யாகவராயினும் '' நா''காக்க.
ஒரு மனிதன் நினைத்தால் ஒரு சமூகத்தையே ஒன்று படுத்திடவும் இயலும், பிளவு படுத்திடவும் இயலும். இந்த இரு வேறு நிலைகளுக்கும் உதவுவது நாக்கு தான். சின்னஞ்சிறிய இந்த உறுப்புத்தான் பெரும் குழப்பங்கள், பிரச்சினைகள், சண்டைகள், சச்சரவுகள் உருவாகவும் அவற்றை களையவும் பயன்படுகிறது.
இந்த நாவின் மூலம் ஏற்படும் நன்மைகளை மட்டுமே மனித சமூகம் அடைய வேண்டும். அதன் தீமைகளை அடையக் கூடாது.
‘நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களை கேலி செய்ய வேண்டாம்.இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக்காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. எவர்கள் இவற்றிலிருந்து மீளவில்லையோ அத்தகையவர்கள் அநியாயக்காரர்களாவார்கள்’.
‘நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக்கொள்ளுங்கள். சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள். உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள். உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தை சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பாவத்திலிருந்து மீள்வதை ஏற்றுக்கொள்பவன். நிகரற்ற அன்புடையோன்.’ (அல் குர்ஆன்- 49:11,12)
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது. (அல் குர்ஆன்-61:2,3)
‘குறை கூறிப் புறம்பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்’.(அல்குர்ஆன்-104:1)
‘அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர் சொல்லிக்காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை, கவலைப் படவும்மாட்டார்கள்’.(அல் குர்ஆன்-2:262)
‘…..பொய் பேசுவதிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள்’.(அல் குர்ஆன்-22:30)
ஒரு அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான், ஆனால் அதைப்பற்றி நல்லதா? கெட்டதா? என்று சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரமளவிற்கு நரகத்தின் அடிப்பாகத்தில் வீழ்ந்து விடுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரி)
புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நாங்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று பதிலளித்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் புறம் பேசுதலைப் பற்றி கூறினார்கள்.
உனது சகோதரன் எதை வெறுப்பானோ அதை அவன் விஷயத்தில் கூறுவதாகும். அப்போது, நான் கூறுவது எனது சகோதரனிடத்தில் இருந்தால்? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ சொல்வது உனது சகோதரனிடத்தில் இருந்தால் நீ புறம் பேசியவனாய் கருதப்படுவாய். நீ சொல்வது அவனிடத்தில் இல்லையெனில் நீ அவதூறு கூறியவனாய் கருதப்படுவாய் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-முஸ்லிம்)
ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-முஸ்லிம்)
கோள் சொல்லுபவன் சுவனத்தில் நுழைய மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)
மறுமை நாளில் அல்லாஹ் மூன்று சாரார்களுடன் பேசவும் மாட்டான், அவர்களை பார்க்கவும் மாட்டான், அவர்களை பரிசுத்தப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு கடுமையான வேதனையுன்டு என்று நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். கைசேதப்பட்ட, நஷ்டமடைந்த அந்த நபர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன், தனது கீழாடையை (பெருமைக்காக கரண்டைக்கு கீழ்) தொங்கவிடுபவன். (தான் செய்த தருமத்தை) சொல்லிக் காட்டுபவன். பொய் சத்தியம் செய்து தனது பொருளை விற்பவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-முஸ்லிம்)
ஒரு மனிதர் இன்னொரு மனிதனை பாவி என்றோ, காஃபிர் என்றோ சாட வேண்டாம். ஏனெனில் குற்றம் சுமத்தப்பட்டவர் அப்படி இல்லையெனில் அது அவர் பக்கமே திரும்பி விடும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)
யார் தன் சகோதரன் பற்றி கூறப்பட்ட குறையை மறைக்கின்றாரோ அவரது முகத்தைவிட்டும் நாளை மறுமையில் அல்லாஹ் நரகத்தைத் தடுத்துவிடுவான்.(நூல்-அஹ்மத்)
புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)
நயவஞ்சகனின் அடையாளம் மூன்று அவர்கள் தொழுதாலும், நோன்பு வைத்தாலும், தான் ஒரு முஸ்லிம் என எண்ணிக் கொண்டாலும் சரியே. 1.பேசினால் பொய்யுரைப்பான். 2.வாக்களித்தால் மாறு செய்வான். 3.நம்பினால் மோசம் செய்வான். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி, முஸ்லிம்)
மற்றவர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்க்காகப் பொய் கூறுபவனுக்கு கேடு உண்டாவதாக! அவனுக்கே கேடு, அவனுக்கே கேடு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-முஸ்லிம்)
மாபெரும் சதி யாதெனில் மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரி)
இறந்தவர்களை ஏசாதீர்கள். ஏனெனில் அவர்கள் முற்படுத்தியதற்குரியதைப் பெற்றுக் கொண்டார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரி)
யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தராமல் இருக்கட்டும். யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும். இல்லையெனில் வாய் மூடி இருக்கட்டும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரி)
எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என்று நபி(ஸல்;) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)
முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட போது எவருடைய நாவினாலும், கரத்தினாலும் ஏனைய முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறாரோ அவரே என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்-புகாரி)
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள் அவர்களது குறைகளைத் ஆராய்ந்து கொண்டிராதீர்கள் யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திருகின்றாரோ அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்-அஹ்மத்)
அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் நம்பிக்கை கொள்ளவில்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் நம்பிக்கை கொள்ளவில்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் நம்பிக்கை கொள்ளவில்லை! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அவர் யார் ? என்று கேட்கப்பட்டது. ‘எவருடைய துன்பத்திலிருந்து அன்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (நூல்-புகாரி)
ஒரு மூஃமீன் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்கமாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-திர்மிதி).
ஒரு சொல் சொல்லுவதற்கு முன் பல முறை யோசிக்கவும்.
தவறாக சொல்லிய சொல் பிறர் மனதை துன்பப்படுத்துவதுடன் நமக்கும் தீமையை அள்ளித்தருகிறது. அது பெரும் பாவமாய் நம்மை நரகத்தில் தள்ளிவிடுகிறது.
வார்த்தை சொல்லும் வரை நமக்குச் சொந்தம், சொல்லிவிட்டால் பிறருக்குச் சொந்தம். இப்படி, பிறருக்குச் சொந்தமாகும் ஒருப்பொருளை நல்ல பொருளாகக் கொடுத்தால் சுற்றமும் சூழ வாழ்த்துமே.
-முஹம்மது தஸ்தகீர்