திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும்....! தீரர் திப்பு சுல்தான் அவர்களின் வாழ்கை வரலாறு பாகம் 7
"அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்'' என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.
திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.
பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.
இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத் தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.
அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
தகவல் உதவி அபு ஜுலைஹா