அதிரை எக்ஸ்ப்ரஸ் எங்கே செல்கிறது?
அதிரை எக்ஸ்ப்ரஸில் சமீப நாட்களாக நடக்கும் கருத்துப்பரிமாற்றங்களால் இதை எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதிரை/அதிரைவாசிகள் குறித்தச் செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளவும்,மறைந்துகிடக்கும் எழுத்தாற்றலையும் கருத்தாக்கமாக்கி ஊடகப் பயிற்சி பெறவுமே அதிரை எக்ஸ்ப்ரஸ் என்ற இத்தளம் தொடங்கப்பட்டது.
அல்லாஹ்வின் பேரருளால் நமதூர் அல்அமீன் பள்ளிவாசல் பிரச்சினையை உலகலாவிய அளவில் நம்மக்களிடம் எடுத்துச் சென்று, பொய்வழக்குகளில் தேடப்பட்டவர்கள் சட்டரீதியாக வெளிவருவதற்குத் தேவையான நிதியுதவி கிடைப்பதில் பெரும்பங்காற்றியது. மட்டுமின்றி, அதிரை நகரப் பேரூராட்சி மன்றத்தின் முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வையும், தொடர்ந்த அதிகாரத் துஷ்பிரயோகங்களையும் ஓரளவு வெளிச்சம்போட்டுக் காட்டியது.
மேலும், சிறுநீரகம் மற்றும் இதய சிகிச்சைக்கு மருத்துவ நிதியுதவி கோரிய விளம்பரத்தைப் முகப்பில் பிரசுரித்ததுடன்,சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு அரசின் நிதியுதவி கிடைக்கவும் உதவியது.அல்ஹம்துலில்லாஹ்!
இணையமும் ஈமெயிலும் இல்லாதவர்களே இல்லை என்ற நிலையில் நம் மக்கள் குறித்தச் செய்திகளை ஊடகங்களில் தேடிப்பிடித்து தேவைப்படின் மொழியாக்கம்,எழுத்துருமாற்றம் செய்து அனைவரையும் சென்றடையச் செய்து வருகிறோம். எழுத்தாற்றல் மிக்கவர்களை ஊக்குவித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர அதிரை எக்ஸ்ப்ரஸ் ஓர் வடிகாலாகச் செயல்படுகிறது.
எழுத நேரமில்லாதவர்கள் அரட்டை அரங்கச் சாளரத்தில் ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துக்களைப் பதிக்கவும், பின்னூட்டம் மூலமாக தொடர்புடைய அல்லது மாற்றுக் கருத்துக்களையும், எவ்விதத்தடையுமின்றி பதிக்கவும் வசதியுள்ளது. சுருக்கக்கூறின் ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்த நமது செய்திகளை குறிப்பாக அதிரைவாசிகள் குறித்தவற்றை ஒளிவுமறைவின்றி பகிர்ந்து கொள்ளும் நோக்கில்தான் இலவசமாகக் கிடைக்கும் இத்தளத்தைப் பயன்படுத்தி வருகிறோம்.
எவ்வித முன்முடிவுமின்றி, விருப்பு/வெருப்பின்றி, எந்த இயக்கத்தையும் சார்ந்து/எதிர்த்து எழுதாமல் உண்மையை உள்ளபடிச் சொல்லவே அதிரை எக்ஸ்ப்ரஸை கூட்டாக,சேவை மனப்பான்மையுடன் இணைந்து இயங்கி வருகிறோம்.
இணையத்தில் கிடைக்கும் வசதிகளைக் கொண்டு யார் வேண்டுமானாலும் இலவசமாக இதுபோன்ற சேவையைச் செய்ய முடியும்.ஆனால் தனிநபர் கையாளும்போது தெரிந்தோ தெரியாமலோ தன் விருப்பு வெருப்புகளுக்கு இடமளித்து நோக்கம் நிறைவேறாமல் போகக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு கூட்டாக மாறுபட்ட கருத்துக்களையும் அனுமதித்து வாசகர்களின் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறோம். நமதூரைச் சார்ந்தவர்கள் தயங்காமல் இங்கு சுதந்திரமாக எழுத அனுமதிக்கிறோம். சிலபாதுகாப்புக் காரணத்திற்காகவும், நம்கபத்தன்மையை உறுதி செய்வதற்காகவும புதிய பதிவர்களின் உண்மை அடையாளங்களை அறிந்து கொண்டு தளத்தில் எழுத அனுமதிக்கிறோம்.
சமீபநாட்களாக அரட்டை மற்றும் பின்னூட்டங்களில் கருத்திடுபவர்கள் நிதானம்தவறி, உணர்ச்சிவயப்பட்டு, பெயரை மட்டும் வைத்து யாருடன் உரையாடுகிறோம் என்றே தெரியாமல் மனம்போக்கில் கருத்தாடுகிறார்கள். ஊடகங்களில் நமதூர் பெயர் சமீபநாட்களாக பரபரப்பாகப் பேசப்பட்டதால் பத்திரிக்கையாளர்கள்,உளவுத்துறையினர், ஊடகத்துறையினர் உட்பட நமதூர் பற்றிய செய்திகளை இணையத்தில் தேடும்போது அதிரை எக்ஸ்ப்ரஸ் முன்னனியில் வந்து நிற்பதால் இங்கு நடைபெறும் கருத்துப்பரிமாற்றங்கள் பலராலும் கவனிக்கப்படுகிறது என்பதை நினைவுறுத்துகிறோம்.
தனிநபர் விமர்சனம், இயக்கவெறி,தெருப்பாகுபாடு போன்ற ஊர்ஒற்றுமைக்கு ஊறுவிளைக்கும் செயல்களை அதிரை எக்ஸ்ப்ரஸ் அனுமதிக்காது. சுயமாக எழுதலாம் என்பதற்காக கட்டுப்பாடின்றி இதில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை குறைந்தபட்சம் இத்தளத்தில் மென்மேலும் உரையாட முடியாதவாறு தடுக்க முடியும். தேவைப்பட்டால் நிரந்தரமாக தடுக்கவும் மட்டுறுத்தல் செய்யவும் முடிந்தபோதிலும் ஒருசிலரின் பொறுப்பற்றச் செயலுக்காக பலருக்கும் பயன்படும் இவ்வசதிகளை தடுக்க விருப்பமின்றியே தவிர்த்து வருகிறோம்.
சிலமாதங்களுக்குமுன் நமதூரில் தனிநபர்களிடையே நடந்த ஹராமானச் செயலை யாரோசில விஷமிகள் சீடிக்களாகவும்,நோட்டிஸாகவும் சிலருக்கு அனுப்பி வைத்து "அதிரை எக்ஸ்ப்ரஸுக்கு நன்றி"என்றும் குறிப்பிட்டுள்ளது எங்கள் கவனத்திற்கு வந்து அதிர்ச்சி அடைந்தோம். அவர்களுடன் அதிரை எக்ஸ்ப்ரஸிற்கு எவ்விதத் தொடர்புமில்லை என்பதையும் இங்கு தெளிவு படுத்த விரும்புகிறோம்.
சுதந்திரமாக எழுத வாய்ப்பளித்திருக்கும்போது பதிவாக, முடிந்தால் சொந்தப் பெயருடன் அல்லது அதிரைவாசிகள் அறிந்து கொள்ளும்படியான புணைப் பெயருடன் எழுதலாம். இனியும் சம்பந்தப்பட்டவர்கள் உணர மறுத்தால் மேற்கண்ட தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கும் நிர்ப்பந்தத்தை அதிரை எக்ஸ்ப்ரஸ் குழுவினருக்குத் தரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இணையத்தில் பொதுவானச் செய்திகளை அந்தந்த தளங்களில் சென்றே படிக்கும் வசதி இருப்பின் அவற்றைக் காப்பி பேஸ்ட் செய்யாமல் சுட்டியை அரட்டை அரங்கத்திலோ அல்லது பின்னூட்டமாகவோ சுட்டலாம். விகடன், நக்கீரன் போன்ற இணைய சஞ்சிகைகளில் இடம்பெறும் செய்திகளை பணம் செலுத்தி வாசிப்பவர்கள் விரும்பினால் யூனிக்கோட் எழுத்துருவில் சேமித்து மின்மடலாக அனுப்பி வைத்தால் அதிரை எக்ஸ்ப்ரஸ் பரிசீலித்து பதிவாக மீள்பதிவு செய்யலாம்.
அதிரை குறித்த செய்திகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்பதால் முடிந்தவரை நமதூர் குறித்தச் செய்தியைக் கண்டவர்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்க. அமெரிக்கா,ஜப்பான்,ஆஸ்திரேலியா,லண்டன், மலேசியா, சிங்கப்பூர்,வளைகுடா நாடுகள் மற்றும் சென்னை,அதிரை எனப் பகுதிவாரிச் செய்திகளை எழுத விரும்பும் அதிரைவாசிகள் தயங்காமல் மடல் தொடர்பு கொள்ளவும். தேவைப்படின் வலைப்பூ குறித்த பயிற்சியுடன் எங்களுடன் இணைந்து எழுதவும் வாய்ப்பளிக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தயவு செய்து தெருப்பாகுபாடு, இயக்கவெறி, தேவையற்ற தனிநபர் சாடல் / துதிபாடல் போன்றகருத்துப் பரிமாற்றங்களை அதிரை எக்ஸ்ப்ரஸ் அரட்டை அரங்கிலோ அல்லது பின்னூடத்திலோ யாரும் செய்ய வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இங்கு நடக்கும் கருத்துப் பரிமாற்றங்கள் நம்மனநிலையை பிறர் உடனடியாக அறிந்து கொள்ள உதவுகிறது என்பதை மனதில் இருத்தி கண்ணியமாகவும், ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றக் களமாக அதிரை எக்ஸ்ப்ரஸ் தொடர்ந்து இயங்க உதவுங்கள்.
இச்சேவையை மென்மேலும் சிறப்பாகச் செயல்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மின்மடல் மூலமோ அல்லது பின்னூட்டமாகவோ பகிர்ந்து கொள்ளுங்கள். புரிந்து கொள்ளலுக்கு நன்றி!
அன்புடன்,
அதிரை எக்ஸ்ப்ரஸ் குழு
adiraixpressஅட்gmailடாட்com