தொலைந்துபோன அதிரை பஞ்சாயத்து!
தெருப்பெருமை அல்லது பழங்கதை பேசிமகிழும் நோக்கமின்றி, எதிர்கால இளைய தலைமுறையினர் அழிந்துவிட்ட நமது அடையாளர்ங்களைத் தெரிந்து கொள்ளவும், தொலைந்துவிட்ட நம் பாரம்பர்யப் பெருமைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக இதைப் பதிவு செய்கிறேன்.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்புவரை தஞ்சை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி முஸ்லிம்கள் மட்டுமின்றி மாற்றுமத மக்களின் மார்க்க மற்றும் பொதுவான வழக்குகளைத் தீர்த்து வைக்கும் நீதிமன்றமாக அதிராம்பட்டினம் திகழ்ந்தது என்பதை நம்மில் எத்தனைபேர் அறிவோம்?
அரசியலும் மதவாதமும் கைகோர்க்கும் 1990ஆம் ஆண்டின் தொடக்கம்வரை காதிர் முஹைதீன் கல்விக் குழுமங்களின் தாளாலரும் அதிரை நகரப் பேரூராட்சியின் சேர்மனுமாகிய மர்ஹூம் S.M.S ஷேக் ஜலாலுதீன் (தச்சர் தெரு/சேர்மன்வாடி), மர்ஹூம் A.M.S.ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் (ஆஸ்பத்திரி தெரு), மர்ஹும். கோ. முஹம்மது அபூபக்கர் ஆலிம் (ஆஸ்பத்திரி தெரு) ஆகியோர் நன்கு அறிமுகமானவர்கள். இவர்களிடம் வரும் வழக்குகளை இந்தியச் சட்டம் மற்றும் ஷரீஅத் சட்டங்களுக்கேற்ப ஆய்வுசெய்து நியாயமான தீர்ப்பு வழங்குவார்கள் என்று நம்பப்பட்டது.
'நடுத்தெருவான் நாணயஸ்தன்' என்ற சொலவடையும் அதிரை நகரத்தில் புழக்கத்தில் இருந்தது. நாணயத்திற்குப் பணம் என்ற பொருளிருந்தாலும் நேர்மை, வாய்மை, உண்மை என்றும் பொருள் கொள்ளப்படும். அதிரையின் பெரும் நிலக்கிழார்களாக நடுத்தெருவாசிகள் என்றறியப்படும் நடுத்தெரு, ஆஸ்பத்திரி தெரு, செட்டித் தெரு, ஆலடித் தெரு,செக்கடித் தெரு மற்றும் புதுமனைத்தெரு பகுதியைச் சார்ந்தவர்கள் இருந்துள்ளார்கள்.
ஜப்பான்,இலண்டன் அமெரிக்கா என அதிரைவாசிகள் பொருளீட்டச் செல்ல பல ஆண்டுகளுக்கு முன்பே பர்மாவுக்கும், இலங்கைக்கும் வர்த்தகம் செய்து பொருளீட்டியுள்ளார்கள். கோனா ஆலிம்ஷா சந்ததியினரால் இலங்கையில் (சம்மாந்துறை என்று நினைக்கிறேன்) இறையில்லத்துடன் கூடிய குர்ஆன் மதரஸாவையும் கட்டி நிர்வகித்துள்ளார்கள். ஒவ்வொரு ரமலான் மாதமும் சுற்றுவட்டார ஏழைகளுக்கு அதிகமான ஜகாத் நிதி வழங்குவதிலும் மேற்படி தெருவாசிகள் முன்னனியில் இருந்திருக்கிறார்கள். (இங்கு மற்ற தெருவைச் சார்ந்தவர்களை குறைத்து மதிப்பிடுவதாகக் கொள்ள வேண்டாம்).
இப்படியாக, நீதி மற்றும் நிதியில் சிறந்து விளங்கிய அதிரையின் அருந்தவப் புதல்வர்களைக் கொண்டிருந்த நாம்,நிதிக்கும், நீதிக்கும் யாராரை எல்லாமோ நண்பர்களாக்கிக் கொண்டு, கூழைக்கும்பிடு போட்டு பிழைக்கும் அவல நிலைக்கு யார் காரணம்? ஜப்பான்,அமெரிக்கா,லண்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளிலிருக்கும் நமதூர் மக்களிடம் இன்று ஓரளவு செல்வம் இருந்த போதிலும்,அக்கால மக்களுக்கிருந்த மதிப்பும் மரியாதையும் இருக்கிறதா? என்பதையும் அறியக் கடமை பட்டுள்ளோம்.
செல்வமும் நேர்மையும் கொண்டிருந்தவர்கள் மார்க்க அறிஞர்களுடன் கூட்டணி சேர்ந்திருந்தக் காரணத்தால்தான் நீதிக்கும் நேர்மைக்கும் அதிரை முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்டது என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும். அத்தகைய மார்க்க அறிஞர்களால் பயிற்றுவிக்கப்பட்ட இன்றைய ஆலிம்களுக்கு நாம் உரிய மரியாதையைக் கொடுக்கிறோமா?இதற்கு யார் காரணம்? என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
<<<அபூஅஸீலா-துபாய்>>>