பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்!
அதிரை-ட்ரூத் (http://adirai-truth.blogspot.com) என்ற வலைத்தளத்தில் நமதூரில் நடக்கும் மார்க்கத்திற்கு விரோதமான அனாச்சாரங்கள் குறித்தும், அவற்றைக் கண்டும் காணாமல் மெளனிகளாக இருக்கும் உலமாக்கள் குறித்தும் அபூசுமையா என்ற சகோதரர் எழுதி இருந்தார். அல்லாஹ்வின் பொருத்தத்தைநாடி உண்மையைச் சொல்லீயே தீர வேண்டும் அக்கரையுடன் எழுதப்பட்டுள்ளது. அதேசமயம் அப்பதிவின் சிலகருத்துக்களைக் குறித்துப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கந்தூரி எனும் தர்ஹா வழிபாடு மற்றும் தரீக்கா எனும் தனிமனித வழிபாடு ஆகிய மார்க்கவிரோதச் செயல்களுக்கு நமதூரில் இருக்கும் ஆலிம்களைக் குறைகூறி எழுதப்பட்டிருந்தது. நானறிந்தவரை நமதூர் இளம் ஆலிம்கள் இவ்விசயத்தில் தெளிவாகத் தங்களது எதிர்ப்புகளை அவ்வப்பொழுது பதிவு செய்து வந்துள்ளார்கள் என்றே நினைக்கிறேன். ஒருசில மூத்த வயது ஆலிம்களும்கூட இத்தகைய அனாச்சாரங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் நேரிலும் பகிரங்கமாகவும் கண்டித்து வந்துள்ளனர்.
இயக்கம் சாராத, ஆள்பலமற்ற, உள்ளூரில் நிரந்தர வருமானத்திற்குக்கூட வழியில்லாத, பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாத ஏழ்மை நிலையிலேயே பெரும்பாலான ஆலிம்கள் இருந்து வருகிறார்கள். இச்சூழலில் ஈமானின் கடைநிலையாகிய தீமைகளை மனதளவில் வெறுத்து, ஆலிம் பட்டம் பெற்ற பாவத்திற்காக!!! பயான்களில் பிரசிங்கம் செய்வதைத் தவிர அவர்களால் வேறெதுவும் செய்ய முடியாத நிலையிலேயே உலமாக்கள் உள்ளனர்.
இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைக்கும் தர்ஹாக்கள் தரை மட்டம் ஆக்கப்படவேண்டிய அவமானச் சின்னங்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவற்றை மேற்படி எவ்வித பின்பலமும் இல்லாத உள்ளூர் ஆலிம்கள்தான் முன்னின்றுச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா?
அல்லாஹ்வின் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டியதில் ஆலிம்களின் பங்கு மகத்தானது மட்டுமின்றி அவர்களின் கடமையும்கூட என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், நம்நாட்டுச் சட்டப்படி இத்தகைய அனாச்சாரங்களை தடுத்து நிறுத்த முன்வரும் மார்க்க அறிஞர்களுக்குப் பாதுகாப்புண்டா? தனி நபர்கள் சட்டத்தைக் கையிலெடுக்கக் கூடாது என்பதும் நம்நாட்டு சட்டம் என்று தெரிந்தும் ஆலிம்களைக் குறைசொல்வதும் நியாயமா?
தமிழக அளவில் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காகவும், தவ்ஹீது எழுச்சிக்காகவும் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றார்கள்.தர்ஹாக்களுக்கும் தரீக்காவுக்கும் எதிராக பிரச்சாரங்கள் மற்றும் பிரசுரங்களை வெளியிடுவதோடு இத்தகைய அனாச்சாரங்கள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு, பொதுமக்களையும் விழிப்படையச் செய்வதற்கு மக்கள் ஊடகங்களைக் கையில் வைத்திருக்கும் இவர்களைவிட தகுதியானவர்கள் யாருளர்?
சக்தியும் செல்வாக்குமிக்க இவர்களோ பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டும், மாபெரும் ஊர்வலங்களுக்கு உம்மத்களை அலைகடலென குடும்பத்துடன் அழைத்து, தங்கள் மக்கள் செல்வாக்கைக் காட்டுவதிலுமே நேரத்தையும் சக்தியையும் செலவளிக்கிறார்கள்.
நமதூரில் மதரஸாவில் மார்க்கக் கல்வி பயிலும்/பயின்று ஆலிம்களாக இருப்பவர்களில் பலர் உலகக் கல்வியில் ஆர்வமின்மையால் அல்லது வறுமையின் காரணமாகவே ஹாபிழ்களாகவும் ஆலிம்களாகவும் இருக்கக் கூடும். உலகக் கல்வியின் பின் தங்கியிருப்பதால் உள்நாடு / வெளிநாடு வேலைவாய்ப்புக்கு வழியின்றி உள்ளூர் செல்வந்தர்களின் நிறுவனங்களில் ஏதாவது வேலை செய்து காலந்தள்ளும் அவலத்தில்தான் அவர்களின் நிலையுள்ளது. பல உலமாக்கள் இண்டெர்நெட்டிலும் ஈமெயிலும் என்ன பேசப்படுகிறது என்றுகூட அறிவதில்லை.
இந்த இலட்சனத்தில் பிரமுகர்கள் செல்வாக்குள்ள தர்கா டிரஸ்டிகளையும், தரீக்கா ஆராதனையாளர்களையும் வெளிப்படையாக எதிர்ப்பது கிட்டத்தட்ட இயலாத ஒன்றே. சில வருடங்களுக்கு முன்பு, நோன்புப் பெருநாள் பிறை விசயத்தில் ஆலிம்களின் கருத்தைத் தூக்கியெறிந்து பெருநாளன்று நோன்பு நோற்றவர்களைக் கொண்டுள்ள நம்மூரில் ஆலிம்கள் சொல் சபையேறும் என்று எதிர்பார்க்க முடியாது.
இத்தகைய அவலங்களும் அனாச்சாரங்களும் துடைத்தெறியப்பட வேண்டும் என்றால் ஊர்மக்களை ஒரே தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டும். ஊர் ஜமாத்தின் மார்க்கச் சட்டம் இயற்றும் அதிகாரத்தை உலமாக்களுக்கு வழங்கிவிட்டு, இதை மறுதலிப்பவர்களை இனம்கண்டு ஊர்விலக்கமும்கூட செய்ய முடியும். ஆக, ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு உலமாக்களுக்கு உரிய கண்ணியம் கிடைக்காதவரை இத்தகைய அவலங்களை துணிந்து எதிர்க்க அவர்கள் முன்வரவாய்ப்பில்லை!
அதிகாரமற்ற, செல்வாக்கற்ற ஆலிம்களைக் குறை கூறுவதால் மென்மேலும் அவர்களுக்குத் தாழ்வுமனப்பான்மை மட்டுமே அதிகரிக்கும்! மதரஸாக்களில் மார்க்கக் கல்வி பயிலும் ஆர்வத்தையும் குறைக்கவும் கூடும் என்பதை மனதில் வைத்து எதார்த்தமான நிலையுடன் எழுதலாமே!
குறிப்பு: இத்தகைய அனாச்சாரங்களை ஊக்குவிப்பதாக ஆலிம்களை மட்டும் குறைகூறுவதாகப்பட்டதாலேயே இப்பதிவில் என் கருத்துக்களைப் பதிந்து உள்ளேன். மற்றபடி, தர்கா மற்றும் தரீக்கா ஆராதனைகள் ஒழிக்கப்பட வேண்டியதே என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.
<<<அபூஅஸீலா-துபாய்>>>