இயேசுவின் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே’ என்ற வார்த்தைகளை அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், பிரார்த்தனைக் கூட்டங்களிலும் நாம் அடிக்கடி கேட்டு இருக்கின்றோம். இந்த வார்த்தைகள் உரைப்பவர்களின் உதடுகளிலிருந்து வெளிப்பட்டு, கேட்பவர்களின் செவிகளோடு மட்டும் நின்று விடுகிறது என்பதே கசப்பான உண்மை.
இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் மதம் மாறியவர்களே. இருந்தபோதும் முஸ்லிம் மதத்தில் காணப்படும் ஒற்றுமையும், சகோதரத்துவமும் கிறிஸ்தவ மதத்தில் காணப்படுவதில்லை.
இந்தியாவில் பிராமணர்கள் முதல், ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வரை அனைத்து சமுதாய மக்களும் முஸ்லிம்களாக மாறியுள்ளனர். அவர்கள் அனைவரும் கடலில் கலந்த நதிகளைப் போல் மற்ற அடையாளங்களை உதறித் தள்ளிவிட்டு, ‘முஸ்லிம்’ என்ற அடையாளத்தோடு காணப்படுகிறார்கள்.
நாம் நினைக்கலாம்… “முஸ்லிம்களுக்குள்ளேயும் பிரிவினைகள் உண்டு” என்று. முஸ்லிம் என்ற பெயரோடு பிரிவின் பெயரை இணைத்து சாதி சங்கங்கள் இஸ்லாமிய சகோதரர்களிடத்தில் இல்லை. மதம் என்ற ஓர் அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களிடையே திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் மதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதே உண்மை. பிரிவுகளை பெரிதுபடுத்துவதில்லை.
கிறிஸ்தவம் என்ற மதத்தின் பெயரோடு சாதியின் பெயரை இணைத்து சங்கங்கள் வைப்பது போன்றவை இஸ்லாமிய மதத்தில் கிடையாது. இந்துத்துவாவின் அடிப்படையில் ஏற்பட்டதே வருணாஸ்ரம தர்மம். வருணாஸ்ரமத்தின் அடிப்படையில் நான்கு வருணங்கள். அவற்றிலிருந்து பிரிந்தவையே சாதிக் கொடுமைகள். பிரிவினைவாதங்கள், ஏற்றத்தாழ்வுகள் ஆகிய கொடுமைகளே பலர் இந்து மதத்திலிருந்து வேறு மதங்களுக்கு மாறுவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. இந்துத்துவாவின் வழியில் ஏற்பட்ட சாதி பிரிவினைகளை உதறித் தள்ளியதன் மூலம் இந்துத்துவாவிலிருந்து முழுமையாக தங்களை விடுவித்துக் கொண்டார்கள் இஸ்லாமியர்கள். இவர்களெல்லாம் இந்துத்துவாவின் சாதியின் பெயரையோ, சாதிக்குரிய அடையாளத்தையோ தங்களோடு இணைத்துக் கொள்ளாமல், முழுமையாக களைந்து விட்டார்கள் என்பது கண்கூடு.
ஆனால் நாம் தேவாலயங்களிலும், பிரார்த்தனைக் கூடங்களிலும் ஒரே பாத்திரத்தில் கலங்கலாக காணப்படும் எண்ணெய்யும், தண்ணீருமாக இருக்கின்றோம். பின்பு எண்ணெய் வேறு, தண்ணீர் வேறாகப் பிரிந்து செல்கின்றோம்.
பெண் கல்வி, பெண் விடுதலை, கைம்பெண் மறுமணம், குடும்ப நலம், சமூக நீதி, சாதி ஒழிப்பு, கலப்புத் திருமணம் ஆகிய சீரிய கொள்கைகளை தனது கவிதைகள் மூலம் வெளிப்படுத்தியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது ஒன்றே ஒன்று மட்டும்தான். அதுதான் ‘சாதி’ என்ற தனது ஆதங்கத்தை இக்கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அவற்றில் சில வரிகள்…
மேதினிக்கு சேசுநாதர் எதற்கடி தோழி? - முன்புவெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா- அந்தப் பாதையில் நின்று பயனடைந்தார் எவர் தோழி? - இந்தபாரத நாட்டினர் நீங்கிய மற்றவர் தோழா - இவர்ஏதுக்கு நன்மைகள் ஏற்றவில்லை உரை தோழி - இங்குஏசுவின் கட்டளை நாசம் புரிந்தனர் தோழாஏசு மதத்தினில் இந்துக்கள் ஏனடி தோழி? - அந்தஇந்துக்கள் தீயிட்ட செந்துக்கள் ஆயினர் தோழா - மிகமோசம் அவர்க்கென்ன வந்தது கூறடி தோழி - அடமுன் - மனு என்பவன் சொன்னதில் வந்தது தோழா - அவன்நாசம் விளைக்க நவின்றது யாதடி தோழி? - சட்டம்நால்வருணத்தினில் நாலாயிரம் சாதி தோழா - ஏசின்ஆசை மதம் புகப் பேதம் அகன்றதோ? தோழி - அந்தத்தொண்டர்கள் உள்ளனர், தொண்டு பறந்தது தோழா - அதைப்போதாக்குறைக்கு முப்போகம் விளைத்தனர் தோழா - அடிஎல்லையில் பேதம் இழைத்தது தான் எவர் தோழி? - அடஇந்த நெடுஞ்சட்டை அந்தகரே அறி தோழா…பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் என்ன தோழி? - இவைபாரத நாட்டுப் பழிச்சின்னத்தின் பெயர் தோழா - இங்குகொஞ்சமும் இப்பழி கொள்ளுதல் நல்லதோ? தோழி - ஒப்புக்கொள்ளும் நிலத்தினில் கள்ளி முளைத்திடும் தோழா - இங்குநெஞ்சினிற் சேசுவின் தொண்டர் நினைப்பென்ன தோழி? - தினம்நேர்மையில் கோயில் வியாபாரம் செய்து தோழி - அந்தக்கோல நற் சேசு குறித்தது தானென்ன தோழா? - ஆஹாகோயிலென்றால் அன்பு தோய்மனம் என்றனர் தோழா - அந்தஆண்டவன் தொண்டர்கள் ஆகிடத் தக்கவர் யாவர் - எனில்அன்னியர், தான் என்ற பேதமில்லாதவர் தோழா!-
நெல்லை மாவட்டத்தில் மீனாட்சிபுரத்தில் முஸ்லிம்களாக மதம் மாறிய ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களை திருமணங்களின் வாயிலாக இஸ்லாமியர்கள் தங்களோடு இணைத்துக் கொண்டார்கள். இதற்கு முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வே காரணம். இந்த உணர்வே இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கைக்கு உரமூட்டுகிறது. இஸ்லாமிய சகோதரர்களிடையே உள்ள நல்ல செயல்களை நாம் முன்னுதாரணமாகக் கொள்வோம்.
கொள்கை ரீதியாகவும், மொழி ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் பல சிந்தனையாளர்களும், சீர்திருத்தவாதி களும், சித்தாந்தவாதிகளும், வேதாந்தவாதிகளும், பகுத்தறிவுவாதிகளும், பொது உடைமைவாதிகளும் மக்களை ஒருங்கிணைக்க முயன்றார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் தோல்வி கண்டார்கள். மார்க்க ரீதியாக மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் என்று அறுதியிட்டு கூறலாம். மேலும், அவர்களிடையே காணப்படும் உலகளாவிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வுக்குக் காரணம், அவர்கள் இன்றவும் உலகளாவிய பொது வழிபாட்டு மொழியைக் கடைப்பிடிப்பதேயாகும்.
பல பெயரை நம் பெயராகக் கொண்டிருக்கின்றோம். அந்தப் பெயருக்குப் பின்னால் சாதியின் பெயரையும், சாதியின் பட்டத்தையும் சேர்த்துக் கொள்வது அந்தப் புனிதரை அவமானப் படுத்துவதற்கா? அல்லது சாதியை பெருமைப் படுத்துவதற்கா? கிறிஸ்தவர்கள் மதத்தைவிட சாதிக்குத்தான் முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. மதத்தின் பெயரால்
நம்மால் ஒன்றுபட முடியுமா?
இந்துக்களோடு சாதியின் பெயரால் உறவுகளை சிலர் நீட்டித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலை நாடுகளில் வெள்ளையர்கள், கருப்பர்கள் என்ற வேறுபாடு கிருத்துவ மதத்தில் பரவலாக முன்பு காணப்பட்டன.
வெள்ளையர்களும், கருப்பர்களும் வேறு வேறு மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். மொழியால், கலாச்சாரத்தால், நாகரீகத்தால், உணவு பழக்க வழக்கங்களால் முற்றிலும் மாறுபட்டவர்கள். வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் நம்மிடையே அவ்வாறு இல்லை. ஒரே மண்ணின் மக்கள். ஒரே மொழியைப் பேசுபவர்கள். கலாச்சாரத்தால், நாகரீகத்தால் ஒன்றுபட்டவர்கள். நம்மிடையே சாதி அடிப்படையில் பிரிவினைகள் ஏற்படுத்தியது ஆதிக்க இந்துக்கள்.
“நாம் பலராயினும் கிருத்துவில் ஒருவரே நம்மில் யூதன் என்றும், கிரேக்கன் என்றும் இல்லை. அடிமை என்றும் சுதந்திர மனிதன் என்றும் இல்லை. ஆண் என்றும் பெண் என்றும் இல்லை” என்று சொன்ன கிருத்துவம் இந்திய மண்ணில் இந்துத்துவாவின் மாமுல்களை மாற்றியமைக்க முற்படாமல் கால் ஊன்றத் தொடங்கியது. இந்நிலை கண்ட தந்தை பெரியார் ஒருமுறை “கிறித்தவ சகோதரர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. வேண்டுமானால் வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.
டாக்டர் அம்பேத்கர் “ஒரு தீண்டப்படாதவனுக்கு தன்னுடைய பழைய மதத்தின் பின் இணைப்பாகவே கிறித்தவ சமயம் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
இந்தியாவை பொருத்தவரை தனித்தன்மையோடு விளங்குபவை முஸ்லிம் மார்க்கம் மட்டுமே. மீதி மதங்கள் அனைத்தும் இந்துத்துவாவின் பாதிப்பிலிருந்து விடுபடாமல் உள்ளன. ஞானஸ்நானம் பெறுகின்றோம், அப்போது நம் மீதுள்ள ஜென்மப் பாவங்கள் கழுவிக் களையப்படுகின்றன. அப்போதே ஜென்மப் பாவத்தினால் ஏற்பட்டுள்ள இந்துத் துவாவின் கறையான சாதியும் நம்மை விட்டு நீங்கியிருக்க வேண்டும். கொசுக்களை வடிகட்டி தூர எறிந்துவிட்டு ஒட்டகத்தை விழுங்கிக் கொண்டிருக்கின்றோம். இந்தியாவில் சிலுவையின் நிழலில் கீறல்கள் காணப்படுகின்றன.
------------------------------------------------------------
மார்க்கம் ரீதியாக மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் என்று அறுதியிட்டு கூறலாம்” என்று கூறும் இக்கட்டுரை ‘எங்கே கிறித்தவம்? யார் கிறித்தவர்?’ என்ற தலைப்பில் தமிழகச் திருச்சபையின் தனிப்பெரும் அரசியல் ஆன்மீக சமூக வார இதழான ‘நம்வாழ்வு’ ஜனவரி 01-08, 2006-ல் பிரசுரமானது
- கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்!!
நன்றி: தலித் முரசு (அக். - நவம்பர் 2005)…!
? கொடிக்கால் செல்லப்பாவாக இருந்த நீங்கள், எந்த ஆண்டு கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்வாக மாறினீர்கள்?
! 1986ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக மாறினேன். 8,9 வயது இருக்கும்போது எங்கள் பகுதியில் தலித், அதற்கு அடுத்தபடியாக நாடார்கள்தான் அதிகமாக இருந்தார்கள். “உயர்சாதி” என்று சொல்லப்படுகிறவர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அறவே எங்கள் பகுதியில் இல்லை. நாடார்களும் தலித்துகளும் பல சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நாடார்களே, தலித்துகள் தங்களுக்குக் கீழ் இருக்க வேண்டும்; தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று அவமானப்படுத்தினார்கள். நாடார்கள் தலித்துகளிடத்தில் நடந்து கொண்ட முறையும் செயல்பாடுகளும் எனக்குள் காயத்தை ஏற்படுத்தியது. இந்தத் தலைமுறை முடிந்து அடுத்த தலைமுறை யாவது நம்மை மனிதர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. கன்னியாகுமரியில் நடைபெற்ற கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 1954ஆம் ஆண்டு கலந்து கொண்டு, சிறை சென்று வெளியில் வந்தோம். சிறைக்குச் சென்று வந்ததால் சமுதாயத்தில் என்னைப் பற்றி ஒரு பார்வை வருகிறது. இது, மிகமுக்கியமான கட்டம். ஏனென்றால், சிறு வயதில் எனக்குப் படிக்கின்ற வாய்ப்பு இல்லை. பொது அறிவு எனக்கு அதிகமாக ஏற்படக்கூடிய நிலை வரும்போது எங்கள் பகுதியில் இருக்கும் இளைஞர்களின் பார்வை மாறுகிறது. எந்தச் சமுதாயம் எங்களை அவமானப் படுத்தியதோ, என்னை ஒதுக்கி வைத்ததோ, அந்தச் சமுதாயத்தினுடைய அடுத்த தலைமுறை என்னை மதிக்கப் புறப்பட்டது.
அடிமை இந்தியாவில், ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன். கலைஞர் கருணாநிதி, முதலமைச்சராக இருந்தபோது, சட்ட மன்றத்தில் ஆதிதிராவிடர் மானியக் கோரிக்கையின் போது ஒரு செய்தியைச் சொல்கிறார்: “எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெளியிடப்பட்ட ஒரு துண்டுப் பிரசுரம் எனக்குக் கிடைத்தது. அதில், சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் ஒற்றைவாடை தியேட்டரில் “ஆரியமாலா” என்ற நாடகம் நடத்த இருப்பதாகவும், அதுகுறித்த செய்திகளைக் குறிப்பிட்டுவிட்டு - அடிக்குறிப்பொன்று அதில் சொல்லப் பட்டிருந்தது. தொழு நோயாளிகள் மற்றும் பஞ்சமர்களுக்கு எக்காரணம் கொண்டும் நாடகம் பார்ப்பதற்கு அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.”
ஒரு சமுதாயம் எவ்வாறு இழிவுபடுத்தப் பட்டிருந்தது என்பதைச் சொல்வதற்கு வேறு வார்த்தைகளே இல்லை. இது, அடிமை இந்தியாவில் நடந்த விஷயம்.
இன்னொரு சம்பவத்தையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஜெகஜீவன்ராம் அவர்கள், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், செல்வாக்கு மிகுந்த தலைவராகவும், துணைப் பிரதமராகவும் இருந்து, அவர் ராணுவ அமைச்சராக இருக்கும்போது ஒரு சம்பவம் நடக்கிறது. காசியிலே சம்பூராணந் சிலையை அவர் திறந்து வைத்துவிட்டு வந்த பிறகு, அவர் ஒரு தலித் என்ற காரணத்தால் அங்கு இருக்கிற சனாதனவாதிகள் எல்லாம் கங்கைக்குப் போய் - தண்ணீர் கொண்டு வந்து சிலையை சுத்தம் செய்து கழுவி, தங்களது சாதி வெறியை உலகிற்கு பகிரங்கமாக தெரிவித்தார்கள். இதை உலகமே பார்த்தது.
எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலைமைகள் இருந்தால், இப்படிப்பட்ட செய்திகள் வந்தால் அவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கக்கூடிய காலத்திலேயே இந்த சம்பவம் நடந்தது. அவர், முப்படைக்கும் தளபதியாக இருந்த காலத்திலேயே இது நடந்தது.
கொடிக்கால் செல்லப்பா அவர்கள் இந்து மதத்திலிருந்து விடுபட்டு இஸ்லாத்தில் இணைந்த சகோதரர் என்பது அனைவருக்கும் தெரியும்.அவர்கள் தலித் முரசு இதழுக்கு அளித்த பேட்டி.(ஆண்டு அக். - நவம்பர் 2005)…!.
இஸ்லாமை நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கான சமூகக் காரணங்களைக் கூறுங்கள்…
! ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சி கோவையில் நடக்கிறது. அந்த நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு மதியம் இரண்டு மணி இருக்கும். அந்த வழியா “ஜனாஸா” ஒன்று கொண்டு வருகிறார்கள். “ஜனாஸா” என்றால் சாவு. அந்த வழியே கொண்டு வருகிறார்கள். அதை அடக்கம் செய்யக் கூடிய நேரம் வந்தது. இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அந்த அடக்கத்தில் நாங்கள் எல்லோரும் கலந்து கொள்கிறோம். அந்த நேரத்தில் ஒரு தகவல் சொல்லப்பட்டது. இறந்துவிட்ட அந்தப் பெரியவர் பேர் தெரியாது. எந்த ஊர் என்றும் தெரியாது. அப்படிப்பட்ட ஆளு அங்க ஒரு அனாதையா இறந்து கிடந்தார்.
அதுமாதிரி இறந்து கிடப்பவர் முஸ்லிம் என்று தெரிந்தால், உள்ளூர் போலீஸோ, அல்லது மருத்துவமனையோ - அங்கிருக்கும் ஜமாஅத்திற்கு உடனடியாகத் தெரிவிப்பார்கள். உடனே ஜமாஅத்தில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்றால் (இன்றும் எல்லா ஜமாஅத்திலும் கடைப்பிடிக்கக்கூடிய ஒன்று. நீங்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்). ஒரு மனிதனுக்கு அடக்கத்திற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் செய்து - அதற்கு மரியாதை செலுத்துவார்கள். அதே மாதிரி, அன்றைக்கு முழு மரியாதை அந்த இறந்துபோன பெரியவருக்குச் செய்யப்பட்டது.
ஆனால், அதேநேரத்தில், தஞ்சை மாவட்டத்தில் ஒரு பெரியவர் இறந்து போய்விட்டார். அந்தப் பெரியவரை அடக்கம் செய்வதற்கு எல்லோரும் போகிறார்கள். அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி முடிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என்று ஒன்று இல்லை. ஆளுநர் ஆட்சி நடக்கிறது. அப்போது தமிழகத்தின் தலைமைச் செயலாளர் திரு. பத்மநாபன், மாவட்ட ஆட்சியர் திரு. ராமு, அம்மாவட்ட எஸ்.பி.யும் ஒரு தலித்துதான். இந்த மூன்று பேருக்கும் மாநில அளவில் முழு அதிகாரம் இருக்கிறது. அதிலும் தலைமைச் செயலாளருக்கு முழு அதிகாரம் உண்டு.
அப்படிப்பட்ட நேரத்தில், அந்தப் பெரியவரின் உடலை அடக்கம் செய்ய கொண்டு போகிறார்கள். அங்கிருந்த சாதி இந்துக்கள் சாலையை இடைமறிக்கிறார்கள். பெரும் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கில் கூடி விட்டார்கள். கலவரம் ஏற்படக்கூடிய ஆபத்து ஏற்படுகிறது. இரண்டு நாளாகப் பிணம் கிடக்கிறது. புதைக்க ஆளில்லை. சாதி இந்துக்கள் புதைக்கவே அனுமதிக்கவில்லை. தோழர்களே! என்ன நடந்தது தெரியுமா? எஸ்.பி.யும், கலெக்டரும் தலித் தலைவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து, “எங்களுக்காக, எங்களுடைய வேலையைக் காப்பாற்றுவதற்காக, தயவுசெய்து விட்டுக் கொடுங்கள்; நாங்கள் ஒரு சிக்கலான கட்டத்தில் இருக்கிறோம். ஆட்சியுமில்லை; எனவே, நாங்கள்தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டும். எனவே, நீங்கள் பிரச்சினை செய்யாதீர்கள்” என்று கெஞ்சுகிறார்கள்.
தெருவில் இருந்த பிணத்தை அவருடைய வீட்டு முற்றத்திலேயே அடக்கம் செய்தார்கள் என்பதுதான் கொடுமையான வரலாறு. இந்தப் பிரச்சினை இன்றுவரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. யாராவது மறுக்க முடியுமா?
ஆனால், ஒருவர் முஸ்லிமாகி விட்டால், அவருக்கு அந்தச் சமூகத்தில் அங்கீகாரம் இருக்கிறது. அவருக்கு முழு மரியாதை கிடைக்கிறது. அவன் ஒருபோதும் அனாதையாக சாக அந்த சமூகம் அனுமதிக்காது. ஆற்றங்கரையிலோ, குளத்து ஓரத்திலோ, ரோட்டு ஓரத்திலோ அல்ல; அந்தக் குறிப்பிட்ட இடத்தில்தான் அவனை அடக்கம் செய்ய வேண்டும். இதுதான் மிகமுக்கியமான சமூகக் காரணம்.
இறைவன் நாடினால் தொடரும்.......
கடவுள் தூதரை அனுப்பியதற்குக் காரணம், தன்னை நேரடியாக "நான்தான்" கடவுள் என்று கூறி மக்களை நம்பவைக்க முடியும். ஆனாலும், தூதுவரை அனுப்பியதற்குக் காரணம், "நான் அனுப்பியதாகச் சொல்லு!" சொன்னால்தான், மக்கள் "கடவுள்தான் அனுப்பினாரா?" என்று சிந்தித்துப் பார்ப்பார்கள், எண்ணிப்பார்ப்பார்கள் என்று.
தத்துவக் காட்டிலே சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கும் உலகுக்கு தக்கதோர் வழிகாட்டும் ஒளி விளக்காக இஸ்லாத்தை நாங்கள் கருதுகிறோம்.
மதம் என்று சாதாரணமாக உணரப்படுவதை போன்றதல்ல இஸ்லாமிய மதம். எனவே இஸ்லாத்திலுள்ள மேலோர் இஸ்லாத்தை மதம் என்று அழைப்பதை விட மார்க்கம் என்றே அழைக்கின்றனர். இஸ்லாத்திலுள்ள ஒளியும், அந்த ஒளியிலுள்ள மாண்பும் வரவேற்கத்தக்கது.
மனித சிந்தனை வளர்ச்சியுறாத காலத்திலே மனிதர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை நீக்கவே தூதர்கள் தோன்றினார்கள். நபிகள் நாயகம் இறுதி நபியாகத் தோன்றியதால் அவர்களுக்கு பின்னரும் பலர் நானும் நபிதான் என்று சொல்லி மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ண முடியவில்லை.
ஆண்டவன் மனிதனுக்குச் சிந்தனையை அருளியதே அவனுடைய தன்மையை அறிந்து கொள்ளத்தான்.
இஸ்லாத்திலே இறைவனுக்கு இணைவைக்கக்கூடாது. என்று கூறப்பட்டிருப்பதை நினைத்து நினைத்து மகிழ்ந்திருக்கிறேன். ஏனெனில் ஆண்டவனுக்கு ஒன்றை இணைவைப்பது என்றால் அதைப் பற்றி முன்னரே அறிந்திருக்கவேண்டும்.
ஆண்டவனுக்கு இணைவைப்பதால் தான், அவனைக்காட்ட எட்டணா தரகு வேலையும் ஆரம்பமாகிறது. இஸ்லாமிய மார்க்கம், மனிதனைப் பூரண மனிதனாக்கத்தக்க மார்க்கமாய் விளங்குகிறது.
ஆண்டவன் தானாகத் தோன்றி உபதேசிக்காமல் தூதர்களை அனுப்பியதேன் என்றால் மனிதர்களுக்கு வெறும் நம்பிக்கையை யூட்டுவதற்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய ஐயங்களைத் தெளிவாக்கி அவர்கள் பின்பற்றுவதற்கு வழிகாட்டிகளாகவே அனுப்பியிருக்கிறான். இஸ்லாமிய மார்க்கம் கூறும் ஆண்டவன் தான், உருவத்திற்குள்ளே தன்னை அடக்கிக்கொள்ளாத ஆண்டவனாக இருக்கிறான். அந்த ஆண்டவனும் சிந்தித்து உணரத் தூண்டுகிறான்.
இஸ்லாத்தின் மிகச்சிறந்த மாண்பு அதன் சமுதாய அமைப்பாகும். சாதிப் பீடையை அது ஒழித்துக்கட்டுவதாகும். முதுகுளத்தூரிலே இன்று அடித்துக்கொண்டிருக்கும் ஹரிஜனும் தேவரும் அப்துல்சத்தாராகவோ, அப்துல் சமதாகவோ மாறிவிட்டால் இந்த வேற்றுமைகள் எல்லாம் மறைந்து விடுகின்றன.....!
கடவுள் தத்துவத்தை யார் யார் பயன்படுத்துகிறார்கள், எப்பொழுது பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆராய வேண்டும். எதையும் கண்டு மருளவோ, மயங்கவோ அச்சப்படவோ கூடாது.யார் என்ன சொன்னாலும், எவர் எப்படி ஆராய்ந்தாலும் அத்தனையையும் தாண்டி ஒரு மார்க்கம் இருக்குமானால் அது தான் நிலைத்து நிற்க முடியும்.சாமான்யர்களின் பேச்சுக்கே ஒரு மதம் நிற்காது என்றால் என்ன அர்த்தம்? நல்ல பொன் என்றால் அது எத்தனை முறை உரைத்துப் பார்த்தாலும் மாற்றுக் குறையாது நிற்கும்.
அதைப் போல இஸ்லாமிய மார்க்கம் யாரால் எப்படி எப்படி ஆராயப்பட்டாலும் நிற்கிறது.எனவே எங்களை இந்த விழாவுக்குத் துணிவுடன் அழைத்துப் பேசச் செய்கிறார்கள். வேண்டுமானால் நவாராத்திரி விழாவுக்கு எங்களைக் கூப்பிட்டுப் பார்க்கட்டுமே! அதற்குத் தைரியம் இருக்கவேண்டும். இதை நீ யார் நிறுத்துப்பார்க்க என்று கூறக்கூடாது. யார் நிறுத்தாலும் எடை சரியாக இருந்தால் தான் அது சரியானதாக இருக்க முடியும்,சிறந்த மார்க்கம்.
இஸ்லாத்தின் உரிய பண்புகள் இதற்கு முன் உலகுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவைப்பட்டதோ அதைவிட இப்பொழுது தத்துவக் காட்டுக்குள் ஒளி தேடி அலையும் இந்த உலகுக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகின்றன.
இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல. ஒரு சிறந்த மார்க்கம். இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய மார்க்கம் சிறந்ததொரு மார்க்கமாக இருப்பதால் உலகில் உள்ள பெருங்குணவான்கள் இஸ்லாத்தை ஒரு மதமாகக் கொள்ளாமல் ஒரு மார்க்கமாகவே கருதுகின்றனர்.நான் மதத்தைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கும் இங்கு நடைபெறும் நபிகள் நாயகம் விழாவிற்கும் முரண்பாடு இல்லை. இஸ்லாத்தை ஒரு மார்க்கமாகக் கருதி நான் இவ்விழாக்களில் கலந்து கொள்கிறேன்.இஸ்லாமிய மார்க்கம் ஏன் சிறந்ததெனப் போற்றப்படுகிறதென்றால், மனிதனுக்கு என்னென்ன ஐயப்பாடுகள் ஏற்படுகின்றனவோ அதையெல்லாம் நீக்கக் கூடிய வகையில் அதில் நல்ல கொள்கைள் இருக்கின்றன. நபிகள் நாயகத்தின் போதனைகளில் ஒன்று, "ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது" என்பதாகும். இந்தப் போதனையை நான் நெஞ்சம் நெக்குருக எண்ணிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.ஏன் நான் இந்தப் போதனையைச் சிறப்பாகக் கூறுகிறேன் என்றால், இப்போதனை மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. "ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது. ஏன் இணை வைத்தல் ஆகாது? ஆண்டவன் எப்படி இருக்கக் கூடும்? என்றெல்லாம் சிந்தனைக்கு வேலை கொடுத்து ஆண்டவன் இப்படியிருக்கக்கூடும் என்று சிந்தனை முடிவடைவதில்லை. எனவேதான், பழந்தமிழர் மக்கள் "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்". "பார்த்தவர் சொன்னதில்லை. சொன்னவர் பார்த்ததில்லை" என்று கூறியிருக்கிறார்கள்.
கடவுள் தன்மையின் தத்துவமே இதுதான். ஆண்டவனுக்கு இணை வைத்தால் ஆண்டவனுக்கு முன் ஒருவரை வைக்க வேண்டும். அந்த ஒருவர் யாராக இருக்க வேண்டும்? யாருக்குத் தெரியும்! அதனால்தான் ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது என்ற போதனையை நபிகள் நாயகம் கூறியிருக்கின்றார். மற்ற மார்க்கத்தில் இணைவைத்துக் கூறிய காரணத்தால்தான், எங்களைப் போன்றவர்களுக்கு ஏராளமான மாற்சரியங்கள் தோன்றின.

இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. முதுகுளத்தூரில் ஒருவர் தலையை ஒருவர் சீவிக்கொள்ளும் தேவர், தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது, இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.
இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், 'உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்' என்று எழுதியிருக்கிறார்.
நபிகள் நாயகத்தை மகான் என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால், 1957 ஆம் ஆண்டில் சாதி ஒழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச்சொன்னால் எங்களை ஒடஒட விரட்டுகிறார்கள் என்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு தெய்வங்களை வணங்கிய மக்களிடம் நீ வணங்கும் கடவுள் இதுவல்ல, நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்ல என்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும், அந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னதே அதுவும், அவரை 'மகான்' என்று கொண்டாடக்காரணம். இப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம் தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறது என்றால் அது ஆச்சரியமில்லை.
மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, 'மதம்' எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.
மதத்தைப் பற்றிச் சில பொதுவான கருத்துக்ளை கூற விரும்புகிறேன்.யார் என்ன சொன்னாலும், எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் பொதுவாக மதத்தில் நம்பிக்கை குறைந்து வருகிறது. இதை நான் சொல்லுவதால் வருந்துவதில் பலனில்லை. சற்று ஆராய வேண்டும்.
இன்றைய சூழ்நிலை என்ன, நல்ல தத்துவம் ஏன் நம்பிக்கை இழக்கிறது? ஆராயவேண்டும். யார் பேரிலோ பழிபோடுவதிலே பயனில்லை. நம்பிக்கை குறைவதற்குக் காரணம் என்ன? கருத்துப் பரப்பும் இயந்திரம் பழுதுபட்டிருக்கிறது.அச்சடிக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது, எட்டாம்பக்கத்தில் மட்டும் கொஞ்சம் எழுத்துப் படாமலிக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்ன? அச்சுப்பொறியிலே பழுதா, அல்லது பழுத்துக்கோர்த்தவர் தவறா என்று பார்த்தால், எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அச்சடிக்கையில் எல்லாப் பக்கமும் பட்டு, எட்டாம் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் படவில்லை. அதற்குக் காரணத்தைக் கண்டு பிடிக்க இயலவில்லை. ஆனாலும் பழுது எங்கே இருக்கிறது? அதைக் கண்டு பிடித்தால் தான் சரியாக அச்சாகும்.இதற்கு யாரைக் கேட்பது? ஜோதிடரையா கேட்பது? ஜோதிடரைக் கேட்டால் உனக்கு அஷ்டமத்திலே சனி. அதனாலே எட்டாம் பக்கம் அச்சாகவில்லை என்பார். அச்சுத் தொழில் நுணுக்கம் தெரிந்தவரிடம் சொன்னால், அவர் நன்கு ஆராய்ந்து பார்த்து விட்டுப் பிறகு சொல்லுவார் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. அச்சுப்பொறியிலோ, அச்சுக்கோத்ததிலோ பழுதில்லை, ஆனால் எட்டாம் பக்கம் அச்சாகும் இடத்தில் ஒரு நூலிழை எழுத்தின் உயரம் குறைந்திருக்கிறது. அதை உயர்த்தினால் சரியாக எழுதப்படும் என்று கூறி கையாலே எழுத்தைத் தடவிப் பார்க்கச் சொல்லுவார். தடவிப்பார்த்தால் அப்பொழுது நமக்கு உண்மை விளங்கும்.
அதைப் போல பழுது இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்கவேண்டும்.மார்க்கத் துறையிலுள்ள தூய கருத்துக்கள் சரியான வழியில் சரியான நோக்கத்தில் பரப்பப்பட வேண்டும்.கருத்தை உபதேசிப்பவர்கள் உபதேசித்தபடி நடந்து காட்ட வேண்டும். உபதேசிக்க என்று ஒரு கூட்டம், உபதேசித்தபடி நடப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கக்கூடாது.
நபிகள் நாயகம் சொன்னார். சொல்லியபடி நடக்கிறேன் என்று நடந்து காட்டினார். அப்படி மற்றவர்களும் நடந்து காட்டினால்தான் உலகத்தில் சாந்தி, சமாதானம், சமரசம் எல்லாம் நிலவும்.