அதிரை எக்ஸ்பிரசின் வாசக சகோதர, சகோதரிகளுக்கு முதற்கண் என் இனிய அஸ்ஸலாமு அலைக்கும்.
நேற்று பெய்த மழையில் முளைக்கும் காளான்கள் போல், ரமளான் மாதம் வந்து விட்டால் நமதூரில் ஆங்காங்கே முளைக்கும் வாடா, சம்சா கடைகள்.
பங்குச்சந்தை வர்த்தகம் போல் பரபரப்பாக நோன்பின் மாலை நேரங்களில் நடக்கும் சம்சா,வாடா வியாபாரம். அதனால் அதில் ஈடுபடும் ஏழை, எளிய மக்களின் வறுமை சற்று நீங்கும்.
நம்மூரில் ரமளான் மாதத்தில் நம் குடும்ப, சொந்த பந்த உறவுகளை வலுப்படுத்த (குறிப்பாக சம்மந்தி வீடு) ஒருவருக்கொருவர் ரமளான் பரிசாக் கொடுத்து மகிழும் நோன்பு கஞ்சி, வாடா மற்றும் சம்சா எப்படியெல்லாம் சொந்த, பந்த உறவுகளின் இணைப்புப் பாலமாக விளங்குகிறது என்பது ஒரு ஆச்சரியம் கலந்த உண்மை.
பிறை 17ம் நாள் "பதுருப்படை" அன்று நம் முஹல்லாவுக்குள் ரொட்டி, தேங்காய் வசூலிக்க வேற்று முஹல்லாவாசிகள் நுழைந்து விட்டால் ஏதோ எல்லை தாண்டி வந்த அண்டை நாட்டு ராணுவத்தினர் போல் அவர்களிடம் கடுமையாக அணுகும் முறையை நம்மில் யாரும் மறக்க முடியுமா?
ஜக்காத் கொடுக்கும் நேரங்களில் நம்மூரில் வசதி படைத்தவர்களின் வீடுகளின் வாசல்களில் ஏழை, எளியோரின் வரிசை நியாய விலைக்கடைகளில் (ரேசன்) அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் போல் நிற்கும்.
இரவு நேர விளையாட்டுக்களில் தேநீர் இடைவெளிக்காக வித்ரு தொழுகை சமயம் பள்ளிக்குச் சென்று தேநீர் அருந்தி விட்டு வந்ததை சம்மந்தப்பட்டவர்கள் மறக்க அல்லது மறுக்க முடியுமா?
தேவையில்லாமல் தெருச் சண்டைகளை விலைக்கு வாங்கி வருவதும், வீடுகளின் வாயில்களில் உள்ள கொய்யா,மாதுளை, மாங்காய் மற்றும் தேங்காய் போன்ற கனிவர்க்கங்களை விளையாட்டாய் அதன் பாவம் அறியாது பறித்து வருவதும் இந்நேரத்தில் தான்.
பெருநாள் நெருங்க, நெருங்க துணிக்கடைகளிலும், தையல் கடைகளிலும் கூட்டம் அலை மோதும். பெருத்த லாபமும் அவர்களுக்குப் போய்ச் சேரும்.
பெருநாள் இரவு நல்ல பல அமல்கள் செய்து இறைவனிடமிருந்து பள்ளிகளில் அமல்களின் மூலம் கூலி வாங்குவதற்குப் பதில் தையல்கடைக்காரர்களுக்கு கூலி கொடுப்பதில் தான் நேரங்கள் செலவிடப்பட்டன என்பதை யார் தான் மறுக்க முடியும்?
பெருநாள் அன்று உடல் மேனி மறைக்க சட்டை அணிந்தோமோ, இல்லையோ? ஆனால் சட்டைப் பாக்கெட்டில் இருக்கும் புது சலவை நோட்டு தெரிய "மார்ட்டின்" சட்டையை விரும்பி அணிந்ததெல்லாம் ஞாபகத்தில் வராமலா போய் விடும்?
சாதாரன நாட்களில் செல்லாத சொந்த, பந்த வீடுகளுக்கெல்லாம் செல்வோம். காரணம் இல்லாமலா? பாக்கெட்டை கனமாக்கத்தான். "பெருநாள் காசு".
பெருநாள் ஒரு நாளுக்கு முன்பாகவே கடைத்தெருவில் உள்ள "பரீதா" மற்றும் "வின்னர்" சைக்கிள் கடைகளில் எல்லா சைக்கிள்களும் நாள் வாடைகைக்காக எடுக்கப்பட்டிருக்கும் பெருநாள் முழுவதும் சுற்றித் திரிய.
பெருநாள் அன்று நம் பள்ளிகளில் பெருநாள் அழைப்பு விடுக்க "நகரா" அடிக்க நியாய விலைக் கடைகளில் வரிசையில் நின்றது போல் நின்றதெல்லாம் ஞாபகம் வந்து உள்ளத்தில் பரவச மூட்டிச் செல்கின்றன.
ஒரு காலத்தில் நாம் பொருளாதரத்தில் பின் தங்கி தான் இருந்தோம். ஆனால் வாழ்க்கையை மன நிம்மதியுடன், சந்தோசமாகத்தான் கழித்து வந்தோம்.
ஆனால் இன்று நம்மவர்களுக்கு அன்றாடம் வரும் புதிய, புதிய பிரச்சினைகளும், வயது வித்தியாசமில்லாமல், காரணமில்லாமல் வரும் புதிய, புதிய நோய்களும் நம் மன அமைதிக்கு வேட்டு வைத்து விடுகின்றன.
இவையாவும் இன்றைய (மேலேக் கூறப்பட்டவைகளை ரமளான் மாதத்தில் பார்க்க வாய்ப்புகள் குறைந்து போன) நம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் மனக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த நான் எடுத்துக் கொண்ட சிறு முயற்சியே.
சிறு வயது முதல் இன்றுவரை செய்த எங்களின், பெற்றோர்களின், உற்றார், உறவினர்களின், நண்பர்களின், நம் ஊர்வாசிகளின் மற்றும் உலகை விட்டுச் சென்ற நம்மவர்களின் எல்லாப் பாவங்களையும், குற்றம், குறைகளையும் இப்புனித ரமளானின் பொருட்டால் யா அல்லாஹ்! மன்னித்து எல்லாவற்றிலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக! ஆமின். யாரப்பல் ஆலமீன்.
நம் எல்லாப் பிரச்சினைகளையும் தொழுகை மூலம் இறைவனிடம் முறையிட்டு அதற்கான பலாபலன்களை அடைந்து கொள்வோமாக இன்ஷா அல்லாஹ்...
நீங்கள் எங்கிருந்தாலும் இறைவன் அருட்கொடையால் எல்லா வளங்களும் பெற்று நலமுடன், சந்தோஷமாக வாழ வேண்டும் என இப்புனித ரமளானில் இறைவனைப் பிரார்த்தித்தவனாக.
எம்.ஐ. நெய்னா முகம்மது.
சவுதியிலிருந்து.
இன்னும் ஓரிரு நாட்களில் புனித மிக்க ரமழான் மாதம் நம்மை வந்தடைய இருக்கிறது. அதனைப்போற்றும் விதமாக அதிரை எக்ஸ்பிரஸின் வாசகர்கள் தங்களது கருத்தாக்கத் திறமையை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம்.
மிகச்சிறப்பான முறையில் பங்களிக்கும் நபருக்கு சிறப்புப் பரிசாக ரூ 2000/- வழங்கப்படும். பங்குபெறும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் உண்டு (இன்ஷா அல்லாஹ்)
இப்புனித மிக்க ரமளான் மாதத்தில் அதிரை முஸ்லிம்களின் கலாச்சாரம் பற்றி எந்த ஒரு தலைப்பிலும் அதிரை எக்ஸ்பிரஸிற்கு உங்கள் ஆக்கங்களை அனுப்பலாம்.
* நோன்புக்காலங்களில் அதிரை, சிறப்பிக்கப்படும் பள்ளிவாசல்கள், ஹிஜ்ப் ஓதும் நிகழ்ச்சிகள், மார்க்க சொற்பொழிவு இடங்கள் etc...
* நோன்புக்கால அதிரை புகைப்படங்கள் (பள்ளிவாசல்களில் கஞ்சி ஊற்றும் நிகழ்ச்சி, பெருநாள் தொழுகைகள், etc...)
* சிறப்புச்செய்திகள், 'பத்ரு படை'(?) கூட்டம், நார்சா விவரங்கள், உங்கள் குடும்ப குழந்தைகளின் முதல்(தல) நோன்பு செய்திகள், சிறுவயது ஹாபிழ்கள் தொழவைக்கும் நிகழ்ச்சிகள் போன்றவை.
* ரமழான் சிறப்புக் கட்டுரைகள்
* நோன்புக்கால சிறப்பு உணவுப்பதார்த்தங்கள் செய்வது எப்படி (வாடா, கஞ்சி, கடப்(ற்)பாசி போன்றவை...), சத்தான உணவுகள், ரமழான் துணுக்குகள் ...
* ரமழான் மாதத்தில் அதிரையின் இரவுப்பொழுதுகள் (கபாப் கடைகள், புதிய தேனீர் கடைகள், பக்கிரிசாவின் மேலம், வித்ருத்தொழுகை, கண்விழிக்கும் இளைஞர்கள் ...)
* நோன்புக்காலங்களில் நடக்கும் அனாச்சாரங்கள், தவிர்க்கும் வழிகள்...
நீங்கள் பார்க்கும் அதிரையை அப்படியே புகைப்படங்களாகவோ, கட்டுரைகளாகவோ, செய்திகளாகவோ அனுப்பிவைக்கலாம்.
நீங்கள் கலந்து கொண்ட (நோன்பை ஒட்டிய) ஒரு நிகழ்வை (இப்ஃதார் நிகழ்ச்சி...) அப்படியே உங்களது சுய வலைப்பதிவாக எண்ணிப் பதியலாம்.
உங்களது ஆக்கங்கள் அனைத்தும் அதிரை முஸ்லிம்களின கலாச்சாரத்தை பிரதிபலிப்பனவாக இருக்க வேண்டும். மேற்கண்ட வகையில் சிறப்பான முறையில் பங்களிப்பாற்றும் புதிய வாசக பங்களிப்பாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன(இன்ஷா அல்லாஹ்).
குறிப்பு:1. போட்டியில் பங்குபெற உங்களது பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை adiraixpress[at]gmail.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவேண்டும்.
2. உங்கள் படைப்புகளை adiraixpress[at]gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்
3. கட்டுரைகள், செய்திகள் யுனிகோட் தமிழில் தட்டச்சிடப்பட்டிருக்கவேண்டும்.
4. உங்களது ஆக்கங்கள் அனைத்தும்
http://adiraixpress.blogspot.com என்கிற இந்த வலைப்பதிவில் இடம்பெறும்.
5. ஏற்கெனவே பங்களிப்பாளராக உள்ளவர்களும் இந்தப்பணியைச் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட மாட்டாது.
6. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அதிரை எக்ஸ்பிரஸ் பங்களிப்பாளர்களாகி தொடர்ந்து எழுதலாம்.
டிஸ்கிளைமர்:மேற்சொன்னவை அதிரையில் நடந்த/நடந்துவரும் விசயங்களே. ரமழான் மாதம் அமல்கள் மூலம் நன்மைகளை அறுவடை செய்யும் மாதம். எனினும் சினிமா, வீடியோகேம், கேரம், கிளித்தட்டு, SMS என நேரத்தை வீணடிக்காமல், அதிரையின் கலாச்சாரத்தைப் பதிவு செய்து வைத்தால், அவற்றின் நல்ல/கெட்ட விசயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்பாகும் என்பதே எங்களின் நோக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.
வாழ்த்துக்கள்!!!
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் அனைவரது சார்பில் தங்களுக்கு புனித ரமளான் வாழ்த்துக்கள். ரமளான் மாத்த்தில் அடைந்துகொள்ள வேண்டிய பேறுகளை தாங்களும், தங்களது குடும்பத்தினர் அனைவரும் அடைந்து கொள்ள அல்லாஹ்விடம் நெஞ்சார துஆ செய்கிறோம்.
அதிரை பைத்துல்மாலின் மக்கள் நலத் திட்டங்களில் முதன்மையானது ஜகாத் நிதி வசூலும், பங்கீடுமாகும். இறைமறைக் கட்டளைக்கு ஏற்ப 8 வகையான நபர்களுக்கு, தகுதிக்கு ஏற்ப மொத்தமாக வழங்கப்படுகிறது. இது தவிர ஏழ்மை, வறுமை, இயலாமை, வருமானமின்மை, பிணி, மூப்பு போன்றவைகளால் அவதியுறுபவர்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் நேரடி விசாரணையின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத உதவித்தொகையாக ரூ 250 வீதம் 58 பேருக்கு வழங்கப்படுகிறது.
ஜகாத் நிதி வேறெந்த திட்டத்திற்கும் பயன்படுத்தப்படுவதில்லை. முழுக்க முழுக்க ஏழை, எளிய மக்களின் உதவிக்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறோம். வறுமையிலும், ஏழ்மையிலும் வாடும் மக்களுக்கு உரிய உதவியை உரிய நேரத்தில் வழங்குவதற்கு ஜகாத் நிதியைத் தவிர வேறெந்த நிதி ஆதாரமும் அதிரைபைத்துல்மாலிடம் இல்லை. தாங்கள் வழங்கும் ஜகாத், ஸதக்கா, நேர்ச்சை, உதவிகள் தான் நிதி ஆதாரமாக உள்ளது.
எனவே, தாங்கள் மனமுவந்து கணிசமான அளவில் ஜகாத் நிதியை வழங்கி ஆதரவு நல்கிட அன்புடன் வேண்டுகிறோம். தங்களது உதவிக்கு பன்மடங்கு நன்மையை இம்மையிலும், மறுமையிலும் தங்களுக்கு வழங்கிட அல்லாஹ்விடம் நெஞ்சார துஆ செய்கிறோம்.
வஸ்ஸலாம்,
தங்கள் நலம் நாடும்,
பேரா. S. பரக்கத், M.A.,M.Phil, M.Ed.,PGDTE.,
தலைவர்
A. முனாப், B.A, B.L.,
செயலர்