video


recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

dailyvideo

நோன்பு, அதன் மாண்பு ! PART 5

இறைவன் கடமையாக்கி இருக்கின்ற மற்றொரு வழிபாடு நோன்பாகும். தொழுகையைப் போல இந்த வழிபாடும் ஆரம்பத்திலிருந்து எல்லாத் தூதர்களின் மார்க்கங்களிலும் கடமையாகவே இருந்து வந்திருக்கிறது. முதலில் தோன்றிய சமுதாயத்தவர்களும் நோன்பு பிடித்துக் கொண்டிருந்தார்கள். என்றாலும், நோன்பின் சட்டங்கள், அதன் எண்ணிக்கை, அது நீடிக்க வேண்டிய நேரம் ஆகியவற்றில் ஒரு மார்க்கத்தும் மற்றொரு மார்க்கத்துக்கும் இடையில் வேற்றுமை இருந்து வந்தது. இன்றும் கூட பெரும்பாலான மதங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் நோன்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மக்கள் தம் சார்பில் பலவற்றை இணைத்து அதன் வடிவத்தை கெடுத்திருந்தாலும் சரி! திருக்குர்ஆன் கூறுகிறது:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:183

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183

இதிலிருந்து நீங்கள் சிந்திக்கவேண்டும். எல்லாக் காலத்திலும் இந்த இறைவழிபாட்டைக் கடமையாக்குவதற்கு நோன்பில் என்னதான் இருக்கிறது?

நோன்பை தவிர்த்து மற்ற இறை வழிபாடுகள் எல்லாம் ஏதேனும் ஒரு விதத்தில் வெளிப்படையான செயல்களாகவே நிறைவேற்றப்படுகின்றன. உதாரனமாக தொழுகை, ஹஜ் போன்ற இறைவழிபாடுகள் பார்வைக்கு மறையாதவை. நீங்கள் நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அது மற்றவர்களுக்கு தெரிந்து விடுகிறது. நீங்கள் நிறைவேற்றாவிட்டாலும் தெரிந்து விடுகிறது.

ஆனால் நோன்பு நிறைவேற்றுகின்ற மனிதனையும் இறைவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் தெரிய முடியாது. ஒரு மனிதன் எல்லோருக்கும் எதிரில் 'ஸஹ்ரில்' சாப்பிட்டு நோன்பு பிடிக்கலாம். நோன்பு திறக்கும் நேரம்வரை அவன் வெளியில் தெரியும்படி சாப்பிடாமலும் குடிக்காமலும் இருக்கலாம். ஆனால் ஒளிந்து மறைந்து தண்ணீர் குடித்தால் அது இறைவனைத்தவிர வேறு யாருக்கும் தெரிய முடியாது. அவன் நோன்போடு இருக்கிறான் என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். உண்மையில் அவன் நோன்பாளி அல்லன்.

உறுதியான நம்பிக்கையின் அடையாளம்

நோன்புக்குறிய இந்தத் தனித்தன்மையை முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் சிந்தனை செய்யுங்கள்; ஒரு மனிதன் உண்மையாகவே நோன்பு நோற்கிறான். திருட்டுத்தனமாக அவன் சாப்பிடுவதில்லை; குடிப்பதுமில்லை. கடும் வெப்பத்தினால் தொண்டை வரண்ட நிலையிலும் அவன் ஒரு துளி தண்ணீர் அருந்துவதுமில்லை. கடும் பசியினால் கண் பார்வை குன்றிப்போனாலும் அவன் ஒரு கவளம் உணவும் உண்ண நினைப்பதுமில்லை.

அந்த மனிதனுக்கு இறைவன் எல்லா மர்மங்களும் தெரிந்தவன் என்பதில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது! தன்னுடைய செயல்கள் முழு உலகத்துக்கும் மறைந்து விட்டாலும் இறைவனின் பார்வையிலிருந்து மறைய முடியாது என்று எவ்வளவு உறுதியாக அவன் நம்புகிறான்!

மிகப்பெரும் சிரமங்களையெல்லாம் அவன் ஏற்றுக் கொள்கிறான்; ஆனால், இறையச்சத்தால் தான் நோற்கின்ற நோன்பை முறிக்கும் எந்தக் காரியத்தையும் அவன் செய்வதில்லை என்றால், அவன் உள்ளத்தில் எப்படிப்பட்ட உறுதியான இறையச்சம் இருக்க வேண்டும்!

இந்த இடைக்காலத்தில் மறுமை குறித்து ஒரு வினாடி கூட அவன் மனதில் எவ்விதச் சந்தேகமும் தோன்றுவதில்லையென்றால், மறுமையில் கிடைக்கும் நற்கூலிகள், தண்டனைகள் பற்றி அவனுக்கு எவ்வளவு திடமான நம்பிக்கை இருக்க வேண்டும்! 'மறுமை வருமா வராதா? அதில் நற்கூலியும் தண்டனையும் உண்டா இல்லையா? என்று அவன் மனதில் சிறிதளவாகிலும் சந்தேகம் ஏற்பட்டு விட்டால், அவனால் தனது நோன்பை என்றைக்கும் நிறைவேற்றவே முடிந்திருக்காது.

சந்தேகம் ஏற்பட்ட பிறகு இறைக்கட்டளையைச் செயற்படுத்துவதற்கென்று எதையும் சாப்பிடக்கூடாது; எதையும் அருந்தக் கூடாது எனும் எண்ணத்தில் மனிதன் நிலையாக இருப்பது சாத்தியமான ஒன்று அல்ல.

இவ்வாறு ஒவ்வொரு வருடமும் முழுமையாக ஒரு மாதத்திற்கு தொடர்ந்தால்போல் முஸ்லிம்களின் இறை நம்பிக்கைக்கு தேர்வு வைக்கிறான் இறைவன். இந்த தேர்வில் மனிதன் எந்த அளவு வெற்றி பெற்றுக்கொண்டே போகிறானோ, அந்த அளவுதான் அவனுடைய இறை நம்பிக்கை வலிமை பெற்றுக்கொண்டே போகும். இது தேர்வுக்குத் தேர்வு போன்றது, பயிற்சிக்குக் பயிற்சி போன்றது.

யாரேனும் ஒருவரிடம் ஒரு பொருளை நீங்கள் அமானிதமாக ஒப்படைத்திருந்தால், அவருடைய நாணயத்தை பரிட்சை செய்து பார்க்கிறீர்கள். இந்த பரிட்சையில் அவர் முழுவெற்றி வெற்றியடைந்து தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற பொருளுக்குத் துரோகம் செய்யவில்லை என்றால் அமானிதம் சுமையைத் தாங்குவதற்குறிய தகுதி இன்னும் அதிகமாக அவருக்கு வந்துவிடும். அவருடைய நாணயம் மேலும் வளர்ந்துகொண்டே போகும். இந்த பரிட்சையில் நீங்கள் தேர்ந்துவிட்டால், இறைவனுக்கு பயந்து மற்றப் பாவங்களிலிருந்தும் ஒதுங்கும் மனப்பக்குவம் உங்களுக்கு அதிகமாக ஏற்பட்டுவிடும்.

அனைத்து மர்மங்களையும் இறைவன் நன்கு அறிகின்றான் என நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் இறைக்கட்டளையை மீறுவதிலிருந்து விலகி நிற்கிறீர்கள். யாரும் உங்களை பார்க்கது இருந்தாலும் சரியே! மேலும் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மறுமை நாள் உங்கள் நினைவிற்கு வந்து விடுகிறது. அன்றைய நாளில் அனைத்து இரகசியங்களும் அம்பலமாகிவிடும்.

செய்யும் நன்மைக்கு நற்கூலியும், தீமைக்கு தண்டனையும் யாதொரு தயவு தாட்சண்யமும் இல்லாமல் கிடைக்கும் என்ற எதார்த்த உண்மையை நீங்கள் உணர்கிறீர்கள். எனவே இறையச்சம் உள்ளவர்களாக திகழ முழு முயற்சி மேற்கொள்கிறீர்கள்.

Posted by இப்னு அப்துல் ரஜாக் on 8/27/2008 08:45:00 AM. Filed under , , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for நோன்பு, அதன் மாண்பு ! PART 5

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Recent Entries

Recent Comments

Photo Gallery