பரபரப்புடன் முடிவுற்றது அதிரை கால்பந்து தொடர் போட்டி.
அதிரை கால்பந்தாட்ட வரலாற்றில் அதிக ஆட்ட நாட்களை பதிவு செய்துள்ள இவ்வாண்டு கால்பந்து தொடர்போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது. மிக ஆவலுடன் எதிர்பார்த்த இறுதி போட்டியில் A.F.C ஆலத்தூர் அணியும் கேரளா(கொல்லம்) அணியும் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் ஏதும் போடாமல் சமநிலையில் இருந்தனர். இரண்டாம் பகுதி நேர ஆட்டம் துவங்கியவுடன் ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. இடைவேளையின் போது வீரர்கள் அருந்திய எலுமிச்சையும் தண்ணீரும் வீரர்களுக்கு நிறையவே புத்துணர்வை அளித்திருந்ததை நம்மால் உணர முடிந்தது. எந்த அணியாவது கோல் போட மாட்டர்களா எனும் ஆர்வத்தில், அவ்வப்பொழுது ஒலிப்பெருக்கியிலும் கோல் அடிக்கும் வீரருக்கு சிறப்பு பரிசுகளின் அறிவிப்புகளும் வந்த வண்ணம் இருந்தது.
இத்தகைய அறிவிப்புகள் வீரர்களுக்கு கூடுதல் உற்சாகத்தையும், ஆட்டத்தின் வேகத்தையும் அதிகரித்தது.ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் தங்களது இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டனர். இறுதி ஆட்டத்திற்கு "தொடரும்" போட்டு விடுவார்களோ என ரசிகளுக்கு சந்தேகம் எழும் அளவுக்கு இரு அணியினரும் தங்களது முழு ஆட்டத்திறனையும் வெளிப்படுத்தினர்.
அணிகளில் சில வெளிநாட்டு வீரர்களும் தென்பட்டதால், சர்வதேச கால்பந்து போட்டியைப் பார்ப்பதை போன்ற உணர்வு நமக்குள்.
எல்லா எதிர்பார்ப்பிற்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல், கடைசி ஐந்து நிமிடத்தில் கேரள வீரர் அடித்த கோல், அந்த அணிக்கு வெற்றியைத் தந்தது. ஆட்ட நடுவர்கள் விசில் அடித்து ஆட்டம் முடியும் போது,1க்கு 0 என்னும் கோல் கணக்கில், கேரள அணியினர் வெற்றி பெற்றனர். அதிரை ரசிகர்களின் மாலை நேர பொழுது போக்கிற்கு இன்னொரு தொடர் போட்டி வரும் வரை, அவர்கள் காத்திருந்து தான் ஆக வேண்டும்.
முன்னதாக, இரு அணியினரின் அணிவகுப்பு நடைப்பெற்றது. இறுதி ஆட்டத்தை அதிராம்பட்டினம் காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்கள் துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிரை பேரூராட்சி மன்றத் தலைவர் ஜனாப் M.M.S.அப்துல் வஹாப் சாகிப் உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் பரிசளிப்பு விழா இனிதே நடந்து முடிந்தது. இத்தொடர் போட்டிக்கான முழு ஏற்பாட்டையும் அதிரை கால்பந்தாட்டக் குழு தலைவர் ஜனாப் C.M.இப்ராகீம் அவர்கள் மற்றும் குழுவினர்கள் செய்திருந்தனர்.
விளையாட்டின் சில காட்சிப் பதிவுகள் இதோ உங்கள் பார்வைக்கு:
புகைப்பட உதவி,
அதிரையிலிருந்து ஹாஜா.
-உங்களுக்காக,
சென்னையிலிருந்து அப்துல் பரக்கத்.