ஆலிம்களின் நிலை
நமதூரில் நடக்கும் அனாச்சாரங்களைத் தட்டிகேட்பதில் ஒரேயொரு ஆலிம் தவிர மற்ற எல்லா ஆலிம்களும் கடமை தவறியதாகச் சொன்னதில் முழு உண்மையில்லை என்பதையும், ஆலிம்களுக்கு உரிய கண்ணியம் காக்கப் பட்டக் காரணத்தால் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் வழக்குகளைத் தீர்க்கும் பஞ்சாயத்துத் தீர்ப்பாயமாக அதிரை விளங்கியது என்பதை முந்தைய பதிவிலும் பார்த்தோம்.தற்போதைய நமதூர் ஆலிம்களின் நிலையை நடுநிலையுடன் அலசினால்,அவர்கள் மீதான விமர்சனங்களின் நியாயம் விளங்கும். எனவே, முந்தைய பதிவுகளின் தொடர்ச்சியாக இப்பதிவை வாசிக்கவும்.
நமதூரில் ஹாபிழ்களாகவும் ஆலிம்களாகவும் ஏதோ நேர்ச்சைக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகளைப் போன்று குறிப்பிட்ட சிலரே பரம்பரை பரம்பரையாக இருந்து வருகிறார்கள்.பெரும்பாலும் பள்ளிக்கூடம் செல்லாமல் அல்லது வீட்டுக்குக் கட்டுப்படாத பிள்ளைகளைத் திருத்தி தர்பியத் பண்ணுவதற்காக மதரஸாவிற்கு அனுப்புகிறார்கள் அல்லது ஆலிம்சா வீட்டில் பிறந்த பாவத்திற்காக(?) பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்திவிட்டு மதரஸாவிற்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
பெண்களைப் பொருத்தவரை, பருவ வயதடைந்த பின்னர் ஆண்கள் பயிலும் பள்ளிக்கூடம் சென்றால் கெட்டுப்போய்விடக்கூடும் (?!) என்று பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு,வீட்டில் 'சும்மா' இருக்காமல் குர்ஆன் ஓதிப் பட்டம் பெற்றால் திருமணத்திற்கான உபரித்தகுதியாக இருக்குமென்ற காரணத்தால் தான் பெரும்பாலான பெண்கள் மதரஸாவிற்கு அனுப்பப் படுகிறார்கள்.
(உலகக் கல்வி, (மறுமை)மார்க்கக்கல்வி என்று முஸ்லிம்கள் கல்வியைப் பிரித்தததால் பொதுக்கல்வி என்றால் என்னவென்றே அறியாமல் சிலரும், மார்க்கக் கல்விக்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்று சிலரும் கல்வியை விட்டு தூரமாகி விட்டார்கள். இதையும் மீறி இரண்டு கல்வியிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மிகச் சொற்பமானவர்களே இருக்கிறார்கள். மதரஸாக்களில் நவீன கல்விகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன என்பது ஆறுதலான செய்தி!)
ஆலிம், ஹாபிழ் பட்டம் பெற்றவர்களில் பலருக்கு உலகக் கல்வியின்றி போனதால் சாதாரண டைப்பிஸ்ட் வேலைக்குக்கூடத் தகுதியற்று கருணை அடிப்படையில் கிடைக்கும் வேலைகளைச் செய்து காலம்தள்ள வேண்டும். தெரிந்த நிறுவனங்களில்கூட "குர்ஆன் ஓதி முடித்திருக்கிறார்;ஐவேளை தொழுவார்! பொய் பேசமாட்டார்" என்று இவையெல்லாம் ஆலிம்களுக்கும் ஹாபிழ்களுக்கும் மட்டுமே உரித்தானதுபோல் பேசி ஏதாவது ஒரு வேலை போட்டுக் கொடுங்க! என்றுதான் பெரியமனிதர்களின் சிபாரிசுகள் இருக்கும்!
குர்ஆனைக் கற்ற/ கற்பித்த பாவத்திற்காக!?! மற்றவர்ர்களைப்போன்று சிகை, ஆடை அலங்காரங்களைப் பண்ண முடியாது! ஜிப்பா, தொப்பி, தாடி, மழித்த மீசை இவைதான் இவர்களின் அடையாளங்கள்! இவற்றை விடுத்து வேறு தோற்றத்தில் காணப்பட்டால் "பேருக்குத்தான் ஆலிம்சா! போட்டிருக்கிற ட்ரஸைப் பாரு!" என்ற எள்ளலுடன் அர்ச்சனைகளையும் ஏற்க வேண்டும்! சுருக்கமாகச் சொல்வதென்றால் ஆலிம் என்றால் அவருக்கு இவ்வுலகில் எதுவுமேயில்லை என்ற மனப்பான்மை தெரிந்தோ தெரியாமலோ நம்மில் பலரிடம் குடிகொண்டிருந்தது.
பொதுக்கல்விக்குச் சீருடை, போக்குவரத்து, டியூசன் போன்ற இத்யாதிகளை பேரம்பேசாமல் செலவளிக்கத் தயங்காத நாம்,ஈருலகிலும் நன்மை பயக்கும் குர்ஆனின் அரிச்சுவடியைப் போதிக்கும் பள்ளி உஸ்தாதுகளுக்கு அவ்வாறு மனமுவந்து வழங்குவதில்லை.பள்ளிகளில் பெரும்பாலும் உஸ்தாதுகளாக லெப்பைக் குடும்பத்தைச் சார்ந்தவர்களே இருந்து வந்தார்கள். இவர்கள்தான் தேவையற்ற அனாச்சாரங்களை மார்க்கமாக்கி, உண்மையான ஆலிம்களின் தரத்தைக் குறைத்தார்கள்.தகுந்த ஊதியம் வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது வேறு தொழிகளில் ஈடுபடுத்தியிருந்தாலோ மார்க்கத்தின் பெயரால் நடந்த பல அனாச்சாரங்கள் தடுக்கப்பட்டிருக்கக் கூடும்!
பெரும்பாலும் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் விழாக்களில் கிராஅத் ஓதவும், விருந்து வைபங்களில் பாத்திஹா ஒதவும், ரமழான் மாதத்தில் தராவிஹ் தொழவைக்கவுமே ஆலிம்களும் ஹாபிழ்களும் நம் நினைவில் வருகிறார்கள். இந்தளவுக்குத்தான் இருந்தது நாம் அவர்களுக்கு வழங்கிய அங்கீகாரம்! இடித்துரைப்பவரரை ஆலோசகராகக் கொண்டிராத மன்னன்கூட கெட்டழிவான் என்பது தெரிந்தும், நம்மில் எத்தனை பேர் ஆலிம்களின் இடித்துரைத்தலைக் கேட்டிருக்கிறோம்?
தெருக்களில் விளையாடும் பருவந்தொட்டு ஆலிம்களைக் கண்டால் சந்து பொந்துகளில் ஓடிஒளிந்தவர்கள் அல்லவா நாம்? நோன்பு, பெருநாள் பிறை விசயத்தில் நம்மில் எத்தனைபேர் ஆலிம்கள் பேச்சைக் கேட்டிருக்கிறோம்? அப்போதெல்லாம் எங்கிருந்தார்கள் குறைகூறும் 'திடீர்' SO & SO வாதிகள்?தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மதரஸாக்களை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி இஸ்லாத்தை அழித்தொழிக்கும் ஒருகூட்டம் குர்ஆனைக் கற்றவர்களை தனிமைப் படுத்தியதென்றால்,இன்னொரு கூட்டம் இவர்களை எள்ளி நகையாடி,வசைபாடி,தாங்களே இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லி இறைமறையை நெஞ்சில் ஏந்திய ஆலிம்களுக்கிருந்த கொஞ்சநஞ்ச மரியாதையையும் கெடுத்தார்கள்.
ஹத்து,தாயத்து எழுதி/ஓதிக்கொடுப்பவர்களுடன் குர்ஆன் ஓதிக் கொடுக்கும் மாண்புமிகு ஆலிம்களையும் சேர்த்தனர். வாழும் வகையற்று,வயிற்றுப் பிழைப்பின்றி குர்ஆன் மதரஸாவில் ஆசிரியர் தொழிலுக்கு ஊதியம்பெற்றக் காரணத்தால் ஆலிம்களை 'புரோகிதர்கள்' என்று கொச்சைப் படுத்தினர்! இத்தனை இழிவுகளையும் அவமானங்களையும் சுமந்து, விடாப்பிடியாக சுன்னத்தான அடையாளங்களுடன் நம்கண்முன் உலாவிக் கொண்டிருக்கும் ஆலிம்களைப் பற்றி யாரோ ஒரு 'உலவி' சொன்னதைக் கேட்டு 'உண்மை' என்று வசைபாடுவது நியாயமா? என்பதை வாசகர்களின் தீர்ப்புக்கே விட்டு விடுவோம்!
<<<அபூஅஸீலா-துபாய்>>>