நல்லவர் தீமையைத் தடுக்கட்டும்.
''நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக'' திருக்குர்ஆன், 031:017)
''நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்'' (திருக்குர்ஆன், 013:022)
நன்மைகளைச் செய்வதோடு தீமைகளையும் களைந்து, களைய முன் வர வேண்டும். தான் மட்டும் நல்லவனாக வாழ்ந்தால் போதும் மற்றவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? என்றிருப்பவர் தீமையைத் தடுத்தவராகமாட்டார்.
''அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள்'' உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)'' என்று கூறினர். (திருக்குர்ஆன், 007:164)
''அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்'' (திருக்குர்ஆன், 007:165)
இவ்வசனத்தில் தீமையைத் தடுத்தவர்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டார்கள் என்றும், தீமையைச் செய்தவர்களும், அதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தவர்களும் தண்டிக்கப்பட்டார்கள். என்றும் கூறப்படுகிறது. நல்லவன் என்பது தாமும் நல்லவனாக வாழ்ந்து, வலிமைக்கேற்றவாறு தீமையைத் தடுக்கவும் வேண்டும்.
''எனது உயிர் எவனது கையில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நீங்கள் நன்மையை ஏவுங்கள், தீமையைத்தடுங்கள் (தவறினால்) அல்லாஹ் தண்டனையை உங்களுக்கு அனுப்புவான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)
''யாரேனும் ஒரு தீமையைக் கண்டால் அதைக் கையால் தடுக்கட்டும், அதற்கு சக்தி பெறாதவர் தமது நாவால் தடுக்கட்டும், அதற்கும் இயலாதவர் தமது உள்ளத்தால் அதை வெறுக்கட்டும். இதுவே ஈமானின் கடைசி நிலையாகும்'' (முஸ்லிம், திர்மிதீ)
தீமையைத் தடுக்காதவர் நல்லவனாக வாழ்ந்தும் புண்ணியமில்லை, அவர் தண்டனைக்குரியவர் என இன்னும் பல கருத்துக்களில் இஸ்லாம் உரைக்கின்றது.
ஓர் அழகிய உதாரணம்:
அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்தில், இடம் கிடைத்தது.கீழ் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) 'நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம், நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்' என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, திர்மிதீ)
கப்பலில் கீழ் தளத்தில் பயணிப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று விட்டால் கப்பலில் பயணிப்பவர் அனைவரும் கடலில் மூழ்கும் அபாயம் எற்படும். அவர்கள் தடுக்கப்பட வேண்டும். கீழ் தளத்திலுள்ளவர்களை நோக்கி ''நீங்கள் தண்ணீர் எடுக்க வருவது எங்களுக்கு எவ்வித சிரமத்தையும் ஏற்படுத்திடவில்லை'' என்று கூறுவதோடு, அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்க உதவுவதும் அவர்களைத் தீமை செய்வதிலிருந்து தடுக்கும். இதுவே, நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பது.
சமுதாயத்தில் விளையும் தீமைகளை, ஒவ்வொரு தனி மனிதனும் தனது சக்திக்கு ஏற்றவாறு தடுத்திட வேண்டும். இது குறித்து நாளை அவன் விசாரிக்கப்படுவான்.
மார்க்கத்தை நிறைவேற்ற முடியாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்ற கருத்தில் இஸ்லாமும் அறவுரை வழங்கியுள்ளது. நபியவர்களும் முஸ்லிம்களும் மக்காவை விட்டு வெளியேறிய சம்பவம் இதற்கு முன்னுதாரணமாக உள்ளது.
''சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் படிந்த தூசியைத் தட்டிவிட்டு வெளியேறுங்கள்'' இந்த அறவுரை தனி மனிதனுக்கு வேண்டுமானால் பொருந்தாலாம். ஓர் அரசுக்குப் பொருந்தாது. அநீதி எங்கு நடந்தாலும் வலிமைப் பெற்ற அரசு அதைத் தட்டிக்கேட்க வேண்டும். அதுவும் தீர்க்கத்தரிசிகள் தலைமையில் அமைந்த அரசு அநீதியை எதிர்த்துப் போரிட தயக்கம் காட்டக்கூடாது.
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை ஏற்றவர்களின் வாழ்க்கைக்கு ரோமானியர்கள் நெருக்கடி கொடுத்து வந்தனர். தங்களுக்கு கீழுள்ளவர்கள் யாராவது இஸ்லாத்தை ஏற்றால் அவரைக் கொன்றனர். ரோமர்களின் அடக்கு முறைகளையும், அத்து மீறல்களையும் கண்டித்து, அவர்களுடன் போர் தொடுக்குமுன் விடுக்கப்படும் இஸ்லாத்தின் அழைப்பும் எச்சரிக்கையும் முறையாக மன்னர்களுக்குக் கடிதம் வழியாக எழுதப்பட்டது. எழுதியவர்: ஆன்மீகத் தலைவர், ஆட்சியின் தலைவரான - இஸ்லாமியப் பேரரசின் மாமன்னர் நபி (ஸல்) அவர்கள்.
இக்கட்டுரைக்கான தொடுப்பு:
http://abumuhai.blogspot.com/2008/07/blog-post_16.html