதாக இருந்தால், ஆலிம்களை நேரில் அணுகி, உங்கள் கடமைகளைச் செய்யுங்கள்; நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம் என்பதே நேர்மையான அணுகுறையாகும். விடுத்து, பொத்தாம் பொதுவாக எழுதும் ஏட்டுச்சுரைக்காய்கள் கறிக்குதவாது என்பதை பொதுத்தளங்களில் எழுதும் அன்பர்கள் உணர வேண்டும்.
இதன்மூலம், இஸ்லாத்தைக் குறைகான அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நாமே முன்னுதாரணமாகி விடக்கூடாதே என்பதால்தான் சற்று கடுமையாக இத்தகையவர்களின் தவறான அணுகுமுறையைச் சாட வேண்டியுள்ளது. நானறிந்தவற்றை மறைத்தல் திரித்தலின்றி சொல்லியதாக நம்புகிறேன். பதிலுக்குப் பதில் லாவணிபாடி நேர,சக்தி விரயம் செய்யாமல் இங்கு சொல்லப்பட்ட அநாச்சாரங்களைத் தடுக்கத் தகுந்த ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்வோம். அதிரை-உண்மைக்கும் சேர்த்தே இவ்வழைப்பை விடுக்கிறேன்.
நபியே! உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும் அவர்களிடம் மிக அழகிய முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன் அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும், (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான் (அல்குர்ஆன் 16:125)
<<<அபூஅஸீலா-துபாய்>>>
ஊடகங்களில் அதிரை பற்றிய மிகைப்படுத்தப்பட்டச் செய்திகளால் உள்ளூர் மற்றும் வெளிநாடுவாழ் அதிரைவாசிகள் கலக்கமும் குழப்பமும் அடைந்துள்ள இச்சூழலில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கலாம் என்றாலும் அதிரை-ட்ரூத் என்ற வலைப்பக்கத்தில் "
பாவம் ஒருபக்கம்; பழி ஒருபக்கம்" பதிவுக்குப்
பதிலடி கொடுக்கப்பட்டிருப்பதாகச் 4-5 நாட்களாக அப்துல்லா என்ற பெயரில் ஒருவர் கூப்பாடு போட்டு வருவதால் எதிர்வினையைப் பதிவு செய்கிறேன்.
ஆப்கானிஸ்தானையும் இராக்கையும் தாக்குவதற்கு முன்பாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் W. புஷ் உலகநாடுகளைப் பார்த்து "BE WITH US OR AGAINST US" என்றார். அதாவது "எங்களோடு இணைந்து கொள்ளாதவர்களும் எங்கள் எதிரிகளே" என்றதைப்போலுள்ளது அதிரை-உண்மையின் பதிவும்!
நமதூரில் நடக்கும் மார்க்கத்திற்கு முரணான அனாச்சாரங்களுக்கு உள்ளூர் உலமாக்களே காரணமென்று எழுதி இருந்தனர். இவற்றை எதிர்க்கவில்லை என்பதால் ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமல்ல என்று SO CALLED அதிரை உண்மைக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது!
இத்தகைய அனாச்சாரங்கள் காலங்காலமாக நடந்துவருவதற்கு ஆலிம்கள் மட்டும் பொறுப்பல்ல என்பதையே "பாவம் ஒருபக்கம் பழி ஒரு பக்கம்" பதிவில் சுட்டிக்காட்டினேன். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நமதூரில் இருக்கும் இளம் மற்றும் மூத்த ஆலிம்கள் எதிர்த்ததே வந்துள்ளனர் என்றதற்கு தவ்ஹீதுவாதிகளுக்கே உரிய ஸ்டைலில் ஆதாரமில்லை என்று எழுதி இருந்தார். ஆதாரம் CD ஆகவோ அல்லது சாட்டிலைட்சானல் பேச்சாகவோதான் இருக்க வேண்டுமா என்ன? இதோ சில ஆதாரங்கள்....
* குஷ்தி போடும் சிஷ்தியிடம் "அல்லாஹ்விடம் தவ்பாச் செய்துகொள்" என்று கையைப்பிடித்து உரிமையுடன் சொன்ன அப்துல் காதர் ஆலிம்.
* கந்தூரி, சந்தனக்கூடு இவையெல்லாம் அனாச்சாரங்களென்று வாழ்நாள் முழுதும் சொல்லி வந்த மர்ஹும் முஹம்மது அலி ஆலிம் போன்றோர் தங்களைத் தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொள்ளாமலேயே எதிர்த்து வந்துள்ளனர்.இந்த உண்மைகளை அதிரை-உண்மை அறியவில்லையா? அல்லது மூடிமறைத்தாரா என்பதைத் தெளிவுபடுத்தவும்.
* எனது உறவினர்களில் இரண்டு ஆலிம்கள் உள்ளனர். (அவசியப்பட்டால் பெயர்கள் தனிமடலில் கொடுக்கப்படும்)அவர்களில் எவரும் கந்தூரியையோ தர்ஹாவை ஆதரிக்கவில்லை.
நானறிந்தவரை ஆலிம்களில் எவரும் இவற்றைச் சரியென்று சொல்லக் கேட்டதில்லை. கந்தூரி, தர்ஹா வழிபாட்டை ஆதரிக்கும் ஆலிம்களை ஆதாரத்துடன் அடையாளம் காட்டவேண்டியது அதிரை-உண்மைதான்!
அன்பரே,
உள்ளூரில் ஓதிக்கொடுத்துக் கொண்டிருக்கும் ஆலிம்களைவிட அரசியல் செல்வாக்கு மற்றும் SINGLE SMS இல் ஆயிரக்கணக்கானோரைக் கூட்டமுடிந்த SO CALLED தவ்ஹீது ஆலிம்களே இவற்றை நேரில் களமிறங்கி தடுத்து நிறுத்தச் சக்தியிருந்தும்,இவையில்லாத அப்பாவி உலமாக்களைக் குற்றம் சாட்டுவது நியாயமல்ல என்பதையே சொன்னேன்.
எதையாவது எழுதியே ஆகவேண்டும் என்பதற்காக எதார்த்தத்தை மறந்து எழுதவேண்டாம் என்பதையே சுட்டிக் காட்டினேன். ஏற்பதும் ஏற்காததும் உங்கள் இஷ்டம்! இணையத்தில் எழுதுவதோடு அல்லது மேடைகள் / தொலைக்காட்சிகளில் பேசுவதோடு தவ்ஹீது பொறுப்பு முடிந்து விட்டது என்று எண்ணாமல் இனி வரும் கந்தூரிகளின்போது, தவ்ஹீதுவாதிகளுக்கே உரிய ஸ்டைலில் தர்கா முற்றுகை,கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என்று செய்து அனாச்சாரங்களைக் களமிறங்கித் தடுக்கலாமே!
பூனைக்கு மணிகட்ட அப்பாவி உலமாக்களை மட்டுமே எதிர்ப்பார்க்காமல் 'உண்மையை ஒளிந்து கொண்டு' சொல்லும் நீங்களே முன்வந்து கட்டவும்!
<<<அபூஅஸீலா-துபாய்>>>
இஸ்லாம் மட்டுமே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ள ஒரே மார்க்கமாகும்.இதை திருக்குரானின் பல வசனங்கள் வாயிலாகவும்,நபி மொழி மூலமும் நாம் அறிந்திட இயலும்.குரானின் முதல் வசனமே " எழுதுகோலை கொண்டு கற்றுக் கொடுப்பது"பற்றித்தான்.அல்லாஹ்வின் வல்லமை குறித்து குரான் சொல்லும்போது உலகில் உள்ளவற்றை வைத்து மையாகக் கொண்டு அல்லாஹ்வின் வல்லமையை எழுதினாலும் எழுதமுடியாது என உவமைபட கூறி அதன் மூலமும் நாம் அல்லாஹ்வின் வல்லமையையும் கல்விக்கு ,எழுத்துக்கு காரணமாக விளங்கும் எழுதுகோல்,எழுத்தாணி,பேனா,அல்லது நவீன மீடியா என்று அதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தி உள்ளதை நாம் காண இயலும்.
இப்படி கல்விக்கு முக்கியத்துவம் கொண்ட நம் மார்க்க மக்கள் எந்தளவுக்கு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என அலசும் பல கட்டுரைகள் நம் அதிரை எக்ஸ்பிரசில் வெளிவந்துள்ளமையினால் அதை பற்றி இங்கு விவாதிப்பதை விட,நம் ஊரில் உள்ள பள்ளிகளின் நிலை( govt schools vs private schools ) என்ன என பார்ப்போம்.(சில தனியார் பள்ளிகளின் அவல நிலை குறித்தும் நிறைய கட்டுரைகள் வந்துள்ளமையினால் அந்த சப்ஜெக்டும் இங்கு வேண்டாம் என எண்ணுகிறேன்)ஆக,மற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்கலாம்.
தனியார் பள்ளிகளில் கல்வித்தரம் நன்றாக இருக்கும் என நம்பித்தான் நம் பிள்ளைகளை சேர்க்கிறோம்.உண்மையில் சொல்லப்போனால் கல்வித்தரம் நாம் எதிர் பார்க்கும் நிலைக்கு இல்லை என்பது மட்டுமல்ல்,யுனிபார்ம் செலவு,கட்டிட செலவு,நோட்டு புத்தக செலவு,என்று நம் மக்களை பணம் பணம் என்று தாளிக்கிரார்களே ஒழிய கல்வியின் தரம் பற்றி எந்த தனியார் பள்ளியும் கண்டுகொள்ளவில்லை,மாறாக,கல்வி மாநாடு என போட்டு,மக்களை திசை திருப்பி விடுகிறார்கள்.குறிப்பிட்ட ஒரு பள்ளியில் படித்த மாணவர்கள் ஏனைய மேல் படிப்புக்கு என சென்னை சென்று அங்கு படிக்க சேரும்போது,அந்த பள்ளியின் நிர்வாகிகள் ஆச்சரியப்படும் அளவுக்கு அந்த மாணவனுக்கு தமிழும் தெரியவில்லை,ஆங்கில மீடியம் என்று சொல்கிறார்கள் ஆனால் ஆங்கிலமும் தெரியவில்லை,சரி போகட்டும் தேசிய மொழி ஹிந்தியாவது தெரியுமா என்றால் அதுவும் தெரியாது.எந்த மொழியில் பயிற்றுவித்தார்கள்
என வியப்பு மேளிடுகிறார்கள்.இதுதான் தனியார் பள்ளிகளின் லட்ச்சனம்.
அதே சமயம்,நம் ஊரில் உள்ள அரசு பள்ளிகளான இரண்டாம் நம்பர்,மேலத்தெரு,கடற்கரை தெரு,வாய்க்கால் தெருக்களில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிக நன்றாக உள்ளதை பலர் மூலம் அறிய முடிகிறது.இப்பள்ளிகளில் வருடத்துக்கு ரூபாய் நூறு மட்டுமே செலவாகும்.அதுவும் வசதி இல்லை என்றால் அதுவும் செலவில்லை.அரசு பள்ளிகள் என்பதால் மாவட்ட கல்வி அதிகாரி அடிக்கடி விசிட் அடித்து கல்வியின் தரம்,ஆசிரியரின் செயல்பாடு,எப்படி கற்று கொடுக்கிறார் என சோதனை செய்கிறார்கள்.இதனால் ஆசிரியர்களும் அரசுக்கு பயந்து நன்கு மாணவர்களை ஊக்குவிக்கிறார்கள்.
தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டு கொள்ளாததன் நோக்கம்,அவர்களை மேனேஜ்மென்ட் கண்டுகொள்வதில்லை என்ற திமிர்த்தனம்.ஆனால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் அரசுக்கு பயந்து உண்மையாக உழைக்கிறார்கள்.
இனி,நாம் தான் சிந்தனை செய்ய வேண்டும்.எது நமக்கு வேண்டும்!
காசைப்பரிக்கும் தனியார் பள்ளிகளா?கல்வித்தரம் கொண்ட அரசு பள்ளிகளா!
தகவல் உதவி:முன்னாள் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள்,அதிரை மற்றும் அப்துல் ஜப்பார் அவர்கள்,நியு யார்க்.
நமக்கு எதையும் மூடிமறைக்கிற பழக்கம் அறவே கிடையாது. கல்புலப் பட்டதைப் பட்டு பட்டுன்னு கேக்கிறதுனால,கடைசில நான் குத்தவாளி ஆயிடுறேன். பொதுவாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தான். விசயத்துக்குப் போவலாம்.
1) போன வருஷம் மெயின் ரோடு அல்அமீன் பள்ளிக்கு இடையூறு செஞ்ச பெரிய மனுசங்களைப்பத்தி
விலாவாரியா பலர் எழுதியிருந்தாங்க.நான்கூட ரெண்டு முணு விருந்தக் கட் பண்ணிட்டு மெனக்கெட்டு எழுதினேன். இப்போது யாருமே அதப்பத்தி வாயைத் திறக்கக் காணோம்!தெரியாமத்தான் கேட்கிறேன், அல் அமீன் பள்ளிவாசல் பிரச்சினை எல்லாம் ஓய்ஞ்சுடுச்சா?
2) நம்மூரு பேரூராட்சியின்
ஊழல்கள்,அதிகார துஷ்பிரயோகம், பாரபட்சம், போன்றவற்றை ஆதாரத்துடன் சிலர் எழுதியிருந்தாங்க; பேரூராட்சி மன்ற பதவியில் இருந்துகிட்டே கூட்டுக் கொள்ளை மற்றும் மணல் கொள்ளை அடித்ததையும் எழுதி இருந்தாங்க. தெரியாமத்தான் கேட்கிறேன் தற்போது, ராஜாமடம் மற்றும் நசுவினி ஆறுகளில் மணல் கொள்ளைகள் முற்றிலும் ஓய்ஞ்சுடுச்சா?
3) அல்-அமீன் பள்ளியின் மெயின் ரோடு வாசலருகில் குப்பை வண்டிகளை நிறுத்தி வச்சு, அத சிலர் உணர்ச்சிவசப்பட்டு கவுத்திப் போட்டதைப் பெரிசு படுத்தி "நொறுக்கி விட்டார்களென்று பொய்வழக்குகள் போடப்பட்டன. அது கிடக்குது சனியன்.
தெரியாமத்தான் கேட்கிறேன் அந்தக் குப்பை அள்ளும் வண்டிகளில் தற்போது அதிரை நகரக் குப்பைகள் அள்ளப்படுகின்றனவா? 
4) அதிரை கிராம நிர்வாக அதிகாரி சட்டை போடாம, சிகரெட் பிடித்துக் கொண்டு பனியனுடன் பணியிலிருந்ததை வீடியோ ஆதாரத்துடன் சில புள்ளைகள் போட்டிருந்தாங்க. (நமக்குத்தான் அந்த மாதிரி செல்போனுக்குக் கொடுப்பினை இல்லாமப் போச்சு.நோக்கியா 3310 ஐத்தான் அஞ்சு வருசமா வச்சிருக்கிறேன்) தெரியாமத்தான் கேட்கிறேன்! "அந்த அதிகாரி இப்போது சட்டை போட்டுக்கிட்டு வேலைக்கி வர்ராரா?
5) தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், கிராணிக் கடைக்கு எதிர்புறம் அமோகமா விற்கப்படுவதை படத்துடன் போட்டிருந்தார்கள். தெரியாமத்தான் கேட்கிறேன் காவல் துறையினர் ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா? அதிரையில் சுரண்டல் லாட்டரி ஒழிக்கப்பட்டு விட்டதா?
6) நடுத்தெருவுல சிஷ்தி-குஷ்தின்னு பலரும் பல்வேறுவிதமாக அலசி எழுதி வருத்தப்பட்டிருந்தார்கள். ஆடிக்கு ஒரக்க அமாவசைக்கு ஒரக்க நம்மூருப் பிரச்சினையைப் பேசுவதோடு நின்றுவிடுவதால் இதுபோன்ற சிஸ்திகள் குஷ்தி போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். உலமாக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்றும் சிலர் கேட்டிருந்தார்கள். சிஷ்திகளுடன் சேர்ந்து குஷ்தி போடாமல் இருப்பதே பெரிய ஒத்தாசை.
(உள்ளூரிலிருந்து கொண்டு ஆள்பலம், பணபலமில்லாத உலமாக்களால், சிஷ்திகள்மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியுமென்று தெரியவில்லை. இருந்தாலும், குத்பா மற்றும் அனைத்து பயான்களிலும் மேற்படி போலிச் சாமியார்களை அடையாளம் காட்டுவதற்கு எக்காரணம் கொண்டும் தயங்கக் கூடாது. ஊர் ஊரா பிரயாணம் செய்து பலஊரு மக்களைத் திருத்திய சிறப்பு நம்ம உலமாக்களுக்கு ஈக்கிது (இருக்கிறது). நம்ம காலடியிலேயே ஒரு கரு(வ) முள்ளு இருப்பதையும் கவனிக்கனும்.அதுமாதிரி இண்டர்நெட், ஈமெயில், ப்ளாக் என்று எழுதிக்கிட்டே இருக்காம அந்தந்த முஹல்லாக்காரவங்க சட்டு புட்டுன்னு முடிவெடுக்கணும்.)
அமெரிக்காச் செல்லத்தான் நமக்குப் பொசுப்பு இல்லே. அமெரிக்காக்காரன் நம்ம நாட்டுக்கே வந்து அணுசக்தி ஒப்பந்தம் போடுறதாலே மத்திய அரசு கலைஞ்சு மறுதேர்தல் வரப்போகுதுன்னு பேசிக்கிடுறாங்க. காங்கிரஸின் கோட்டையாக இருந்த புதுக்கோட்டை தொகுதிக்கு ஹத்தம் ஓதப்பட்டு விட்டது.
இனிமேல் தஞ்சாவூர் தொகுதி அரசியல்வாதிகள் நம்மூருக்கு அடிக்கடி வரக்கூடும்.நாமல்லாம் ஒற்றுமையாக, ஒரே அணியில் இருந்தால் ஊரின் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். குறைந்த பட்சம் அல் அமீன் பள்ளியின் பேரூந்து நிலைய வாசலுக்கான தடையை நீக்க முன்வரும் அரசியல் கட்சிக்கே எங்கள் ஓட்டு என்ற ஒற்றைக் கோரிக்கையை முன் வைத்து எதிர்வரும் நோன்புக்குள் நல்ல தீர்வு காணலாம்.
ஊதுர சங்கை என்னுடய பங்குக்கு ஊதிட்டேன். அப்புறம் என்னை யாரும் குத்தம் சொல்லககூடாது. எனக்கும் வேலைவெட்டி நிறையா இருக்கு. இப்ப கூட அவசரமா விருந்துக்குத்தான் கெளம்பிக்கிட்டிருக்கேன்.
www.ஊர்சுத்தி.உமர்

அதிரை எக்ஸ்ப்ரஸில் நமதூர் குறித்த பல்வேறு விசயங்களுடன் பொது விசயங்களும் மனம்விட்டுப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. பரபரப்புக்காக எதையும் எழுதாமல் உள்ளூர் நடப்புகளை உரிமையுடன் எழுதி உள்ளக் குமுறல்களுக்கு வடிகாலாக அதிரை எக்ஸ்ப்ரஸ் கட்டுரைகளும் அதனுடன் தொடர்புடைய பின்னூட்டங்களும் இருப்பதைக் காண்கிறோம்.
டைரி என்ற பெயரில் ஒரு சகோதரர் அதிரை பைத்துல்மால் குறித்து சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அக்கேள்விகளுக்கு நானறிந்த விளக்கத்தைப் பதிலாக முன்வைக்கிறேன்:
கேள்வி: #1: ஆஸ்பத்திரி தெருவில் இந்த நிர்வனத்திற்கு சொந்தமான போதிய இடவசதியுள்ள அலுவலகம் இருந்தும் நடுத்தெருவில் மீண்டும் எந்தவொரு வருவாயும் இல்லாத மற்றுமொரு அலுவலகம் அமைக்க அவசியமென்ன?பதில்: அதிரை பைத்துல்மால் போன்ற பொது அமைப்புகள் எலோரும் எளிதில் அணுகும் வகையில் ஊரின் மையப்பகுதியில் அமைவது அவசியம் என்பதால் பைத்துல்மாலுக்காக குறைந்த விலையில் நிலம் வாங்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது. கீழ்தளத்தில் அலுவலகமும் மேல்தளத்தில் கணினிப் பயிற்சி மையத்திற்காகவும் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
கணினிப் பயிற்சி மையம் மூலம் கிடைக்கும் வருவாய், பைத்துல்மாலின் திட்டங்களுக்குப் பயனாக இருக்கும் என்ற அடிப்படையில்தான் கணினி பயிற்சி மையத்தையும் அதிரை பைத்துல்மால் ஏற்று நடத்த முன்வந்தது. மேலும்,கண்சிகிச்சை முகாம், வேலைக்கான நேர்காணல் ஆகியவற்றுக்காக வாடகைக்கும் விடப்படுகிறது.
ஆஸ்பத்திரித் ரோட்டிலுள்ள சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வரும் தற்போதைய இடத்திற்கான குத்தகைக்காலம் முடிந்து விட்டதால் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நமதூரில் அரசு அலுவலகத்திற்கு மக்கள் புழங்கும் இடத்தில் நிரந்தர இடம் கிடைக்காத காரணத்தால் அருகிலுள்ள கிராமத்தினர் இடம்தர முன்வந்தனர்.
அதிரைப் பொதுமக்கள் பயன்படுத்தும் அரசு அலுவலகம் இடம்பெயர்வதால் நமக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு நேர,பொருள் விரயத்தைத் தவிர்க்க வேண்டியும் சார்பதிவாளர் அலுவலகத்தை நமதூரில் தக்க வைக்க அதிரை பைத்துல்மாலின் முயற்சியாகவே ஆஸ்பத்திரித் தெரு மிகுந்த சிரமத்திற்கிடையில் கட்டிடம் கட்டப்பட்டது.
பெரும்பாலோரின் சொத்துக்கள் பெண்கள் பெயரிலேயே இருக்கின்றன.பலர் வெளிநாட்டில் பிழைப்புக்காக அதிக காலம் தங்கி விடுவதால், சொத்துக்கள் வாங்கல்/விற்றல் தொடர்பாக பெண்கள் நேரடியாக ஆஜராக வேண்டியுள்ள அதிரை பத்திரப்பதிவு அலுவலகம் இடம் பெயர்வதால் மிகுந்த சிரமமும் பாதுகாப்பின்மையும் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, வாடகைக்கு பத்திரப்பதிவு அலுவலகமும வருமானத்திற்கு வணிக வளாகமும் கட்டப் பட்டுள்ளது.
மட்டுமின்றி, வட்டியில்லாக் கடன் உதவிக்கு நன்கொடைகள் தவிர கடன் வழங்கும் செல்வந்தர்களுக்கு உத்திரவாதமாக அதிரை பைத்துல்மால் நிலையானச் சொத்துக்களைக் காட்ட வேண்டியது அவசியம் என்பதால் பல்லாவரம் மற்றும் நடுத்தெரு, ஆஸ்பத்திரித் கட்டிடங்கள் நிலையான சொத்துக்களாக இருப்பதன் மூலம் கடன் கொடுப்பவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுகிறது.
கேள்வி # 2: புதிதாக இஸ்லாத்தை தழுவி நமது ஊருக்கு வரும் சகோதரர்களுக்கு சிறு வியாபாரம் தொடங்குவதற்கு கூட எந்தவொரு நிதியுதவி செய்வதற்கு எந்தவொரு தொண்டு நிர்வனமும் முன் வருவதில்லை என மரைக்கா பள்ளியில் கூடும் இளம் உலமாக்களின் கேள்விகளுக்கு நிர்வனத்தாரின் பதில் என்ன?
பதில்: பைத்துல்மாலுக்குக் கிடைக்கும் நிதியுதவிகளை மார்க்கம் அனுமதித்த வகையில் பங்கிடப்பட்டு, ஆண்டு முழுமைக்கும் திட்டமிடப்பட்டு சேவைகள் அமைந்துள்ளன. அவ்வாறே அந்தந்த திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகைகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இதனால் புதிய மற்றும் திடீர் திட்டங்களுக்கு உடனடியாகக் கடன் வழங்க முடிவதில்லை என்பதே நிஜம்.
மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட வட்டியில்லாக் கடன்களும் தாமதமாக திருப்பிச் செலுத்தப்படுவதால் வரிசைப்படியும், தேவையின் தன்மையைப் பொருத்தும் மீண்டும் கடனாகவே வழங்கப்பட்டு விடுகிறது. அவற்றில் அதிரைவாசிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் பிற ஊர் மக்களுக்கு உதவுவதில் சிரமம் ஏற்படுகிறது. இருந்தாலும், நிர்வாகிகளின் சிறப்பு வசூல் மூலம் அவசியத் தேவையுள்ளவர்களுக்கு அவ்வப்போது கடனாக அல்லது நன்கொடையாக உதவிகள் செய்யப்பட்டு வருவதை மாதாந்திர அறிக்கை மூலம் அறியலாம்.
கேள்வி # 3: வட்டியில்லா கடன் மூலம் நகை அல்லது சொத்துக்களின் மீது கடன் வழங்கும் அதிரை பத்துல்மால் எந்தவொரு வசதியில்லாத ஏழைகளுக்கு பரம்பரை பரம்பரையாக நமதூர் மண்ணில் வாழ்ந்து வரும் குடும்பத்தாருக்கு கடன்கொடுக்க மறுப்பது ஏன்?முந்தைய கேள்விக்கான பதில் இதற்கும் பொருந்துகிறது. கடனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையோ அல்லது திரும்ப வசூலிக்கப்பட்ட கடன்களோ இருப்பிலிருந்தால் உடனடியாக மீண்டும் கடனாகவே வழங்கப் படுகிறது.
முன்பு வட்டியில்லாக் கடனுக்கு எதையும் அடமானமாகப் பெறாமலேயே வழங்கப்பட்டு வந்தன. கடன் பெற்றவர்கள் பொறுப்பாகத் திரும்பச் செலுத்த வேண்டும் என்ற நோக்கில், குறைந்தபட்சம் நகையை அடமானப் பெற்று வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது. பாதுகாப்புப் பெட்டக வசதிக்காக உபரிச் செலவு ஏற்பட்டாலும் கடனாளிகள் ஒப்புக் கொண்ட காலத்திற்குள் திருப்பி அடைக்க வேண்டும் என்பதால் நகை அடமானத்தின் பேரில் கடன் கொடுக்கப்படுகிறது.
பைத்துல்மாலின் முஹல்லாவாரியான பொறுப்பாளர்களின் சிபாரிசுகளின் பேரிலேயே வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்படுகின்றன. கடனாளிகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டாலும் வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது.
கேள்வி # 4: வட்டியை ஒழிப்பதற்காக தொடங்கப்பட்ட இந்நிர்வனம் இருந்தும் புதுக்கோட்டையிருந்து வரும் ஃபைனான்சியர்கள் சுவற்றின்மீது ஏறி நமது சகோதிரிகளிடம் வட்டியை வசூல் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டக் காரணம் என்ன?இதைப்பற்றிய உங்களுடைய ஆய்வு அல்லது சொலூஷன்/ கன்குலூஷன் தான் என்ன?பதில்: மார்க்கம் தடுத்திருக்கும் வட்டியின் தீங்குகளை அறியாமல், வட்டிக்கு பிற வழிகளைக் சம்பந்தப்பட்ட மக்கள் கையால்வதால் ஏற்படும் விளைவை பைத்துல்மால்மீது சுமத்துவதில் நியாயமில்லை. வசதியுள்ளவர்கள் பைத்துல் மாலின் நற்பெயரையும் சேவைகளையும் கருத்தில் கொண்டு தங்கள் இருப்புகள்/சேமிப்புகளைக் கொடுத்துதவினால் இத்தகைய அவலங்களைத் தவிர்க்கலாம்.
அதிரை பைத்துல்மாலின் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வட்டியில்லாக் கடன் திட்டத்திற்கு நமதூர்வாசிகளில் வசதி உள்ளவர்கள் தலா ஆயிரம் ரூபாய் வீதம் சந்தாவாக ஒரேயொரு முறைச் செலுத்தினாலே போதும் இன்ஷா அல்லாஹ் தேவையுள்ள அதிரைவாசிகள் அனைவருக்குமே வட்டியில்லாக் கடன் கொடுத்து உதவலாம்.வெளிநாடுவாழ் அதிரைவாசிகள் முன்வந்தால் இத்திட்டம் இன்ஷா அல்லாஹ் விரைவில் சாத்தியப்படும்.
கேள்வி #5:அதிரை பைத்துல்மாலின் ஆண்டு வரவு சிலவு அறிக்கை, நீங்கள் செய்துவரும் நற்காரியங்கள் என்ன, அடுத்தக்கட்ட திட்டங்கள் என்ன போன்ற விபரங்கள் எந்த இணையதலத்தில் பதியப்பட்டுள்ளது அல்லது ஆண்டு அறிக்கை புத்தகமாக வெளியிடப்படுகிறதா என்பதை தெரியப் படுத்தினால் என்னை போன்று கேள்வி எழுப்புவோர்களுக்கு உங்களுடன் சேர்ந்து நற்காரியங்களில் ஈடுபடுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!பதில்: பைத்துல்மாலின் சாதனைகளைப் பட்டியலிட்டு சென்ற வருடம் சுற்றறிக்கையாக துபையில் வெளியிடப்பட்டது. மேலும் மாதாந்திர அறிக்கைகள் ஈமெயில் மூலமும் இணைய தளம் வாயிலாகவும் வெளியிடப்படுகிறது. ஓரிரு வருடங்களுக்கு முன்னர் அதிரை பைத்துல்மாலின் சாதனைகளைப் புத்தகமாக வெளியிட்டார்கள்.
அதிரை பைத்துல்மால் உள்ளூர் அலுவலகத்திற்கு நிலையான, முழுநேர அலுவலர் கிடைக்காதக் காரணத்தால் அறிக்கை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் அடுத்தடுத்த மாதங்களில் ஈமெயில் மூலம் அந்தந்தக் கிளை நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் முதல் அல்லது இரண்டாவது வெள்ளிக்கிழமை துபை டேரா கோட்டைப் பள்ளியில் நடைபெறுகிறது. கிளை பொறுப்பாளர்களை அணுகி அவ்வப்போதைய செயல்பாடுகளையும் திட்டங்களையும் அறிந்து கொள்ளலாம்.
பொறுப்பாளர்களின் செல்பேசிகள் பைத்துல்மால் இணைய தளத்தில் கிடைக்கின்றன.மேலும்,அதிரை பைத்துல்மாலுக்கு நேரடியாக,தொலைபேசி,ஈமெயில் மூலம் அணுகினாலும் தேவையான விளக்கங்கள் கொடுக்கப்படும்.
அன்புடன்,
அதிரை பைத்துல்மால் துபை கிளை சார்பில்
<<<அபூஅஸீலா-துபாய்>>>