
வக்கீல், வக்காலத் ஆகிய இருசொற்களுமே அரபு/பாரசிகம் மொழியிலிருந்து நம் நாட்டிற்கு மொகலாயர் கொண்டுவந்தாகள். சட்டம் ஒரு இருட்டரை என்று மேல்நாட்டு அறிஞன் சொன்னதை மறுத்து "சட்டம் ஒரு இருட்டரை; வக்கீலின் வாதம் ஒளிவிளக்கு" என்றார் அறிஞர் அண்ணா. நாளடைவில் அறிஞர் அண்ணா "சட்டம் ஒரு இருட்டரை" என்றதாக மக்கள் புரிந்து கொண்டார்கள்!
கல்வியாளர்களும் கல்விக்கூடங்களும் நிறைந்துள்ள நமதூரில் கடந்த 10-20 ஆண்டுகளில் சொல்லிக் கொள்ளும்படியாக யாரும் வழக்குரைஞர்/வக்கீல் பட்டம் பெற்றதாக அறியமுடிவதில்லை. நானறிந்து மாண்புமிகு. A.J.அப்துல் ரஸ்ஸாக் காக்கா, A.S.M.அபுல்ஹசன் காக்கா, சகோதரர் அப்துல் முனாப் (பைத்துல்மால்) தவிர்த்து புதிதாக யாரும் வக்கீல் பட்டம் பெற்றதாகவோ அல்லது சட்டத்துறை பயின்றதாகவோ அறியமுடியவில்லை. (அனேகமாக இவர்கள் தவிர்த்து ஓரிருவர் இருக்கக்கூடும்; இருப்பின் பின்னூட்டத்தில் அறியத்தரவும்)
"வக்கீலுக்குப் படித்தால் பொய்சொல்ல வேண்டும்" என்ற அபிப்ராயம் நம் மக்கள் மட்டுமின்றி பரவலாகவே இருந்தது. B.COM படித்தால் வங்கிகளில் வட்டிக் கணக்கு மட்டுமே எழுதவேண்டிவரும் என்பது எப்படி தவறானதோ அது போன்றே இதுவும் தவறான அபிப்ராயம்.
வக்கீல் தொழிலில் பொய்களைச் சொல்வதைவிட உண்மையாக வாதிட்டு நீதி பெறலாம் என்று நேர்முகமாகச் (POSITIVE) சிந்தித்தால் இது விளங்கும். வக்கீலாக இருப்பதால் ரவுடிகள், போலீஸ் என பலரும் தேடி வருவார்கள். அக்கம்பக்கத்தினர் தவறாகப் பேசுவார்கள். பாதிக்கப்பட்டவரை பகைத்துக் கொள்ள வேண்டிவரும் என்றெல்லாம் நினைக்கிறார்கள். இதுவும் தவறு. இன்று நாம் வாழும் சமூகத்தில் இவர்கள் தவிர்க்கமுடியாதவர்கள். யாராக இருந்தாலும் அறிவுப்பூர்வமான அணுகுமுறையினால் எதிர்கொள்ளலாம்.
சட்டப்படிப்புடன் தொடர்புடைய எதேனும் ஒரு டிப்ளமோ படித்து கம்பெனி செகரட்டரி, சட்ட ஆலோசகர் போன்ற பணிகள் செய்யலாம். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இதற்கு வாய்ப்புண்டு. உதாரணமாக சட்டப்படிப்புடன் சர்வதேச வர்த்தகம் குறித்த பட்டயப்படிப்பை படிக்கலாம்.
மேலும் சொத்து வாங்கல் விற்றல் தொடர்பான ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம். உலகலாவிய அளவில் இத்தொழிலுக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் உள்ளூரிலேயே இத்தொழிலுக்கு நல்ல வாய்ப்புண்டு. மேலும் குடும்பத்திற்கு ஒருவர் சட்டம் தெரிந்தவராக இருப்பது சாலச்சிறந்தது. வருங்காலத்தில் MLA, MP ஆகவும் சட்டப்படிப்பு அவசியமாகலாம். யார் கண்டார்?
ஆக, வக்கீலுக்குப் படித்தால் பொய் சொல்லியே ஆக வேண்டும் என்ற மூடநம்பிக்கையை ஒழித்து நேர்மையாகவும் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணத்தை வளரும் தலைமுறையினரிடம் விதைப்போம். இதற்கான சிந்தனையை மாணாக்கர்களிடம் வளர்க்க நமதூர் கல்விக் கூடங்களில் சட்டத்துறை வல்லுனர்களை வரவழைத்துக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்து மாணாக்கர்களை ஊக்குவிக்கலாம்.
அபூஅஸீலா-துபாய்
****************
ஆட்டோவிற்குப் பதிலாக சிற்றூந்து (MINIBUS) ஆலோசனை குறித்தப் பதிவுக்கு துபாயில் இருப்பதால் பதிவில் பின்னூட்டமிட முடியவில்லை.
அருமையான யோசனை. நமதூரின் எல்லைகள் விரிவடைந்து ஜும்ஆப் பள்ளிகளும் திசைக்கு ஒன்றாக ஆனபோது இதுபோன்ற பேரூந்துச்சேவை இருந்தால் உச்சிவெயிலில் முதியவர்களும், சிறார்களும் ஜும்ஆ சென்றுவர நன்றாக இருக்குமே என்று நினைத்ததுண்டு.
அதிரை எக்ஸ்ப்ரஸ் மற்றும் AWC-யில் கருத்துப்பரிமாற்றங்கள் செயல் படுத்தப்படாமலேயே நின்றுவிடுகின்றன. நல்ல சிந்தனையாளர்களும் செல்வந்தர்களும் ஒருங்கிணைந்தால் இதுபோன்றத் திட்டங்களை ஊர் நலனுக்காகச் சிறப்பாகச் செய்யமுடியும்.
பொருளாதார அளவில் இது சாத்தியமானத் திட்டமே. பைத்துல்மாலின் ஆம்புலன்ஸ் மிகுந்த செலவு வைப்பதாக இருப்பதால் புதிய ஆம்புலன்ஸ் வாங்கத் திட்டமிட்டுள்ளார்கள். எனவே இதை AYDA அல்லது ARDA செய்வதே சிறந்ததாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். வெளிநாடுவாழ் அதிரைவாசிகள் இத்திட்டத்தை பங்கு அடிப்படையில் செய்ய முடியுமா? என்று தெரிவித்தால் துபாய்வாழ் அதிரைவாசிகளிடம் இதுகுறித்துக் கலந்து ஆலோசிக்க முடியும்.
அபூஅஸீலா-துபாய்
மதரஸதுந்நூர் என்ற பெயரில் பெண்கள் மதரஸா
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் பேரருளால் நமதூர் சின்ன நெசவுத்தெருவில் மரைக்கா பள்ளி அருகில் மதரஸதுந்நூர் என்ற பெயரில் பெண்கள் மதரஸா கடந்த 08/10/08 அன்று துவங்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை அனுப்பி தீனை கற்றுக் கொடுத்து பயனடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வகுப்பு நேரம் :
சிறு பிள்ளைகளுக்கு பள்ளி மதரஸா மற்றும் மார்க்க விஷயங்கள்
காலை 6. மணி முதல் 7.30 வரை
மாலை 4.30 மணி முதல் 5.30 வரை
பெரிய பிள்ளைகளுக்கு குர் ஆன் பயிற்சி,ஹதீஸ் மனனம், கொள்கை விளக்கங்கள் மற்றும் மார்க்க சட்டத்திட்டங்கள்
காலை 9 மணி முதல் 12.30 வரை
மாலை 2 மணி முதல் 4.30 வரை
தொடர்புக்கு
9840383564
இப்படிக்கு
நிர்வாகம்
மதரஸதுந்நூர் அதிரை.
அறிவு என்பது பார்த்து கேட்டு படிக்கும் அனுபவங்களில் கிடைத்து விடுகிறது. ஆனால் ஞானமோ முயற்ச்சியும் ஆராய்ச்சியும் உடையவர்களுக்கே கிடைக்கிறது. எந்த ஒரு துறை முன்னோடியும் அதற்குமுன் அந்த அறிவை பெற்றவரில்லை. தாமஸ் ஆல்வா எடிசன் எண்ணை விளக்கை வைத்துக் கொண்டுதான் மின் விளக்கை கண்டுபிடித்தார்.
முழுமையான ஞானம் இறைவனின் புரத்திலிருக்கிறது. அவனே அதன் மறைவான வாசல்களை திறந்து விடுகிறான். இறைவனே மனிதனுக்கு கற்றுக் கொடுத்தான். ஞானத்தை தேடிக் கொள்பவர்கள் இறைவனுக்கு பிரியமானவர்களாயிருக்கிறார்கள்.
நாம் விரும்பும் எந்த ஒரு நன்மையையும் அடைய முதலில் அதைப்பற்றி கனவு காண வேண்டும். பிறகு அதற்காக உழைக்க வேண்டும். நமது இலட்சியத்தை நிர்ணயித்து விட்ட பின் நமது சொல் செயல் எண்ணம் யாவுமே நமது இலட்சியத்தோடு இணைந்திருக்க வேண்ட்டும்.
இரண்டடி எடுத்து வைத்தாலும் இலட்சியத்தை நோக்கியே நடக்க வேண்டும்.
நல்லது. இப்போது ஐ பி எஸ் ஐ ஏ எஸ்ஸை நமது இலட்சியமாக நிர்ணயித்துக் கொண்ட பின் அந்தத் தேர்வில் எப்படி நடத்தப்படுகிறது என்பதை பார்ப்போமா..
ஐ பி எஸ் ஐ ஏ எஸ் தேர்வுக்குள் நுழைய முதலில் யூ பி எஸ் சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வை வெல்ல வேண்டும். இது ஒரு பொதுத்தகுதித்தேர்வு(நுழைவுத்தேர்வு). இதில் வெல்வதற்கு முதலில் இந்த தேர்வு எப்படி நடத்தப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன் சில கேள்விகளுக்கு விடை காண்போமா..
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
மிக சுலபம். இதற்கான விண்ணப்பமும் தகவல் புத்தகமும் நாட்டின் அணைத்து தபால் நிலையங்களிலும் கிடைக்கும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை:
Secretary,
Union Public Service Commission,
Dholpur House,
New Delhi - 110011.
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாமா? அதற்க்கு தகுதி ஏதாவது வேண்டுமா?
கீழ்க்காணும் தகதிகள் பெற்ற எவரும் விண்ணப்பிக்கலாம்:
கல்வித்தகுதி:
இந்தியப்பல்கலைக்கழகம் ஏதாவதொன்றில் பட்டப்படிப்ப அல்லது அதற்கு நிகரான படிப்பு. (பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்)
இதர தகுதிகள்:
இந்தியக் குடியுரிமை. (இன்னும் சில அண்டைநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)
ஆகஸ்ட் முதல் தேதியில் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். மேலும் முப்பது வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதிகள் உள்ள யாவரும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு எப்போது நடத்தப்படுகிறது?
தேர்வு அறிவிப்பு (துறைகள் மற்றும் பாடத்திட்டம்) எம்ப்ளாய்மென்ட் நியூஸ், ரோஸ்கர் சமாச்சார், கெஜட் ஆஃப் இன்டியா மற்றும் சில முக்கிய நாளிதழ்களில் டிஸம்பர் மாதத்தில் வெளியாகும். இந்த அறிவிப்பை ஒரு நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
முதற் கட்ட தேர்வுகள் மே- ஜுன் மாதங்களிலும் முக்கியத்தேர்வு அக்டோபர்- நவம்பர் மாதங்களிலும் நடக்கும். (முதற்கட்ட முக்கிய தேர்வுகள் என்றால் என்ன என்பதை பிறகு பார்க்கலாம்)
ஒரே முயற்சியில் தேறுவது கடினம் என்றால் எத்தனை முறை விண்ணப்பிக்கலாம்?
பொதுவாக ஒவ்வொருவரும் நான்கு முறை முயற்சிக்கலாம்.
தேர்வு எங்கெங்கு நடத்தப்படுகிறது?
சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்படுகிறது.
அடுத்து தேர்வு முறை பற்றி பார்க்கலாம்.
இது ஒரு கடினமான கட்டம். ஓராண்டு காலம் நீடிக்கும் தேர்வு. எனவே முதலில் தேர்வு முறையை புரிந்து கொள்வது நலம்.
மே ஜுனில் நடக்கும் முதற்கட்ட தேர்வு இரண்டு பேப்பர்களை கொண்டது.
பொதுஅறிவு (150 மதிப்பெண்கள்)
விருப்பப் பாடங்கள் (300 மதிப்பெண்கள்)
இது நுழைவுத்தேர்வு போன்றது. ஏராளமான விண்ப்பதாரர்களிலிருந்து தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் தகுதித்தேர்வு மட்டுமே. இதன் மதிப்பெண்கள் அடுத்த கட்ட முக்கியத்தேர்வு மதிப்பெண்களோடு சேர்த்துக் கொள்ளப்படாது.
பொது அறிவு மற்றும் விருப்பப் பாடங்கள் என்றால்..
பொது அறிவு தேர்வில் கீழ்காணும் விஷயங்கள் குறித்த கேள்விகள் இடம்பெறும்:
இந்திய அமைப்பு மற்றும் பொருளாதாரம்.இந்திய வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்ட வரலாறு.இந்திய மற்றும் உலக புவியியல்உள்நாட்டு வெளிநாட்டு தற்போதைய நிகழ்வுகள்.தினசரி பொது அறிவியல்புத்தி சாதுர்யம் மற்றுமம் புள்ளிவிபரம்.
இது தவிர..
திட்டம், பட்ஜெட், நலத்திட்டங்கள், அரசியல் நடவடிக்கைகள் ஆட்சிப் பொறுப்பு கிராம நிர்வாக அமைப்பு, தேர்தல் முறை, இயற்கை வளம், பண்பாடு, வளர்ச்சி விகிதம், கழகங்கள் கமிஷன்கள் முதலியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
பாடத்திட்டம் அதிகமாகவும் சிக்கலாகவும் இருந்தாலும் சுலபமாக தயார் செய்து கொள்ளலாம்.
விருப்பப்பாடத்தில்..
விவசாயம், கால்நடை வளர்ப்பு, தாவரவியல், வேதியியல், சிவில்,மெக்கானிகல், எலக்ட்ரிகல் இஞ்சினியரிங், வணிகவியல், பொருளியல், புவியியல், வரலாறு, சட்டம், கணிதம், மருத்துவம், தத்துவம், இயற்பியல், அரசியல் அறிவியல், மனோதத்துவம், பொது மேலாண்மை, சமூகவியல், புள்ளியியல், விலங்கியல்.
உள்ளிட்ட துறைகளில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
ஐ ஏ எஸ் தேர்வை சந்திக்க நீங்கள் ஒரு பட்டதாரியாக இருப்பது அவசியம். விண்ணப்பிக்கும் எவரும் தாங்கள் பட்டம் பெற்ற துறையில்தான் ஐ ஏ எஸ் படிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. நீங்கள் விரும்பும் எந்தத்துறையையும் உங்கள் விருப்பப் பாடமாக எடுக்கலாம்.
இந்த முதல் கட்ட தேர்வை வெற்றிகரமாக எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்க வேண்டும். முடிவுகள் ஜுலை-ஆகஸ்ட் மாதங்களில் தெரிந்துவிடும். இதில் தேறியவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவீர்கள்.
அடுத்த கட்ட மெயின் எக்ஸாம் ஒன்பது தாள்களை கொண்டது.
1. இந்திய மொழி தகுதித் தேர்வு (கட்டுரை) – 300 மதிப்பெண்கள்
2. ஆங்கிலப் புலமைத் தேர்வு – 300 மதிப்பெண்கள்
3. பொது கட்டுரை தேர்வு (200 மதிப்பெண்கள்)
4. இரண்டு பொது தேர்வுகள் (600 மதிப்பெண்கள்)5. நான்கு விருப்பப் பாடங்கள் (1200 மதிப்பெண்கள்)
இந்த முதல் மற்றும் அடுத்த கட்ட தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை http://www.civilserviceindia.com/ என்ற இணையதளத்தில் காணலாம்.
இவ்விரண்டு தேர்வுகளையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு நேர்காணலுக்கு செல்ல வேண்டும். இந்த இன்டர்வியூவில் உங்கள் ஆளுமை மற்றும் அறிவுக்கூர்மை ஆகியவை சோதிக்கப்படும். பொதுவாக இன்டர்வியூக்களில் அந்தந்த வேலைகளுக்கு நீங்கள் தகுதியானவர்தானா என்று சோதிப்பார்கள். ஆனால் ஐ ஏ எஸ் தேர்வின் இன்டர்வியூவில் அந்தப்பனி உங்களுக்கு ஏற்றதா என்று சோதிக்கப்படும். முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்வுகள் உங்கள் விசாலமான அறிவை ஏற்கெனவே நிரூபித்து விட்டதால் இந்த இன்டர்வியூவை சந்திக்கும் மனதிடம் உங்களுக்கு ஏற்கெனவே வந்திருக்கும். எனவே மிகுந்த தன்னம்பிக்கையுடன் இதை நீங்கள் எதிர் கொள்வீர்கள்.
உங்கள் ஆளுமை மற்றும் அறிவால் உங்களை நேர்காண்பவரை கவர்ந்துவிட்டால் நீங்களும் ஒரு வெற்றியாளரே.
கடும் உழைப்பும் விடாமுயற்சியும் மனோதிடமும் கொண்டு சவால்களை சந்திக்கும் இந்த ஓராண்டு கால படிப்பும் தேர்வும் ஒரு வெற்றிகரமான முடிவுக்கு வருகிறது.
அதன் பிறகு உங்கள் இலட்சியப்படி ஐ ஏ எஸ்ஸையோ ஐ பி எஸ்ஸையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
இனி..
இந்தத் தேர்வுகளுக்காக எப்படி நம்மை தயாரித்துக் கொள்வது என்பது பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
ஆக்கம்:அபூஸமீஹா
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும். தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாய் வசிக்கக்கூடிய ஒரு சில ஊர்களில் அதிரையும் ஒன்று. பொருளாதார நல்வாழ்வுக்கோ பொழுதுபோக்கிற்கோ ஏற்றதாக அமையக்கூடிய எந்த ஒரு ஊருக்கும் சிறப்பும் முக்கியத்துவமும் எப்படியோ வந்து சேர்ந்து விடுகிறது. சிறப்புடைய ஊர்களில் வாழ்வதையே பெருமையாக கூறிக்கொள்ளும் மக்கள் வாழக்கூடிய இந்நாட்டில்தான் சிறப்புக்குறிய மக்கள் வாழ்வதை ஊருக்கே பெருமையாகவும் கூறிக்கொள்கின்றனர். பல நூற்றாண்டு பாரம்பரியமிக்க அதிரைகென்று ஏதாவது சிறப்புள்ளதா? அதிரையில் வாழ்வதில் ஏதும் பெருமையிருக்கிறதா? அல்லது பெருமைக்குரிய மக்கள் யாராவது அதிரையில் வாழ்ந்தனரா? வாழ்கின்றனரா? கடந்த காலத்தை பின்நோக்கிப் பார்க்கும்போது எம் கே எம் நிறுவனத்தின் கல்வி அறக்கட்டளை மட்டுமே அதிரைக்கு சிறப்பு சேர்க்கும் வண்ணம் தெரிகிறது. இவ்வறக்கட்டளையின் சமகாலத்தில் துவங்கப்பட்ட பல கல்விச்சாலைகள் இன்று பல்கலைக்கழக அந்தஸ்தில் உயர்ந்துள்ளன. ஆனால் அதிரையிலோ இன்னும் கல்லூரியே முழு வளர்ச்சியடையாத நிலையிலிருக்கிறது. இது ஒருபுறமிருக்க இக்கல்வி நிறுவனத்தில் பயின்ற உள்ளூர்வாசிகள் யாராவது நாடறிந்த பெரிய பதவிகளை வகித்துள்ளார்களா? பெரும்பதவிகளை விடுங்கள் குறைந்த பட்சம் எத்தனைபேர் அரசுத்துறைகளில் அதிகாரிகளாகப் பணியாற்றுகின்றனர். அதையும் விடுங்கள் அரசு ஊழியர்கள்தான் எத்தனை பேர்? எண்ணிப்பார்த்தால் வருத்தமே மிஞ்சுகிறது. பாரம்பரியமிக்க இவ்வூரில் அத்தகுதிகள் யாருக்கும் இல்லையா என்றால் நிச்சயம் இருக்கிறது. ஆனால் அரசுப்பதவிகளை யாரும் பெரிதென நினைப்பதில்லை.
முன்பு வளைகுடா நாடுகளிலும் இன்று அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் புழங்கும் செல்வத்தை தேடி ஓடும் நம் மக்கள் இந்தியாவில் செழிக்கும் செல்வத்தை அறிவதில்லை. நூறு கோடி மக்களில் முதியோர் பெண்கள் குழந்தைகள் என்று முக்கால் கோடியை கழித்தாலும் மீதி கால் கோடிப்பேர் இங்குதானே சம்பாதிக்கின்றனர். அத்தனை பேருமா வெளிநாட்டுக்கு ஓடுகின்றனர். உள்நாட்டிலேயே அவர்கள் உழைத்து தொழில் செய்து உலக வரிசை செல்வந்தர்கள் ஆகவில்லையா? ஒவ்வொரு சமுதாயத்துக்கும் இந்நாட்டில் ஒரு அடையாளமும் அங்கீகாரமும் இருக்கின்றது. அதைக்கொண்டு அச்சமுதாயங்கள் நாட்டின் வளத்தில் தங்கள் பங்கை அனுபவிக்கின்றனர். அதற்க்கு வாய்ப்பளிக்கவும் வழிகாட்டவும் அரசு நிர்வாகத்தில் அச்சமுதாயத்திலிருந்து அறிவும் திறமையுமுள்ளவர்கள் பங்காற்றுகின்றனர். அடையாளமோ அங்கீகாரமோ இல்லாத ஒரு சமுதாயம் உண்டென்றால் அது தமிழக முஸ்லிம் சமுதாயம்தான். வாழ்வாதாராங்கள் குறைந்த முஸ்லிம் ஊர்களில் அன்றாட உணவுக்கே அல்லாடுபவர்களை விட்டுவிடுவோம், குடும்பத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்தி பணம் தேடிச்சென்ற தற்கால முதல் தலைமுறையையும் விட்டுவிடுவோம், ஆனால் இரண்டு மூன்று தலைமுறைக்கு சொத்திருக்கும் குடும்பத்தினர் கூட வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்க என்ன அவசியம் வந்தது? தன்நிறைவடைந்த குடும்பங்களில் கூட உயர் கல்வியும் உயர்பதவியும் அடையவேண்டும் என்ற ஆசை இல்லையே. கடந்த இருபத்தைந்தாண்டுகளில் அதிரை எத்தனையோ மடங்கு முன்னேறியிருக்கிறது.
மக்கள் கூடி அரட்டையடிக்கும் செக்கடி மேடு கமால் கடை கார்னர் தற்போது வண்டிப்பேட்டை போன்ற பகுதிகளில் எங்காவது என்றாவது உயர்கல்வி உயர்பதவி என்ற வார்த்தை புழங்கியிருக்கிறதா? அமெரிக்காவுக்கு எவ்வளவு ஆஸ்திரேலியாவுக்கு எவ்வளவு என்ற கணக்குகள்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. எந்த ஒரு விஷயமும் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட வேண்டும். அதை யாராவது முதலில் செய்ய வேண்டும். அப்போதுதான் மற்றவர்களும் அதை பின்பற்ற நினைக்கிறார்கள். முன்பு மன்னடியில் ஒருவர் லுங்கி கடை வைத்தால் ஆறுமாதம் கழித்து பார்த்தால் ஒரு நூறு பேராவது லுங்கி வியாபாரத்தில் நுழைந்திருப்பார்கள். இப்படியே டிராவல்ஸ் எண்ணெய் கடை என்று சொல்லிக் கொண்டே போகலாம். அது போன்ற ஒரு தூண்டுதலை ஏற்படுத்தவே இந்தக் கட்டுரை.
நமது தாய் தந்தையரைப் போலல்லாமல் நம் சமுதாயத்தின் மூத்த தலைமுறை இளைஞர்களாவது தமது தம்பி தங்கை மகன் மகள் ஆகியோரை ஐ ஏ எஸ், ஐ பி எஸ் போன்ற பெருமைக்குறிய மனிதர்களாக்கி அதிரைக்கு பெருமை சேர்க்க முன் வர வேண்டும். ஐ ஏ எஸ் என்றால் என்ன? ஐ பி எஸ் என்றால் என்ன? அதன் சிறப்புகள் என்ன? ஐ ஏ எஸ் - இந்தியன் அடமினிஸ்ட்ரேஷன் சர்வீஸ் (இந்திய மேலாண்மை பணி) ஐ பி எஸ் - இந்தியன் போலீஸ் சர்வீஸ் - (இந்திய காவல்துறை பணி) இந்த பதவிகளை வகிப்பதன் மூலம் நீங்கள் அரசாங்கத்தில் ஒரு அங்கம் ஆவீர்கள். சாதாரண பொதுமக்கள் அரசு நிர்வாக முறைகள் தெரியாமல் விளங்காமல் வெளியிலிருந்து அங்கலாய்கிகின்றனர். ஆனால் நீங்கள் அரசு நிர்வாகத்தின் உள்ளே நுழைகிறீர்கள். நடைமுறைகள் திட்டங்கள் சலுகைகள் உட்பட எல்லாவற்றையும் அறிந்து அலச முடியும். இன்னும் சொல்லப்போனால் ஆட்சியும் அதிகாரமும் கொண்டு 'YOU CAN CHANGE THE SYSTEM..!' (பஞ்சாயத்து போர்டு உறுப்பினர் பதவிக்கு முட்டி மோதும் நம் மக்கள் அதைத்தான்டி ஏன் யோசிப்பதில்லை?) எத்தனை அரசு நலத்திட்டங்கள் நம் மக்களை சென்றடைந்துள்ளன. அரசின் உதவி தேவையில்லாத அளவுக்கா நம் மக்கள் தன்னிறைவடைந்து விட்டனர். வங்கிக்கடன் கல்விக்கடன் விவசாய மானியம் பெற்றவர்கள் நம்மில் எத்தனைபேர்? இதை பற்றிய அறிவாவது நமக்கு இருக்கிறதா? நம்முள் ஒருவராவது அரசு இயந்திரத்தின் ஒரு அங்கமாக இருந்தால் இந்த சலுகைகளின் பலன்கள் நம்மை வந்து சேராதா? ஐ பி எஸ் பதவியும் காவல் துறையில் மதிப்பு மிக்க தகுதியாகும். இத்துறையில் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள பதவிகளில் பெரும்பாலும் ஐ பி எஸ்களே அமர்த்தப்படுகிறார்கள். நூற்றுக்கணக்கான இஞ்சினியர்களும் டாக்டர்களும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளும் நிறைந்த அதிரையில் ஒரே ஒரு போலீஸ் அதிகாரியாவது இருக்கின்றாரா? அட கைசேதமே..! போலீஸாரின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் அடக்குமுறைக்கும் அதிரை மக்கள் எத்தனை முறை ஆளாகியிருக்கிறோம்? சந்தேக கேஸ் தொடங்கி கலவர கேஸ் முதல் தீவிரவாதம் வரை எத்தனை குற்றச்சாட்டுகள்? ஏன்? எதற்கு? எப்படி? என்று ஏதாவது தெரியுமா? (இது தொடர்புடைய துறையான சட்டத்துறையிலும் நமது சார்பாக எந்தப்பங்களிப்பம் இல்லாமல் போனது துரதிஷ்டமே!) சரி இனியும் புலம்பிக் கொண்டிருக்காமல் விஷயத்திற்கு வருவோம்.
ஐ பி எஸ் ஐ ஏ எஸ் பணிகள் ஆட்சியதிகாரம் என்ற வட்டத்துக்கு வெளியிலிருந்து பார்க்கையில் ஒரு சுவாரசியமான வேலையுமாகும். வேலை செய்து சம்பாதித்து பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்களுக்கு இது எவ்விதத்திலும் உகந்ததல்ல. மாறாக சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு மிகச்சரியான தேர்வு இத்துறையே! அரசு வழங்கும் ஊதியம், உபரியான வசதிகள் மற்றும் சலுகைகளைக் கொண்டு கண்ணியம் கவுரவம் மற்றும் கம்பீரமாக வாழ முடியும். ஐ பி எஸ் ஐ ஏ எஸ் ஆவது அத்தனை சுலபமல்ல. ஓராண்டுகாலம் நீளும் மிகக்கடும் போட்டியும் சவால்களும் நிறைந்த தேர்வை சந்திக்க வேண்டும். ஒரே முயற்சியில் இத்தேர்வை வென்றவர்கள் மிகக்குறைவு. தேர்வில் வென்றாலும் அதிக மதிப்பெண் பெறுபவர்களே இப்பதவிகளை வகிக்க முடியும். தேர்வு விபரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகளை இதன் தொடர்ச்சியில் பார்க்கலாம்.
ஆக்கம்: அபூஸமீஹா
இறைவன் நமக்கு அளித்த செல்வங்களில் மிகச் சிறந்த செல்வம் 'குழந்தைகள்' என்று சொன்னால் அது மிகையன்று. திருமணம் ஆனதும் அடுத்ததாக புதுமணத் தம்பதிகளின் எதிர்ப்பார்ப்பு குழந்தைக்குத்தான். சிறிது காலதாமதம் ஆகிவிட்டால் கணவனும், மனைவியும் சோகத்தில் ஆழ்ந்து விடுவதையும், மாமியார் மற்றும் நாத்தனார் வட்டங்களின் குத்தல் பேச்சுக்களும், அண்டை வீட்டாரின் அறிவுரைகளும் சூழ்ந்துகொள்கின்றன. குழந்தைச் செல்வங்கள் எவ்வளவு மதிப்புமிக்கவர்கள் என்பதை அடுக்கடுக்காய் குழந்தைகளைப் பெற்றெடுத்து அலுத்துப் போனவர்களைவிட குழந்தைப் பேற்றிற்காக ஏங்கித் தவிப்பவர்கள்தான் நன்கு அறிவர்.
ஆண்குழந்தை வேண்டும் என்ற ஆசையில் வரிசையாக பெண்குழந்தைகளை பெற்று ஓய்ந்து போனவர்களும் உண்டு. இந்த முறையாவது பெண்குழந்தை பிறக்கட்டும் என்று ஏங்குபவர்களும் உண்டு.
ஆண்டுகள் பல ஆகியும் தனக்கென ஒரு வாரிசு கிடைக்காமல் ஏக்கங்களை சுமந்து நிற்கும் தம்பதிகளும் உண்டு. இது வல்லமை மிக்க இறைவனின் படைப்பாற்றல் ஆகும்.
அல்லாஹ் தன் அருள்மறையில் :
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் நாடியவற்றை அவன் படைக்கின்றான். அவன் நாடியவர்களுக்கு பெண்மக்களை அன்பளிப்புச் செய்கின்றான். தான் நாடியவர்களுக்கு ஆண்மக்களை அன்பளிப்புச் செய்கின்றான். அல்லது ஆண்மக்களையும், பெண்மக்களையும் கலந்தே கொடுக்கின்றான். அன்றியும் அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கிவிடுகின்றான். நிச்சயமாக அவன் நன்கு அறிந்தவன். மிக்க ஆற்றல் உடையவன். (அல்-குர்ஆன் 42 : 49,50)
மேலும் இவை நம் போன்ற சராசரி மக்களை மட்டுமல்லாது நபிமார்களது வாழ்விலும் அவர்கள் குழந்தைப் பேறுக்காக ஏங்கியமையை திருக்குர்ஆன் நமக்கு எடுத்தியம்புகிறது.
என்னுடைய இரட்சகனே! நிச்சயமாக எனது எலும்புகள் பலவீனமடைந்துவிட்டன. என் தலையும் நரை முடியால் இலங்குகிறது. என் இரட்சகனே! நான் உன்னிடத்தில் பிரார்த்தனை செய்து (கேட்டதில்) பாக்கியமில்லாதவனாக ஆக்கிவிடாதே! நிச்சயமாக நான் எனக்குப்பின் என் உறவினர்களை பயப்படுகின்றேன். என் மனைவியோ மலடாக ஆகிவிட்டாள்! ஆகவே உன் புறத்திலிருந்து ஒரு வாரிசை எனக்களிப்பாயாக! (அல்-குர்ஆன் 20 : 4,5)
என்று ஜக்கரிய்யா(அலை) அவர்கள் பிரார்த்தித்ததையும், இறைவன் அவருக்கு 'யஹ்யா' என்ற மகனை அளித்ததையும் குர்ஆனில் காணமுடிகிறது. இன்னும் நபி இப்ராhஹிம்(அலை) அவர்கள் அல்லாஹ்வின் தோழராக இருந்தும் அவர்களுக்கு வயோதிக பருவத்திலேயே குழந்தைப் பேறு கிடைத்தது.
என்னுடைய) வயோதிக காலத்தில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் எனக்கு அன்பளிப்பாக வழங்கினானே அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். (அல்-குர்ஆன் 14:39)
மேற்கண்ட வசனங்கள் நமக்கு சுட்டிக்காட்டுவதெல்லாம் குழந்தைப் பேறு என்பது இறைவன் தான் நாடியவர்களுக்கு வழங்கும் அன்பளிப்புதான். அதைத் தான் நாடியவர்களுக்கு மட்டுமே வழங்குவான்.
இன்னும் வாரிசுக்காக ஏங்குபவர் எவ்வளவு பெரிய பக்திமானாக நல்ல பண்புகளுக்கு சொந்தக்காரராக, ஏன் நபியாக இருந்தாலும் இறைவன் நாடினால் மட்டுமே வாரிசுகள் உருவாகும்.
இதைப் புரிந்து கொள்ளாத நம் மக்களில் பலர், திருமணமான சில மாதங்களிலேயே குழந்தை இல்லையே என்ற ஏக்கம் மேலிட்டு படைப்பாளனான வல்ல அல்லாஹுவை விடுத்து அவுலியாக்களிடம் படையெடுத்து மருத்துவத்தைப் புறக்கணித்து தர்ஹாக்களில் மண்டியிட்டு மன்னிக்க இயலாத பெரும் பாவங்களில் வீழ்ந்துவிடுகின்றனர்.
சிலருக்கு இறைவனின் கருணையால் குழந்தைப் பேறும் கிடைத்துவிடுகின்றது. ஆனால் கிடைத்த குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்குகிறார்களா?
குழந்தை வளர்ப்பு என்பது அந்தக் குழந்தையை பாலூட்டி, சீராட்டி, நடை பயிலும் காலம்வரை கண்காணிப்பது மட்டுமல்ல. உண்மையிலேயே பால்குடிப் பருவம் முதல் நடை பயின்று பள்ளிப் பருவம் வரை அன்போடு வளர்ந்த எத்தனையோ குழந்தைகள் பெரியோர்கள் ஆனதும் ஒழுங்கீனத்தில் ஊற்றுக்கண்களாக நடப்பு சமுதாயத்தில் கெட்ட முன்மாதிரியாக உருவெடுப்பதைக் காணமுடிகின்றது. இன்னும் சிலர், பெற்றோர்களோ பெருமிதம் கொள்ளும் அளவிற்கு நன்நடைத்தைகளும், தொழுகை போன்ற வணக்கங்களிலும் சிறந்து விளங்குவதைப் பார்க்கின்றோம்.
குழந்தைகள் நன்மக்களாவதும், கெட்டவர்களாக உருவெடுப்பதும் ஏன் என்று நம் உள்நெஞ்சம் கேட்கும் கேள்விற்கு பதில்தான் என்ன? மரபியல் பிரச்சினையா? மோசமான குடும்பச் சூழலா? டி.வி, கேபில் போன்ற நச்சு ஊடகங்களா? பளுவான பாடதிட்டங்களும், தரம் குறைந்த கல்விச் சூழலுமா? நண்பர்கள் வட்டம் சரியில்லையா? நாகரீகம்(?) ஓங்கிய நகர வாழ்க்கைத் தரம் காரணமா? என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடையைச் சொல்வார்கள் ஆனால் அடிப்படைக் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் ஒரு உண்மை புலப்படுகிறது. ஒரு பள்ளிக்கூடம் தரமான கல்வியைத் தரலாம், ஒரு மருத்துவரை அல்லது பொறியியல் வல்லுனரைத் தரலாம், ஆனால் அவர் இறைவனுக்குப் பயந்து இறையச்சம் மிகுந்த மனிதநேயம் பொருந்திய சமூகப் பணியாளராக பெற்றோர்களை பேணுபவராக சமுதாயத் காவலராக, பிறர்நலம் நாடுபவராக, வரவேண்டுமென்றால் அதற்கு முதற்காரணம் பெற்றோர்கள்தான். அவர்களின் வளர்ப்பு முறையில்தான் அந்தக் குழந்தை, அந்த மாணவன், அந்த இளைஞன் புடம்போட்டு வார்க்கப்படுகின்றான்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.
(அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி)
எனவே குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் இன்றியமையாதது. எனவே குழந்தையை வளர்ப்பதில் மார்க்கம் கூறும் நல்லுபதேசங்கள், தெளிவான வழிமுறைகள், வரையரைகளைப் பற்றித் தொடராகத் தெரிந்து கொள்வோம்.
---------------------------
.
(கிறிஸ்தவர்களின் மறுப்பும் அதற்கான விளக்கமும்)
.