முதல் பாகம் செல்ல... Click Hereசிறு குழந்தைகளை சற்று கவனித்துப் பாருங்கள், அதிலும் அவர்களின் நடவடிக்கைகளை உற்றுக் கவனியுங்கள், அவர்களின் புன்னகையின் பின்னணியில் ஊடுருவி நோக்குங்கள் மிகப் பெரிய ஆச்சரியம் மேலிடும். தன் தாயும், தந்தையும் பேசும் உரையாடல்கள், கைகளை ஆட்டிப் பேசும் விதம், ஆகியவற்றை உண்ணிப்பாய் பார்த்து தனியாக இருக்கும் போது, அதை அப்படியே செய்து மகிழ்வதைக் காண முடியும்.
குழந்தையின் முதல் பள்ளிக்கூடம் தாயின் மடி என்பார்கள். ஒரு குழந்தை தட்டுத் தடுமாறி பேச முனைவது, கைகளை அசைத்து தன் எண்ணங்களை வெளிப்படுத்துவது எல்லாம் தமக்கு அருகாமையில் நடக்கும் சம்பவங்களை பார்த்துத்தான் என்பதும், குழந்தை பேசுவதற்கு முன்பாக செய்யும் வேலை மற்றவர்களை உற்றுக் கவனிப்பது என்பதும்தான். எனவே அப்பருவத்தில் அவர்களுக்கு நல்ல செயல்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும். உதாரணமாக அல்லாஹ் எங்கே இருக்கின்றான் எனக் கேட்டால் மேலே கையை உயர்த்திக் காட்டலாம். அம்மா, அப்பா போன்ற எளிதான வார்த்தைகளோடு அல்லாஹ் என்ற வார்த்தையையும் கற்றுக் கொடுக்கலாம்.
சிறு சேட்டைகள் செய்யும் போதுகூட மற்றவர்களின் பெயரை கூறி, சொல்லிக் கொடுப்பேன் என்று கூறுதைவிட அல்லாஹ்வைக் கொண்டு பயமுறுத்தலாம். குழந்தைகள் பேச ஆரம்பித்து, நடக்க ஆரம்பித்ததும் அவர்களுக்கு மெல்ல மெல்ல இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் அல்லாஹ் இருக்கின்றான் என்பதை அடிக்கடி அவர்களுக்கு ஞாபகப்படுத்துங்கள். சிறு காயங்கள் ஏற்பட்டுவிட்டால் அல்லாஹ் இந்தக் காயத்தைப் போக்க மருந்துகள் மூலம் நிவாரணமளிப்பான் என்று ஆறுதல் வார்த்தைகளைக் கூறுங்கள்.
அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது தொழுகையை அறிமுகப்படுத்த வேண்டும். நாம் பள்ளிக்குச் செல்லும்போது அவர்களையும் உடன் அழைத்துச் சென்று தொழும் காட்சியை காணச் செய்யவேண்டும். தக்க முதிர்ச்சி அடைந்ததும் தொழச் சொல்ல வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஏழு வயதில் குழந்தைகளுக்கு தொழ ஏவுங்கள். பத்து வயதில் (தொழுகையை விட்டால்) அவர்களை அடியுங்கள்.
அறிவிப்பாளர் : அபூஸுரையா ஸபரா பின் மஃபதில் ஜுஹனீ(ரலி)
ஆதாரம் : திர்மிதி
ஒருவர் இந்த ஹதீஸை செவியேற்ற பின்னரும் குழந்தைகளை தொழ ஏவவில்லை என்றால் குழந்தை வளர்ப்பில் பெரும் குறையுடையதாக அந்த இல்லம் மாறுவதோடு, பெற்றோர்கள் இருவரும் இறைவனின் முன்னிலையில் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவர்.
அடுத்ததாக அவர்கள் வளரக்கூடிய சூழலை நல்ல சூழலாக அமைக்க வேண்டும். கெட்ட வார்த்தைகளை அவர்கள் முன் பேசுவது, நமது கோப தாபங்களை அவர்கள் முன்னிலையில் வெளிக்காட்டுவது போன்றவை கூடவே கூடாது.
குழந்தைகள் எதைப் பேசினாலும் அலட்சியப்படுத்தாமல் அவர்களது கோரிக்கைகளை செவிசாய்த்துக் கேட்பதோடு முக்கியமாக அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பும் கொடுக்க வேண்டும். சிரித்தால் காரணம் கேளுங்கள், அழுதால் ஆறுதல் சொல்லுங்கள். கணவன் மனைவியிடையே நிகழும் சில கருத்து வேறுபாடுகள், சச்சரவுகளை பிள்ளைகள் முன்னிலையில் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அவர்கள் மத்தியில் நடக்கும் தவறான பேச்சுக்கள், சண்டைகள் அவர்கள் மனதில் பதிந்து பின்னாளில் பெரும் நடைமுறைப் பாதிப்பிற்குள்ளாகிவிடும், சில நேரம் இது பெரும் விபரீதமாய் உருவெடுத்து குடும்ப நிம்மதியை குலைத்துவிடவும் கூடும்.
தனது நண்பரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை சமூக ஆர்வலர் எஸ். ஜெயஸ்ரீ இப்படி விவரிக்கின்றார்.
"எனது நண்பர் ஒருவர் தனது பெற்றோரை தன்னுடன் வைத்துக் கொண்டார் என்றாலும், அவர்கள் மேல் அன்பு காட்டாது, அவர்கள் செய்யும் செயல்களால் எரிச்சலடைவது, அவர்கள் மீது எப்பொழுதும் கோபத்தைப் பாய்ச்சுவது என்று இருந்தார். இதை அவதானித்துக் கொண்டிருந்த குழந்தைகள் மத்தியில் தனது தாத்தா, பாட்டி இருவர்தான் நம் குடும்ப நிம்மதியின்மைக்குக் காரணம் என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அந்த குழந்தைகளும் தனது தாத்தா, பாட்டியை தூஷிக்கத் துவங்கிவிட்டனர். அந்த முதியோர்களின் நிலை குறித்து வேறு நபர் மூலம் எனக்குச் செய்தி கிடைக்கவே சம்பந்தப்பட்ட எனது நண்பரிடம் நானே சென்று மென்மையாக விஷயம் கேட்டதில் மனதில் உள்ளவற்றை கொட்டித் தீர்த்து விட்டார்.
அவர் தம் பெற்றோர் மீது கூறிய பிரதானக் குற்றச்சாட்டுகள், அவர் சிறு பிள்ளையாக இருக்கும் போது அவரது சின்னச் சின்ன ஆசைகளைக் கூட நிறைவேற்றவில்லை. இன்னும் அவரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தாங்கள் இஷ்டத்துக்கு என்னை அதட்டிப் பணிய வைத்தனர். தன்னை மகனாகவே அவர்கள் மதித்ததில்லை. அதனால் ஏற்பட்ட வெறுப்பு மனதில் ஆழமாய் பதிந்து அவர்கள் பேசும்போது எனக்கு பெரும் கோபத்தையும், எரிச்சலையும் உண்டுபண்ணுகிறது.
இதனால் ஏற்பட்ட கோபத்தை தன் பிள்ளைகள் மேலும் காட்ட என் குடும்பமே நிம்மதியின்றி தவிக்கின்றது, என்று கண்ணீர் மல்கக் கூறினார்." (நன்றி : தினமணி 11-01-06)
இந்த இடத்தில் நாம் சொல்லும் விஷயத்தை தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. பெற்றோர்கள் மிக அதிகமாக மதிக்கப்படவேண்டியவர்கள். அவர்களைச் சிலாகித்து இறைவன் பல இடங்களில் நமக்குக் கட்டளையிடுகின்றான். பெற்றோர்களுக்கு இஸ்லாம் மிக உயர்ந்த அந்தஸ்த்தைக் கொடுத்திருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே சமயம் நாம் நமது குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாது அடக்கி ஆளும் மனோபாவத்தால் தம் பிள்ளைகள் பெரியவர்களாகும் போது நம் மீது வெறுப்பு ஏற்பட நாமே காரணமாகிவிடுகிறோம்.
நாம் நடந்து கொள்ளும் முறைகளை வீட்டில் வளரும் குழந்தைகள் புரிந்துகொள்ள முடியாமல் விழிக்கின்றனர். விளக்கிச் சொல்ல முடியாத சூழல் ஒரு புறம், குழந்தைகள் மனதில் சம்பவங்கள் ஆழப் பதிவது மறுபுறம்.
இவ்வாறு ஆழப் பதிந்துவிட்ட அந்த சம்பவங்கள் பின்னாளில் அவர்களது வாழ்க்கையில் பிரதிபலிக்கத் தொடங்கிவிடுகின்றன. குழந்தை வளர்ப்பில் நாம் செய்த ஒரே ஒரு தவறுக்கு நமது பிள்ளை, அவர்களது பிள்ளை என்று சங்கிலித் தொடராய்.., பல சிக்கல்கள் ஏற்பட நாம் காரணமாக அமைவது முறையா? எனவே அன்பு வாசகர்களே! என் குழந்தையை நான் நல்லவனாக வளர்ப்பேன் என சூளுரைக்கும் நீங்கள் முதலில் மேற் சொன்ன குறைபாடுகள் நம்மிடம் இருந்தால் களைந்து குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து, அவர்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்து, அவர்களுக்கு மதிப்பளியுங்கள்!
தொடரும்...
--------------
.
இறைவன் நமக்கு அளித்த செல்வங்களில் மிகச் சிறந்த செல்வம் 'குழந்தைகள்' என்று சொன்னால் அது மிகையன்று. திருமணம் ஆனதும் அடுத்ததாக புதுமணத் தம்பதிகளின் எதிர்ப்பார்ப்பு குழந்தைக்குத்தான். சிறிது காலதாமதம் ஆகிவிட்டால் கணவனும், மனைவியும் சோகத்தில் ஆழ்ந்து விடுவதையும், மாமியார் மற்றும் நாத்தனார் வட்டங்களின் குத்தல் பேச்சுக்களும், அண்டை வீட்டாரின் அறிவுரைகளும் சூழ்ந்துகொள்கின்றன. குழந்தைச் செல்வங்கள் எவ்வளவு மதிப்புமிக்கவர்கள் என்பதை அடுக்கடுக்காய் குழந்தைகளைப் பெற்றெடுத்து அலுத்துப் போனவர்களைவிட குழந்தைப் பேற்றிற்காக ஏங்கித் தவிப்பவர்கள்தான் நன்கு அறிவர்.
ஆண்குழந்தை வேண்டும் என்ற ஆசையில் வரிசையாக பெண்குழந்தைகளை பெற்று ஓய்ந்து போனவர்களும் உண்டு. இந்த முறையாவது பெண்குழந்தை பிறக்கட்டும் என்று ஏங்குபவர்களும் உண்டு.
ஆண்டுகள் பல ஆகியும் தனக்கென ஒரு வாரிசு கிடைக்காமல் ஏக்கங்களை சுமந்து நிற்கும் தம்பதிகளும் உண்டு. இது வல்லமை மிக்க இறைவனின் படைப்பாற்றல் ஆகும்.
அல்லாஹ் தன் அருள்மறையில் :
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் நாடியவற்றை அவன் படைக்கின்றான். அவன் நாடியவர்களுக்கு பெண்மக்களை அன்பளிப்புச் செய்கின்றான். தான் நாடியவர்களுக்கு ஆண்மக்களை அன்பளிப்புச் செய்கின்றான். அல்லது ஆண்மக்களையும், பெண்மக்களையும் கலந்தே கொடுக்கின்றான். அன்றியும் அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கிவிடுகின்றான். நிச்சயமாக அவன் நன்கு அறிந்தவன். மிக்க ஆற்றல் உடையவன். (அல்-குர்ஆன் 42 : 49,50)
மேலும் இவை நம் போன்ற சராசரி மக்களை மட்டுமல்லாது நபிமார்களது வாழ்விலும் அவர்கள் குழந்தைப் பேறுக்காக ஏங்கியமையை திருக்குர்ஆன் நமக்கு எடுத்தியம்புகிறது.
என்னுடைய இரட்சகனே! நிச்சயமாக எனது எலும்புகள் பலவீனமடைந்துவிட்டன. என் தலையும் நரை முடியால் இலங்குகிறது. என் இரட்சகனே! நான் உன்னிடத்தில் பிரார்த்தனை செய்து (கேட்டதில்) பாக்கியமில்லாதவனாக ஆக்கிவிடாதே! நிச்சயமாக நான் எனக்குப்பின் என் உறவினர்களை பயப்படுகின்றேன். என் மனைவியோ மலடாக ஆகிவிட்டாள்! ஆகவே உன் புறத்திலிருந்து ஒரு வாரிசை எனக்களிப்பாயாக! (அல்-குர்ஆன் 20 : 4,5)
என்று ஜக்கரிய்யா(அலை) அவர்கள் பிரார்த்தித்ததையும், இறைவன் அவருக்கு 'யஹ்யா' என்ற மகனை அளித்ததையும் குர்ஆனில் காணமுடிகிறது. இன்னும் நபி இப்ராhஹிம்(அலை) அவர்கள் அல்லாஹ்வின் தோழராக இருந்தும் அவர்களுக்கு வயோதிக பருவத்திலேயே குழந்தைப் பேறு கிடைத்தது.
என்னுடைய) வயோதிக காலத்தில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் எனக்கு அன்பளிப்பாக வழங்கினானே அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். (அல்-குர்ஆன் 14:39)
மேற்கண்ட வசனங்கள் நமக்கு சுட்டிக்காட்டுவதெல்லாம் குழந்தைப் பேறு என்பது இறைவன் தான் நாடியவர்களுக்கு வழங்கும் அன்பளிப்புதான். அதைத் தான் நாடியவர்களுக்கு மட்டுமே வழங்குவான்.
இன்னும் வாரிசுக்காக ஏங்குபவர் எவ்வளவு பெரிய பக்திமானாக நல்ல பண்புகளுக்கு சொந்தக்காரராக, ஏன் நபியாக இருந்தாலும் இறைவன் நாடினால் மட்டுமே வாரிசுகள் உருவாகும்.
இதைப் புரிந்து கொள்ளாத நம் மக்களில் பலர், திருமணமான சில மாதங்களிலேயே குழந்தை இல்லையே என்ற ஏக்கம் மேலிட்டு படைப்பாளனான வல்ல அல்லாஹுவை விடுத்து அவுலியாக்களிடம் படையெடுத்து மருத்துவத்தைப் புறக்கணித்து தர்ஹாக்களில் மண்டியிட்டு மன்னிக்க இயலாத பெரும் பாவங்களில் வீழ்ந்துவிடுகின்றனர்.
சிலருக்கு இறைவனின் கருணையால் குழந்தைப் பேறும் கிடைத்துவிடுகின்றது. ஆனால் கிடைத்த குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்குகிறார்களா?
குழந்தை வளர்ப்பு என்பது அந்தக் குழந்தையை பாலூட்டி, சீராட்டி, நடை பயிலும் காலம்வரை கண்காணிப்பது மட்டுமல்ல. உண்மையிலேயே பால்குடிப் பருவம் முதல் நடை பயின்று பள்ளிப் பருவம் வரை அன்போடு வளர்ந்த எத்தனையோ குழந்தைகள் பெரியோர்கள் ஆனதும் ஒழுங்கீனத்தில் ஊற்றுக்கண்களாக நடப்பு சமுதாயத்தில் கெட்ட முன்மாதிரியாக உருவெடுப்பதைக் காணமுடிகின்றது. இன்னும் சிலர், பெற்றோர்களோ பெருமிதம் கொள்ளும் அளவிற்கு நன்நடைத்தைகளும், தொழுகை போன்ற வணக்கங்களிலும் சிறந்து விளங்குவதைப் பார்க்கின்றோம்.
குழந்தைகள் நன்மக்களாவதும், கெட்டவர்களாக உருவெடுப்பதும் ஏன் என்று நம் உள்நெஞ்சம் கேட்கும் கேள்விற்கு பதில்தான் என்ன? மரபியல் பிரச்சினையா? மோசமான குடும்பச் சூழலா? டி.வி, கேபில் போன்ற நச்சு ஊடகங்களா? பளுவான பாடதிட்டங்களும், தரம் குறைந்த கல்விச் சூழலுமா? நண்பர்கள் வட்டம் சரியில்லையா? நாகரீகம்(?) ஓங்கிய நகர வாழ்க்கைத் தரம் காரணமா? என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடையைச் சொல்வார்கள் ஆனால் அடிப்படைக் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் ஒரு உண்மை புலப்படுகிறது. ஒரு பள்ளிக்கூடம் தரமான கல்வியைத் தரலாம், ஒரு மருத்துவரை அல்லது பொறியியல் வல்லுனரைத் தரலாம், ஆனால் அவர் இறைவனுக்குப் பயந்து இறையச்சம் மிகுந்த மனிதநேயம் பொருந்திய சமூகப் பணியாளராக பெற்றோர்களை பேணுபவராக சமுதாயத் காவலராக, பிறர்நலம் நாடுபவராக, வரவேண்டுமென்றால் அதற்கு முதற்காரணம் பெற்றோர்கள்தான். அவர்களின் வளர்ப்பு முறையில்தான் அந்தக் குழந்தை, அந்த மாணவன், அந்த இளைஞன் புடம்போட்டு வார்க்கப்படுகின்றான்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.
(அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி)
எனவே குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் இன்றியமையாதது. எனவே குழந்தையை வளர்ப்பதில் மார்க்கம் கூறும் நல்லுபதேசங்கள், தெளிவான வழிமுறைகள், வரையரைகளைப் பற்றித் தொடராகத் தெரிந்து கொள்வோம்.
---------------------------
.
(கிறிஸ்தவர்களின் மறுப்பும் அதற்கான விளக்கமும்)
.