மார்க்க விசயங்களில் வேறுபடும் அதிரை முஹல்லாக்கள்!
மிக சிறந்த சீர்திருத்தக்கட்டுரை "பராஅத் இரவும் பித்அத்களும்". இந்த கட்டுரை படித்தவுடன் பின்னூட்டம் எழுத ஆரம்பித்தேன், ஆனால் அது ஒரு ஆக்கம் எழுதும் அளவிற்கு என்னை இழுத்து சென்றது நம்மூரை பற்றி நினைத்தவுடன்.
ஒரு விசயம் மட்டும் எனக்கு புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. நம்மூரில் மரைக்காப்பள்ளிக்கு ஒரு மார்க்க சட்டம் பிற பள்ளிகளுக்கு ஒரு மார்க்க சட்டமா?. மவ்லிது, பராஅத் இரவில் யாசீன் ஓதுதல், போன்ற பித்-அத்துகள் ஒரு போதும் மரைக்காப்பள்ளியில் நடந்ததும் கிடையாது, நடத்தவும் முடியாது.
முக்கியமான மார்க்க ஆலோசனை கூட்டமெல்லாம்(மசூரா) மரைக்காயர் பள்ளியிலேயே நடைபெற்று வருகிறது என்பது நமக்கெல்லாம் தெரியும். மார்க்க கூட்டத்தில் நம்ம ஊரில் உள்ள உலமா பெருமக்கள், அனைத்துப்பள்ளி இமாம்கள் மற்றும் இளம் மவ்லவிகள் பங்கேற்கின்றன. பித்-அத்துக்கள், மூட பழக்க வழக்கங்கள் போன்றவைகளை களைவதற்கு மசூராவில் இதுவரைக்கும் பேசபட்டுள்ளதா? இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுள்ளதா? அப்படியே பேசி முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் மசூராவில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த பள்ளி இமாம்கள் முன் வரவில்லையா? அல்லது செயல்படுத்த மறுக்கிறார்களா?
மற்ற பள்ளிகளில் மட்டும் மவ்லிது போன்ற பித்-அத்துக்கள் இன்றும் நடைப்பெற்று வருகிறதே இதற்கு யார் காரணம்?
பள்ளியின் இமாமா?
பள்ளியின் நிர்வாகமா? அல்லது
முஹல்லாவாசிகளா?
யாராக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும். மிக சிறந்த ஆலிம்களையும், துடிப்புள்ள இளம் மவ்லவிகளையெல்லாம் அதிரை அதிகமாக பெற்றிருந்தும் நம்மால் இது போன்ற மார்க்கத்திற்கு புறம்பான காரியங்களை விட்டும் மக்களை தடுக்க முடியவில்லை என்பது வேதனைக்குரிய விசயம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மனிதர்களில் மிகவும் கெட்டவன், இரண்டு முகம் கொண்டவன். இவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும், அவர்களிடம் செல்லும் போது வேறு முகத்துடனும் செல்கிறான்'. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 5076, புகாரி 7179.
எங்க ஊரில் அதிகமான ஆலிம்கள், அதிகமான ஹாபிழ்கள், அதிகமான மத்ரஸாக்கள் என்று பெருமையடித்தால் மட்டும் போதுமா?
மார்க்க விசயத்தில் அருகாமையில் உள்ள ஊர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய நாமே இப்படி பித்-அத்துக்கள், மவ்லிது, ஹத்தம் பாத்திஹா, கந்தூரி போன்ற அனாச்சாரங்களில் மூழ்கிக்கிடப்பது வெட்கப்பட வேண்டிய விசயம்.
மார்க்க சீர்த்திருத்தவாதிகள் நிறைந்து இருக்கும் நம்மூரில் இது போன்ற பித்அத்துக்கள் அரங்கேருவதற்கு யார் காரணம்?
பித்-அத்துக்களுக்கு எதிராக மசூராவில் முடிவுகள் எடுக்கப்படுகின்றதா? இல்லையா?
மசூராவில் எடுக்கப்படுகின்ற முடிவுகள் மரைக்காயர் பள்ளி முஹல்லாவிற்கு மட்டும்தானா?
மசூராவில் எடுக்கப்படுகின்ற முடிவுகளை மற்ற முஹல்லாகளுக்கு தெரியபடுத்தாமல் மறைக்கப்படுகின்றனவா?
இது போன்ற கேள்விகளே அதிரை மக்களின் நீண்ட நாள் விடை தெரியாத வினாக்கள்.
-அப்துல் பரக்கத்.
