குமுறும் குடும்பங்கள் ''பொய் வழக்கில் அல்லாடுறோம்.''
தமிழகமெங்கும் பயங்கரவாதிகள் குண்டு வைக்கவிருப்பதாக வரும் செய்திகளைத் தொடர்ந்து கோயில், குளம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் என்று எல்லா இடங்களையும் போலீஸ் குடாய்ந்துகொண்டிருக்கிறது. சென்னை புழல் சிறையில் அலி அப்துல்லா மூலம் இதற்கான சதி உருவானதாகச் சொல்லும்காவல்துறை, நெல்லையைச் சேர்ந்த ஷேக் அப்துல் கபூர், ஹீரா, சென்னை மண்ணடியைச் சேர்ந்த அப்துல் காதர் ஆகியோரைக் கைது செய்திருக்கிறது. தப்பியோடியதாகக் கூறப்பட்ட அபுதாஹிர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தலைமறைவாக உள்ள 'இறைவன் ஒருவனே' அமைப்பின் தலைவர் தவுபீக்கை வலைவீசித் தேடிவருகின்றனர். இந்நிலையில், சர்வதேச மக்கள் வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோகரன் தலைமையிலான உண்மை அறியும் குழு கைதானவர்களின் குடும்பங்களைச் சந்தித்துள்ளது.
அந்தக் குழுவின் தலைவர் மனோகர னிடம் பேசினோம். ''தமிழகத்தில் திராவிட இயக்கங்களும், தமிழ்த்தேசிய அமைப்புகளும் இஸ்லாமிய இயக்கங்களோடு எப்போதுமே தோழமையோடு செயல்பட்டுவருகின்றன. பொது மக்களைக் கொல்லக்கூடிய அளவு நிலைமை இங்கே மோசமாக இல்லை. விசாரணையே இல்லாமல் பத்தாண்டுகளுக்கும் மேலாக பல முஸ்லிம் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க வேண்டுமென்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்துவரும் வேளையில், அவர்களின் சிறைவாசத்தை நீட்டிப்பதற்காகத் திட்டமிட்டே காவல்துறை பொய்ச்செய்தி பரப்பிவருகிறது.
பெட்ரோல் உள்ளிட்ட விலைவாசி உயர்வால் மக்கள் கொந்தளித்துப ்போயிருக்கிறார்கள். அவர்களுடைய கோபம் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் பிரச்னையைத் திசை திருப்ப தீவிரவாத பீதியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். 'என்னை என்கவுன்ட்டர் செய்ய முயன்றால், தமிழகத்தையே குண்டு வைத்துத் தகர்ப்பேன்' என்று தவுபீக் சொன்னதாகச் சொல்கிறார்கள். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பொய்க்குற்றம் சுமத்தப் பட்ட தவுபீக், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு நிம்மதியாக வாழ்ந்துவந்தார். உளவுத்துறை, அவரைத் தங்களின் உளவாளியாக மாறச்சொல்லி நெருக்கடி கொடுத்தது. இதை எதிர்த்த காரணத்துக்காக, ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் அவரை சம்பந்தப்படுத்தியதுடன், இந்துத் தலைவர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும், சுற்றி வளைத்தபோது தப்பிவிட்டதாகவும் கதை கட்டியிருக்கிறார்கள்'' என்றார்காட்டமாக.
தவுபீக்கின் அண்ணன் சாதிக்கிடம் பேசினோம். ''என் தம்பிக்கு மூன்று குழந்தைகள். கல்யாணமாகிப் பத்து வருஷங்கள் ஆகிறது. சின்ன வயதிலிருந்தே நியாயத்துக்காகக் குரல் கொடுப்பான். 2004 சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு ஐந்தாயிரம் வாக்குகள் பெற்றான். அவனை வாபஸ் வாங்கச்சொல்லி 13 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுப்பதாகச் சொன்னார்கள். அவர்களை அவமானப்படுத்தியதற்காகவும், ஓட்டுகளைப் பிரித்ததற் காகவும் சிலர் கோபத்தில் இருந்தார்கள். காவல்துறைக்கு மட்டும் லஞ்சம், வழக்கு என்று இதுவரை 21 லட்ச ரூபாய் செலவழித்திருக்கிறோம். ஆனா லும், எங்களை விடவில்லை. முஸ்லிமாகப் பிறந்தவர்கள் யாரும் இங்கே வாழக்கூடாதா? போலீஸாரால் எங்களுக்கு வாடகை வீடு கிடைக்கவில்லை. வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. எங்கள் குடும்பங்களில் யாரும் பெண் எடுப்பதோ பெண் கொடுப்பதோ அறவே நின்று விட்டது. போலீஸாரிடம் கேட்டால், 'எல்லாம் மேலிடத்து பிரஷர்' என்கிறார்கள். இந்தியாவில் அப்பாவி இஸ்லாமியனாகப் பிறப்பதைவிட செத்துப்போவதே மேல்'' என்றார் இயலாமையோடு.
மண்ணடி அப்துல் காதரின் அம்மாவான பஷீரா, ''கண்ட நேரங்களில் காவல்துறை வீட்டுக் கதவைத் தட்டுகிறது. மண்ணடியில் ரெடிமேட் வியாபாரம் செய்துகொண்டிருந்த என் மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள். அவனை விடுவிக்கச்சொல்லி மேலதிகாரிகளுக்குத் தந்தி கொடுத்தேன். நீதிமன்றத்தில் வழக்குப் போடலாம் என்றிருந்த சமயத்தில் தீவிரவாத முத்திரை குத்தி அவனை சிறையில் அடைத்துவிட்டார்கள்'' என்றார்.
அபுதாஹிரின் அம்மாவான ரம்ஜான் பீவியோ, ''என் பையன் துணி வியாபாரம் செய்துகிட்டிருந்தான். அவனை தவுபீக்கின் கூட்டாளி, குண்டு வைக்கத் திட்டமிட்டான்னு சொல்லிட்டதால போலீஸ§க்குப் பயந்து தலைமறைவாயிட்டான். 'அவனை ஒப்படைக்கலைன்னா என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்னு போட்டுடுவோம்'னு போலீஸ் மிரட்டியது. எங்களுக்கு போன் செய்தப்ப அபுதாஹிர்கிட்ட இதைச் சொன்னோம். அதனால எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தான். எந்தக் குற்றமும் செய்யாத அவனைப் பொய்வழக்குப் போட்டு சித்ரவதை செய்துவருகிறார்கள்'' என்றார்.
தவுபீக், அபுதாஹிர், அப்துல் காதர் ஆகியோரின் வழக்கறிஞர் ரஜினிகாந்த்திடம் பேசியபோது, ''கைது செய்யப்பட்ட மூவரிடமும் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கி மிரட்டி வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள். அதை வீடியோவிலும் பதிவு செய்திருக்கிறார்கள். இந்துமதத் தலைவர்களைக் கொல்லத் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கு, சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் பூக்கடை இன்ஸ்பெக்டர் மணிவண்ணனைச் சந்தித்தபோது, 'தவுபீக்கை என்கவுன்ட்டர் செய்யும் திட்டமெல்லாம் கிடையாது.
அப்துல் காதரைக் காப்பாற்றும் எண்ணத்தில்தான் அவரைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளோம். பத்திரிகைகளில் வரும் செய்திக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது' என்றார். உளவுத்துறை ஐ.ஜி-யான ஜாஃபர் சேட்டைச் சந்திக்க முயன்றோம். அவர் மறுத்துவிட்டார். யாரையாவது என்கவுன்ட்டர் செய்தால் பதவி உயர்வு கிடைக்கும். பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி அதிக நிதி பெறலாம் என்ற நோக்கத்தில்தான் போலீஸார் இப்படிச் செயல்படுகின்றனர்.
இவ்விஷயத்தில் தொடர்ந்து நடைபெறும் மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். உண்மை அறியும் குழுவின் சார்பாக இது குறித்து நாங்கள் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யவிருக்கிறோம்'' என்றார்.
- பாலா