ஒருவன் தன் உழைப்பால் வரும் வருமானத்திலிருந்து சிறுக,சிறுக சேர்த்து வாங்கிய தன் புதிய காரை புதுப்பொழிவுடன் என்றும் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதை மிகவும் பாதுகாப்பாக ஏதோ வைரக்கல்லை மெருகூட்டுவது போல் மெல்ல, மெல்ல துடைத்துக் கொண்டிருந்தான்.
அச்சமயம் அங்கு வந்த அவனுடைய நான்கு வயதே நிரம்பிய மகன் காரின் மறுபுறம் சிறுபிள்ளைக்கே உரிய விளையாட்டுத்தனத்தில் ஒரு கல்லை எடுத்து காரில் கிறுக்கி விட்டான்.
அதைக் கண்ட காரின் முதலாளியான அவன் தந்தை என்ன செய்திருக்க வேண்டும்? தன் பிள்ளையை செல்லமாக கண்டித்து (இது மனிதர்களின் மனோபாவத்திற்கேற்ப (சாந்தமான குணம்) வேறுபடும்) அல்லது அதற்கு ஒரு படி மேல் போய் கடின சொல் மூலம் லேசாக அவனைத்தட்டி அனுப்பி இருக்க வேண்டும். தன் மகனின் கையைப் பிடித்து கதறக்கதற தன் கையில் வாகனத்தின் பாகங்களை கழற்ற பயன் படுத்தப்படும் ஆயுதம் இருக்கின்றது என்று கூடத்தெரியாமல் ரத்தம் சொட்ட, சொட்ட தண்டித்து விட்டான் அந்தப் பாலகனை "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்பதை நிரூபிப்பவனாக.
பிறகென்ன 'அழுதாலும் குழந்தை அவள் தானேப் பெற வேண்டும்" என்பது போல் அவன் பெற்றப் பிள்ளையல்லவா அந்த பாலகன்?. அச்சிறுவனை ரத்தம் சொட்ட, சொட்ட தன் காரிலேயே அள்ளி போட்டுக் கொண்டு மருத்துவமனை விரைகிறான்.
மருத்துவமனையில் தன் மகனின் கை நரம்புகள் மிருகத்தனமான அடியால் துண்டிக்கப்பட்டு கையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடுகின்றனர் பாவம் அந்த பச்சிளம் பாலகன். பிறகு அறுவை சிகிச்சை செய்த கையில் முறையே கட்டுகள் கட்டப்பட்டு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்ட அச்சிறுவன் ஒன்றுமறியாத பிஞ்சு உள்ளத்துடன் தன் தந்தையை நோக்கி கேட்கிறான் "அப்பா (எப்பப்பா) எப்பொழுது என் கை விரல்கள் வளரும்"? (பாவம் ஏதோ வெட்டப்பட்ட செடி பிறகு முளைத்து வருவது போல் துண்டிக்கப்பட்ட தன் கையும் வளரும் என்று நினைத்துக் கொண்டான் போலும்.)
அதைக்கேட்ட தந்தை வாழ்க்கையில் வெறுப்புற்றவனாக, கைசேதத்தை உணர்ந்தவனாக ( ஆம் உண்மையான கை சேதம் தான் இது), தன் மகனின் ஒரு வார்த்தையின் மூலம் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைப்போல் சிதறடிக்கப்பட்ட தன் உள்ளத்தின் வேதனையுடன், இதற்கெல்லாம் காரணம் தன் அறிவற்ற செயல் தான் என உணராதவனாய் தன் புதிய காரை நோக்கி விரைகிறான் பிறகு அதை திட்டி, அடித்து துவசம் செய்கிறான்.
பிறகு சோர்வுற்றவனாக தன் மகன் கல்லால் கிறுக்கிய இடத்தை சற்று உற்று நோக்கிப் பார்த்து அதில் எழுதப்பட்ட வாசகம் மூலம் அவன் தன்னை உயிருடன் புதைக்கப்பட்டது போன்ற கடும் வேதனையை உணர்கிறான் அவ்விடத்தில். அதில் அப்படி என்ன அவன் மகன் கிறுக்கி இருப்பான்? ஒன்று மில்லை சிறிய வார்த்தை தான். " LOVE YOU DAD - அன்புள்ள அப்பா" மட்டுமே எழுதப்பட்டிருந்தது.
இனி தான் இவ்வுலகில் வாழ (லாயக்கு) அருகதை இல்லாதவன் என அவனே முடிவு செய்தவனாக, தான் செய்த அச்செயலுக்கு இனி இவ்வுலகில் பரிகாரமில்லை என்ற மன வேதனையுடன் அதற்கு அடுத்த நாள் இவை எல்லாவற்றிற்கும் தீர்வு தற்கொலையே என்று எண்ணி அதையும் செய்து முடிக்கிறான். மேலும் அவசரப்பட்டவானாக.
இதன் மூலம் இங்கு நமக்கு புகட்டப்பட்ட பாடம்/தத்துவம் என்னவெனில் "உலகில் இறைவன் பொருட்களைப் படைத்தது, அதைப் படைக்க மனிதனுக்கு ஆற்றலைக் கொடுத்தது யாவும் அதை மனித குலம் முறையே பயன் படுத்தவே; மனிதர்கள் யாவரும் படைக்கப்பட்டது ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவே அன்றி வேறில்லை." "ஆனால் இன்றைய நாகரிக உலகில் பொருட்களுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கப்பட்டு மாறாக மனிதர்கள் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள்" என்பதை இக்கதை நமக்கு வெளிப்படையாக பாடம் புகட்டுகிறது.
எனவே மனிதர்களை நேசிப்போம்; உண்மையான மனித நேயம் காப்போம் இறுதியில் நம்முடன் எடுத்துச் செல்ல என்ன இருக்கிறது? என்ற உயர்ந்த சிந்தனையுடன். ஒரு நண்பர் மூலம் எனக்கு வந்த ஆங்கில மின்னஞ்சலின் தமிழ் மொழியாக்கம் தான் இது.
இதை நம் யாவருக்காகவும் தமிழ் மொழியாக்கம் செய்து மகிழும் உங்களின்,
எம்.ஐ. நெய்னா முகம்மது
சவுதியிலிருந்து.
மதக்கலவரங்களாலும், துவேசங்களாலும் மாசு படிந்துள்ள நம் பாரதத் தாய்திருநாட்டை கள்ளம் கபடமில்லா மனித நேயம் எனும் வெள்ளைத் துணி கொண்டு துடைப்போம் வாரீர்.
எம்மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் யாவரும் நம் தாய்த்திருநாட்டின் தவப்புதல்வர்கள் தான் எனும் எண்ணம் நம் யாவரின் உள்ளங்களிலும் தளைத்திடல் வேண்டும். நம் உண்மையான தேசப்பற்றிற்கு யாருடைய சான்றிதழும், ஐ.எஸ்.ஐ (ISI) முத்திரைகளெல்லாம் தேவையில்லை. அதையும் தன் பணபலம் கொண்டு எளிதாக வாங்கும் உலகம் இது.
மேல் சாதி என்பவன் வானிலிருந்து குதித்தவனும் அல்ல. கீழ் சாதி என்பவன் பூமியிலிருந்து முளைத்தவனும் அல்ல. நம் எல்லோரின் தேகத்திலும் தடையின்றி ஓடும் குருதியின் நிறம் சிகப்பு அன்றி வேறில்லை.
நம் தாய் நாட்டின் உண்மையான பற்று என்பது நாட்டின் குடியரசு, சுதந்திர தினங்களில் தன் (இதயத்தின் மேல்) சட்டையில் அணியும் மூவர்ணக் கொடி மூலம் மட்டும் தான் வெளிப்படுத்தப்பட வேண்டுமென்பதில்லை.
தேசப்பற்று என்று சொல்லி வெறும் வாயில் ஊரறிய "வந்தே மாதரம்" கூறிவிட்டு, பிறகு யாரும் அறியாமல் தன் மறைமுக வேலைகள் மூலம் நம் நாட்டின் இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் செயல்களில் ஈடுபடுவோர் தான் உண்மையில் "அக்மார்க்" முத்திரை குத்தப்படாத சுத்தமான தீவிரவாதிகள்.
ஒரு வேளை உணவிற்கே அல்லோலப்படும் ஏழை, எளியோர் வாழும் நம் தாய் நாட்டில் பதுக்கல், கலப்படம், கடத்தல், கொள்ளைகள், சுயநலத்திற்காக ஈவு இரக்கமின்றி கொலைகள் மூலம் கோடி கோடி சம்பாதித்து அதை அரசுக்கு முறையே கணக்குகாட்டாமல் அதன் மூலம் நம் நாட்டின் பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் அனைவருமே அரசால் அறிவிக்கப்படாத தீவிரவாதிகள் தான்.
"திரைக் கடல் ஓடியும், ரியாலைத் (நாட்டிற்கேற்ப வேறுபடும்) தேடு" என்ற புது மொழிக் கேற்ப சம்பாத்தியத்திற்காக அயலநாடுகள் சென்று விடுமுறையில் நம் தாய்த்திரு நாட்டிற்கு திரும்பும் பொழுது இங்கு பல நிலை/சீர்க்கேட்டை கண்டு நம் நெஞ்சு பொறுக்குதில்லையே!
பணக்கார வர்க்கங்கள் மேலும், மேலும் வானுயர பறக்க, நடுத்தர ஏழை, எளியோரின் நிலை மட்டும் நிலத்தடி நீர் போல் நாளாக, நாளாக அடி பாதாளத்திற்கு இறங்கிப் போய்க்கொண்டே இருப்பது ஏனோ?
இன்றைய சூழ்நிலையில் நம் தாய்த்திருநாட்டில் பரவலாக நடக்கும் மதக்கலவரங்கள் ஒடுக்கப்பட்டு, மாசடைந்த நம் எல்லோரின் (எல்லா மதத்தவரின்) உள்ளங்களின் தூசுகளும் மனிதநேயத்தால் துடைக்கப்பட்டு, எல்லா சமூகக்கேடுகளும் களையப்பட்டு "பிறக்கும் பொழுது எதைக் கொண்டு வந்தோம் கடைசியில் நம்முடன் எடுத்துச் செல்ல" என்ற உயரிய எண்ணத்தால் நாம் யாவரும் பிணைக்கப்பட்டு, நம் தாய்த்திருநாட்டின் வல்லமைகளை உலகறியச் செய்து, இன்றைய வல்லரசுகளின் தலைவனாக்கி அதன் உன்னத ஆசனத்தில் அமரச்செய்து அழுகு பார்ப்போம். வாரீர்! புறப்படுவோம் ஓரணியில். இதற்குத் தலைவர்கள் தேவையில்லை, கட்சிக் கொடிகளும் அவசியமில்லை. கலவரங்கள் இல்லை. நம் உள்ளத்தூய்மையே இதன் தாரக மந்திரமாக இருக்கட்டும் வாரீர். ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப்பிடிப்போம் வாரீர்.
இஸ்லாத்தின் உயரிய கொள்கையாம் "உம்மதம் உனக்கு; எம்மதம் எனக்கு" என்ற கொள்கையை நாமெல்லாம் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் கடைபிடித்தால் நம் பாரத்திருநாடு என்றோ வல்லரசுக் கனவை எட்டி இருக்கும் என்பது வருத்தம் கலந்த உண்மை.
மதக்கலவரங்களாலும், பல்வேறு சண்டைகளாலும் நம் மண்டைகள் தான் உடைக்கப்பட்டனவே தவிர நம் தாய்நாட்டிற்காக, மக்களுக்காக சாதித்தது தான் என்ன? ஒழியட்டும் ஆணவப் பேய். அழியட்டும் அநியாய அடக்குமுறைகளும், அநீதிகளும். ஓங்கட்டும் நம் தூய மாசற்ற தேசப்பற்று. நம் வல்லரசுக் கனவுகள் நனவாகட்டும். புதியதோர் வல்லரசு செய்வோம் வாரீர்.
சகோ. ரஃபியாவின் ஆழமான சிந்தனைகளிலிருந்து எடுக்கப்பட்ட முத்துக்களின் சாரம் தான் இவை. அதை இங்கு நம் யாவருடைய பார்வைக்காகவும் தொகுத்து வழங்கி மகிழும்.
எம்.எஸ்.எம். நெய்னா முகம்மது.
சமூக நல ஆர்வலர்களுக்கு அன்பான வேண்டுகோள்!இந்தியா சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்திய இறையாண்மைக்கும் பன்முக சகிப்புத்தன்மைக்கும் கேடு விளைவித்து, மக்கள் ஒற்றுமைக்கு உலை வைக்கும் விதமாக மதசார்பற்ற நாட்டில் வர்ண ஆட்சியை அமைக்கும் சூழ்ச்சியோடு சங்கபரிவாரம் தேச விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு அரசு, அதிகாரம், காவல், இராணுவம், ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் காங்கிரஸ் முதலான அனைத்து கட்சிகளிலும் ஊடுருவியுள்ள சங்கபரிவாரத்தினர் பலவகைகளிலும் உறுதுணை புரிந்து வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் மதவெறியைத் தூண்டிவிட்டு கலவரங்களை ஏற்படுத்தி மக்களிடம் நிலவும் மனிதநேயத்தைச் சீர்குலைத்து வருகின்றனர்.
1995 -க்கு முன்பு வரை இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டும் மையம் கொண்டிருந்த இந்தப் பார்ப்பன மதவெறி செயல்பாடுகள் தற்பொழுது தென்னகத்திலும் குறிப்பாக தமிழகத்திலும் படுவேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளன. இதற்கான அடையாளமாக கோயம்புத்தூர் படுகொலைகள், தென்காசி குண்டுவெடிப்புகளைக் கூறலாம். இதற்காகச் சங்கபரிவாரத்தின் அறிவிக்கப்படாத தமிழக ஏஜண்டாக ஊடகத்துறையில் தினமலர் எனும் பார்ப்பன தினசரி ஈடுபட்டு வருகிறது.
எங்காவது ஒரு மூலையில் காவல்துறையால் அநியாயமாகப் பழி சுமத்தப்பட்டு ஒரு முஸ்லிம் கைது செய்யப்பட்டு விட்டால், ஊசி, நூல், வயர் துண்டு, சுத்தியல், ஆணி போன்ற அதி பயங்கர ஆயுதங்களின் பட்டியலை முகப்புப் பக்கத்தில் பிரசுரித்து "இஸ்லாமிய தீவிரவாதி" என்ற பதத்தைத் தமிழக மக்களின் மனதில் ஆழப்பதிய வைத்தப் பெருமை தினமலருக்கு உண்டு. பிள்ளையார் ஊர்வலம் நடக்கும் வேளைகளில் சமூக விரோதிகளால் திட்டமிட்டுச் செய்யப்படும் கலவரங்களைக் கூட, காவல்துறையும் பதிவு செய்யாத "அருகிலுள்ள பள்ளிவாசலில் இருந்து கல் வீசப் பட்டதால் பதட்டம் ஏற்பட்டது" என திரித்து முஸ்லிம் சமுதாயத்தை மக்கள் மத்தியில் மோசமான சமுதாயமாகச் சித்தரிப்பதற்குத் தினமலரால் மட்டுமே இயலும்.
இவ்வாறு பல ஆண்டுகாலமாக தினமலர் நாளிதழ் செயல்பட்டு வந்தமையைச் சகித்துக் கொண்ட முஸ்லிம் சமுதாயத்தின் நெஞ்சில் சுடுகனலை வைப்பது போன்று, தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் இறைத்தூதரைக் கேலி செய்யும் விதமாக டென்மார்க் பத்திரிக்கை வெளியிட்டு உலகில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்த கேலிச்சித்திரத்தைச் சம்பந்தமே இல்லாமல் தனது கணினிமலரில் வெளியிட்டுள்ளது. இது ஏதேச்சையாக நடந்த சம்பவம் என்று ஒதுக்கிவிட இயலாது. உலக முஸ்லிம்களின் புனித மாதமாகிய ரமதான் மாதத் துவக்கத்தில் இந்த மதவெறி தாக்கதலை திட்டமிட்டே தினமலர் அரங்கேற்றியுள்ளது.
எதையும் தாங்கும் முஸ்லிம்கள் தங்களின் இறைத்தூதர் இகழப்படுவதை மட்டும் ஒருபோதும் சகிக்க மாட்டார்கள். இதனை நன்றாக உணர்ந்தே இந்நாழிதழ் இத்தகைய கீழ்தரமான செயலில் ஈடுபட்டது. எதிர்ப்பு வந்தபொழுது தவறுதலாக நடந்தது எனக் கூறி தன் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள மட்டுமே முயல்கின்றது. அதற்காகப் பகிரங்க மன்னிப்புக் கேட்கவோ இனி இதுபோன்ற செயல் தன்பக்கமிருந்து நடைபெறாது என்பதற்கு உத்தரவாதமோ அது கொடுக்கவில்லை. தவறு கூட ஒரு பிரசுரத்தில் நிகழ்ந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் நான்கு பிரசுரங்களில் அது பிரசுரிக்கப்பட்டது தவறுதலாக நடந்தச் சம்பவமாகப்படவில்லை.
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், சுமூகமாக வாழும் சமூகத்தில் கலகம் விளைவித்து அதன் மூலம் இலாபம் பெற வேண்டும் என்ற சங்கபரிவாத்தின் செயல்திட்டத்தை வலுவான ஊடகம் மூலம் பரப்ப முனையும் தினமலர் பத்திரிக்கையை மேலும் தமிழகத்தில் வளரவிடுவது, தமிழகத்தின் எதிர்காலத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.
செய்த தவறுக்கு நிர்வாகம் காரணமல்ல என்று கூறி வருத்தம் தெரிவித்து நழுவுவது தினமலரின் நிர்வாகச் சீர்கேட்டை பறைசாற்றுகிறது. தினமலரின் மதவெறி செயல்பாட்டை ஒழிக்க, மனித நேயத்தை வளர்க்க சமூக ஆர்வலர்களே முஸ்லிம் சமூகத்தின் இந்த எதிர்ப்புக் குரலுக்கு ஆதரவை அளியுங்கள்.
ஒன்றிணைந்து எதிர்ப்போம், மதவெறியை ஒழிப்போம், மனித நேயம் வளர்ப்போம்!
நன்றி:
அபூமுகை(அன்புள்ளம் கொண்ட எனதருமை சகோதரர்களே! தற்போது தினமலர் நடத்தி வரும் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக செயல்பாடுகளை கண்டித்து அனைத்து சமூக ஆர்வலர்களும் தங்களது இனையங்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் போன்று தெரிய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.)