கசக்கும் (அதிரை) உண்மைகள்
அதிரை ஆலிம்களைப் பற்றி கொஞ்சம் அரைகுறையாகவும் கொஞ்சம் அவதூறு கலந்தும் எழுதி இருந்தனர். பொத்தாம் பொதுவாக அதிரையில் நடக்கும் மார்க்கவிரோதச் செயல்களுக்கு ஆலிம்களை மட்டும் குறை சொல்வது எதார்த்தமறியாமல் எழுதப்பட்டது என்பதைச் சொன்ன பிறகும், தங்கள் தவறைத் திருத்திக் கொள்ளாமல் அடம் பிடிக்கிறார்கள். எதிர்வினை என்ற பெயரில் நிதானமின்றி எழுதியுள்ளார்கள்!
தர்காக்களில் தாயத்து முடிந்து கொடுப்பவரையும், ஆயுத பூசைக்கும் பணம் கொடுத்தால் பாத்திஹா ஓதுபவரையும், வயிற்றுக் கோளாராக இருந்தாலும் ஹத்தம் ஓதி உண்டுகழிப்பவரையும் ஆலிம்கள் என்று கற்பனையாக நினைத்துக் கொண்டு அதிரை-ட்ரூத் அன்பர் பிதற்றியுள்ளார்.
அதிரையில் ஆலிமாக இருப்பவர்களில் பலரும் தர்ஹா, ஹத்தம் மற்றும் இதர அநாச்சாரங்களைப் பற்றி அறிந்தும் தடுக்க முடியாத நிலைமைக்கு, அவர்களுக்குரிய கண்ணியம் வழங்கப்படாமலிருப்பதும், SO & SOவாதிகளைப் போல் ஆள்-படை-பண பலமின்றியும் இருப்பதே முக்கியக் காரணம் என்று சுட்டிக்காட்டி, எதார்த்தமாக எழுதுங்கள் என்று சொன்னால் உண்மைக்கு ஏன் கசக்கிறது?
நமதூர் ஆலிம்களில் இன்றளவும் நமதூர் தர்காவுக்கோ அல்லது வெளியூர் தர்காவுக்கோ சென்று ஜியாரத் செய்தவர்கள்:
1. மர்ஹூம் அஷ்ரஃப் அலி ஆலிம். (காளியார் தெரு)
2. நெய்னா ஆலிம் (புதுமனைத் தெரு/ நெசவுத் தெரு)
3. முஹம்மது குட்டி ஆலிம்
4. மற்றும் சில (அனேகமாக லெப்பைக் குடும்ப) ஆலிம்கள்?!.
லெப்பை குடும்பத்தவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் கந்தூரி விழாக்களில் கலந்து கொள்பவர் அல்லர்.அப்துல் காதிர் ஆலிம்,முஹம்மது குட்டி ஆலிம் போன்றோர் மூலமாக சுமார் 10-15 ஆண்டுகளுக்கு முன்னர் தர்கா மற்றும் கந்தூரி கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டுமென்று சம்பந்தப்பட்ட தர்கா டிரஸ்டிகளிடம் பேசி, அதிரை பைத்துல்மாலின் முயற்சியின் பேரில் ஓரிரு வருடங்கள் கடற்கரைப்பள்ளி தர்கா வளாகத்தில் மார்க்க பயான் நடைபெற்றது அதிரை-உண்மையில் எழுதும் இளையவருக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சேதுரோடு தைக்காவில்,மயிலிறகால் தடவி விடுவது,கப்ரில் சஜ்தா செய்தல் போன்றவற்றைக் கடுமையாகச்சாடிப் பேசினார் முஹம்மது குட்டி ஆலிம். தைக்காவின் வெளியே மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே, மேற்கூறிய அநாச்சாரங்கள் தர்ஹாவில் நடைபெற்றுக் கொண்டிருந்ததும் அதிரை-ட்ரூத் அன்பர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சிஷ்தியை அல்லாஹ்விடம் தவ்பாச் செய்யச் சொன்ன அப்துல் காதிர் ஆலிம், தர்ஹாவும் கந்தூரியும் மார்க்க விரோதமென பகிரங்கமாகச் சொன்ன முஹம்மது அலிய் ஆலிம், தர்காவுக்கே சென்று தவறென்று உரைத்த முஹம்மது குட்டி ஆலிம் உட்பட 99% ஆலிம்கள் தர்கா, கத்தூரி மற்றும் இதர மார்க்க விரோத அனாச்சாரங்களை எதிர்க்காவிட்டாலும் ஆதரிப்பவர்கள் அல்லர்.ஆதரிக்காமலிருப்பதும் ஒருவகை எதிர்ப்புநிலை என்பதை யாராச்சும் இந்த அதிரை-உண்மைக்கு எடுத்துச் சொல்லவும்.
நான் வெளிநாட்டில் இருப்பதால் உள்ளூர் நிகழ்வுகளைத் துல்லியமாக அறிய முடியவில்லை. அதிரை நகர உலமாக்களில் நானறிந்தவர்களைப் பற்றியும் அவர்களின் தன்னலமற்ற மார்க்கப் பணிகளையும் அறிந்தவரை பகிர்ந்து கொண்டுள்ளேன்.ஆலிம்களில் பலர் உலகக் கல்வியில் பின்தங்கி, இணையம், ஈமெயில் என்றால் என்னவென்றே அறியாத நிலையில்தான் அவர்களின் கல்வியறிவு இருக்கிறது.
அல்லாஹ்விற்காக உண்மையைச் சொல்வதாக இருந்தால், ஆலிம்களை நேரில் அணுகி, உங்கள் கடமைகளைச் செய்யுங்கள்; நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம் என்பதே நேர்மையான அணுகுறையாகும். விடுத்து, பொத்தாம் பொதுவாக எழுதும் ஏட்டுச்சுரைக்காய்கள் கறிக்குதவாது என்பதை பொதுத்தளங்களில் எழுதும் அன்பர்கள் உணர வேண்டும்.
இதன்மூலம், இஸ்லாத்தைக் குறைகான அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நாமே முன்னுதாரணமாகி விடக்கூடாதே என்பதால்தான் சற்று கடுமையாக இத்தகையவர்களின் தவறான அணுகுமுறையைச் சாட வேண்டியுள்ளது. நானறிந்தவற்றை மறைத்தல் திரித்தலின்றி சொல்லியதாக நம்புகிறேன். பதிலுக்குப் பதில் லாவணிபாடி நேர,சக்தி விரயம் செய்யாமல் இங்கு சொல்லப்பட்ட அநாச்சாரங்களைத் தடுக்கத் தகுந்த ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்வோம். அதிரை-உண்மைக்கும் சேர்த்தே இவ்வழைப்பை விடுக்கிறேன்.
நபியே! உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும் அவர்களிடம் மிக அழகிய முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன் அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும், (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான் (அல்குர்ஆன் 16:125)
<<<அபூஅஸீலா-துபாய்>>>