விவசாயிகளுக்கு செய்த நன்மைகள்! தீரர் திப்பு சுல்தான் அவர்களின் வாழ்கை வரலாறு பாகம் 6
"ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்'' என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.
1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
தகவல் உதவி அபு ஜுலைஹா