மதுக்கூரில் தீ விபத்து.
மதுக்கூரில் ஏற்பட்ட தீ விபத்தில் தி.மு.க., அலுவலகம் உட்பட பல கடைகள் எரிந்து சாம்பலானது. ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. மதுக்கூர் மெயின் ரோட்டில் சுவீட்ஸ் ஸ்டால் நடத்தி வருபவர் கணேசன். இவருக்கு இரண்டு கடைகள் உள்ளன. கடைகளுக்கு வேண்டிய இனிப்பு, பலகாரங்களை மெயின் ரோட்டில் உள்ள கடையில் இருந்து தயாரித்து மற்ற கடைகளுக்கு அனுப்புவது வழக்கம். நேற்று மதியம் பலகாரங்கள் செய்து கொண்டிருந்த போது, கொதிக்கும் எண்ணெய் சட்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது, அருகில் இருந்து பெட்மாஸ் லைட்டாக பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் கடை முழுவதும் தீப்பிடித்தது. அருகில் இருந்த ஜெயினுல்லாபுதீன் விறகு கடை, அஜிஸ்ரகுமான் ஒர்க்ஷாப், ஜகுபர்அலி ஷேக்அலாவுதீன் கடை உட்பட ஒன்பது கடைகள் தீப்பற்றி எரிந்தது. இதன் அருகே இருந்த தி.மு.க., அலுவலகமும் தீப்பற்றி எரிந்தது நாசமானது. தீ எரிந்தபோது வெடித்து சிதறிய ஆணிகளால் அருகில் உள்ள முகமதியர் தெருவில் உள்ள சேக்முகம்மது, முஜிபுர்ரகுமான், ஹனிபா, வகாப்ஹபீப் உட்பட ஏழு பேரின் வீடும் தீப்பிடித்து எரிந்தது. இதில், வீட்டில் இருந்த பணம், நகை, "டிவி', துணிகள் என பல பொருட்கள் நாசமாயின. சேதமதிப்பு ரூ.20 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தீயை அணைக்க பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருமக்கோட்டை, மன்னார்குடி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைத்தனர். தீப்பிடித்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வராததால், அதிக சேதாரம் ஏற்பட்டது எனக்கூறி மதுக்கூரில் சாலை மறியல் செய்தனர். மேலும், மதுக்கூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும், அமைக்காததை கண்டித்தும் சாலை மறியல் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கணேசமூர்த்தி, ரவிச்சந்திரன், பிச்சைபிள்ளை ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆர்.டி.ஓ., விநாயகமூர்த்தி, டி.எஸ்.பி., அழகேசன், எம்.எல்.ஏ., ரெங்கராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., தண்டாயுதபாணி, பாலசுப்பிரமணியம் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
(ஓட்டுக்காக மட்டுமே முஸ்லிம்களை பயன்படுத்தும் கட்சிகள் உடனடி நிவாரணம் கிடைக்க முனைவார்களா?பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸின் ஆழ்ந்த அனுதாபங்கள்).