புலனாய்வுத் துறையின் காவி(லி)த்தனம்.
ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புகள் : இராசஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கடந்த மே 13 அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பான விசாரணையானது, சி.பி.ஐ., ரா, ஐ.பி. உள்ளிட்ட அனைத்துப் புலனாய்வு அமைப்புகளும் காவிமயமாகியிருப்பதை மீண்டுமொருமுறை அம்பலப்படுத்திக் காட்டி விட்டன. இக்குண்டு வெடிப்புகள் நடந்த மறுநிமிடமே, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்இதொய்பா, வங்காள தேசத்தைச் சேர்ந்த ஹர்கத் அல்ஜமாத்இஇஸ்லாம், இந்திய முஜாஹிதீன் உள்ளிட்ட சில முசுலீம் தீவிரவாத அமைப்புகள் மீது பழி போடப்பட்டது. குண்டு வைத்த சதிகாரர்கள் என விளம்பரப்படுத்தப்பட்டு, ஓரிரு முசுலீம்களின் உருவப் படங்கள் வெளியிடப்பட்டன. இராசஸ்தான் மாநில போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், 500 முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நடவடிக்கைகளின் மூலம், குண்டு வெடிப்போடு தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடித்தாகிவிட்டது; இனி வழக்கு நடத்தி, அவர்களுக்குத் தண்டனை அளிக்க வேண்டியது தான் பாக்கி என்கிற மாதிரியான பிம்பம் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக, இந்துக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது. ஆனால், இவ்வழக்கு சம்பந்தமான புலனாய்வுகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன என்பதும்; போலீசார் தங்களின் தோல்வியை மறைத்துக் கொள்ளும் ஒரு தந்திரமாகவே, கைது எண்ணிக்கையைக் காட்டியுள்ளனர் என்பதும் தற்பொழுது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
இக்குண்டு வெடிப்பை நடத்திய சதிகாரர்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்ட உருவப்படங்கள் தற்பொழுது போலீசாராலேயே கைகழுவப்பட்டு விட்டன; ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் ஆர்.டி.எக்ஸ். வகை வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் கூறியதை, அவர்களே இப்பொழுது மறுத்துள்ளனர். இக்குண்டு வெடிப்பு தொடர்பாக, விசாரணை என்ற பெயரில் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட 500 பேரில், 499 முசுலீம்கள் குற்றமற்றவர்கள் எனக் "கண்டுபிடிக்கப்பட்டு' விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். முகம்மது இலியாஸ் காரி என்ற ஒருவர் மீது மட்டும்தான் இராசஸ்தான் போலீசார் வழக்குத் தொடர்ந்துள்ளனர். எனினும், அந்த வழக்கிற்கும், ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பிற்கும் நேரடித் தொடர்பு எதுவும் கிடையாது. கள்ள பாஸ்போர்ட் வைத்திருந்ததாக காரியின் மீது வழக்கு தொடர்ந்துள்ள போலீசார், அதற்கான ஆதாரங்களைக் கூட காட்ட மறுத்து வருகிறார்கள்.
சிறப்புப் புலனாய்வுப் படை, முகம்மது காரியை மே 22ஆம் தேதி பரத்பூர் எனும் ஊரில், அவரது வீட்டில் வைத்து கைது செய்தது; ஆனால், அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், காரியை ஜெய்ப்பூரில் வைத்து ஜூன் 8ஆம் தேதிதான் கைது செய்ததாக போலீசார் புளுகியுள்ளனர்; உள்ளூர் போலீசாருக்குக்கூடத் தெரியாமல், பரத்பூரிலிருந்து காரியைக் கைது செய்து கடத்திச் சென்ற சிறப்புப் புலனாய்வுப் படை, மூன்று நாட்கள் கழித்துதான் காரியை ஜெய்ப்பூரில் வைத்து விசாரிப்பதாக, அவரது உறவினர்களுக்குத் தகவல் அளித்திருக்கிறது. காரியோடு சேர்த்து, 15 வயது முசுலீம் சிறுவனையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றது சிறப்புப் புலனாய்வுப் படை.
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு தொடர்பாக, முகம்மது இலியாஸ் காரி உள்ளிட்ட 500 முசுலீம்களைக் கைது செய்து விசாரிக்க, மத்தியமாநில போலீசார் முடியைப் பிய்த்துக் கொண்டோ, மூளையைக் கசக்கிக் கொண்டோ புலனாய்வு செய்யவில்லை. வங்கதேச அகதிகளைப் போலத் தெரியும் முசுலீம்கள் அல்லது குடும்ப அட்டை இல்லாத முசுலீம்கள்; ஜெய்ப்பூர் நகரில் ரிக்ஷா இழுக்கும் அல்லது குப்பை பொறுக்கும் முசுலீம்கள்; இந்திய முசுலீம் மாணவர் இயக்கம் தடை செய்யப்படுவதற்கு முன்பாக, அவ்வமைப்பில் செயல்பட்ட முசுலீம்கள்; முசுலீம் மத குருமார்கள்; மதரசாக்களில் ஆசிரியர்களாக வேலை பார்க்கும் முசுலீம்கள் இந்தப் பிரிவினரைக் குறிவைத்துதான் போலீசின் தேடுதல் வேட்டையே நடந்திருக்கிறது.
இராசஸ்தானின் மாதோபர் மாவட்டத்திலுள்ள உதய் கல்யாண் என்ற ஊரில் இருக்கும் மதரசாவில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் முகம்மது சஜித்துக்கும், போலீசார் வெளியிட்டிருந்த குண்டு வெடிப்பு குற்றவாளிகளின் உருவ அமைப்புக்கும் எவ்வித ஒற்றுமையும் கிடையாது; எனினும், முகம்மது சஜித், பொது மக்களின் எதிர்ப்பையும் மீறிச் சிறப்பு அதிரடிப் படையால் கைது செய்யப்பட்டார். முகம்மது சஜித், இந்திய முசுலீம் மாணவர் இயக்கம் தடை செய்யப்படுவதற்கு முன்பாக, அவ்வியக்கத்தின் மாநிலத் தலைவராகச் செயல்பட்டு வந்தார் என்பதுதான் போலீசாரின் சந்தேகத்துக்குப் பின்னிருந்த ஒரே காரணம்.
மின்னணுப் பொறியாளரான ரஷீத் ஹூசைன் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும், அவர் பெங்களூருவில் படிக்கும் பொழுது, இந்திய முசுலீம் மாணவர் இயக்கத்தின் தொடர்பில் இருந்தார் என்பதற்காகக் கைது செய்யப்பட்டார். ஹருண் ரஷீத், இப்திகார் அகமது, முகம்மது ஆஸம் உள்ளிட்ட பலரும் முசுலீம் என்ற ஒரே காரணத்திற்காகவே, மதவாத கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டு, சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் இழப்பும், துக்கமும் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதனைப் போன்றே, போலீசாரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட இந்த 500 முசுலீம்களின் இழப்பையும் துக்கத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
நன்றி: புதிய ஜனநாயகம்.