பிணத்துக்கும் மரியாதை தரும் இஸ்லாம்!இஸ்லாத்தின் தனிச் சிறப்புக்கள்.PART 1
கொடிக்கால் செல்லப்பா அவர்கள் இந்து மதத்திலிருந்து விடுபட்டு இஸ்லாத்தில் இணைந்த சகோதரர் என்பது அனைவருக்கும் தெரியும்.அவர்கள் தலித் முரசு இதழுக்கு அளித்த பேட்டி.(ஆண்டு அக். - நவம்பர் 2005)…!.
இஸ்லாமை நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கான சமூகக் காரணங்களைக் கூறுங்கள்…
! ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சி கோவையில் நடக்கிறது. அந்த நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு மதியம் இரண்டு மணி இருக்கும். அந்த வழியா “ஜனாஸா” ஒன்று கொண்டு வருகிறார்கள். “ஜனாஸா” என்றால் சாவு. அந்த வழியே கொண்டு வருகிறார்கள். அதை அடக்கம் செய்யக் கூடிய நேரம் வந்தது. இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அந்த அடக்கத்தில் நாங்கள் எல்லோரும் கலந்து கொள்கிறோம். அந்த நேரத்தில் ஒரு தகவல் சொல்லப்பட்டது. இறந்துவிட்ட அந்தப் பெரியவர் பேர் தெரியாது. எந்த ஊர் என்றும் தெரியாது. அப்படிப்பட்ட ஆளு அங்க ஒரு அனாதையா இறந்து கிடந்தார்.
அதுமாதிரி இறந்து கிடப்பவர் முஸ்லிம் என்று தெரிந்தால், உள்ளூர் போலீஸோ, அல்லது மருத்துவமனையோ - அங்கிருக்கும் ஜமாஅத்திற்கு உடனடியாகத் தெரிவிப்பார்கள். உடனே ஜமாஅத்தில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்றால் (இன்றும் எல்லா ஜமாஅத்திலும் கடைப்பிடிக்கக்கூடிய ஒன்று. நீங்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்). ஒரு மனிதனுக்கு அடக்கத்திற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் செய்து - அதற்கு மரியாதை செலுத்துவார்கள். அதே மாதிரி, அன்றைக்கு முழு மரியாதை அந்த இறந்துபோன பெரியவருக்குச் செய்யப்பட்டது.
ஆனால், அதேநேரத்தில், தஞ்சை மாவட்டத்தில் ஒரு பெரியவர் இறந்து போய்விட்டார். அந்தப் பெரியவரை அடக்கம் செய்வதற்கு எல்லோரும் போகிறார்கள். அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி முடிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என்று ஒன்று இல்லை. ஆளுநர் ஆட்சி நடக்கிறது. அப்போது தமிழகத்தின் தலைமைச் செயலாளர் திரு. பத்மநாபன், மாவட்ட ஆட்சியர் திரு. ராமு, அம்மாவட்ட எஸ்.பி.யும் ஒரு தலித்துதான். இந்த மூன்று பேருக்கும் மாநில அளவில் முழு அதிகாரம் இருக்கிறது. அதிலும் தலைமைச் செயலாளருக்கு முழு அதிகாரம் உண்டு.
அப்படிப்பட்ட நேரத்தில், அந்தப் பெரியவரின் உடலை அடக்கம் செய்ய கொண்டு போகிறார்கள். அங்கிருந்த சாதி இந்துக்கள் சாலையை இடைமறிக்கிறார்கள். பெரும் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கில் கூடி விட்டார்கள். கலவரம் ஏற்படக்கூடிய ஆபத்து ஏற்படுகிறது. இரண்டு நாளாகப் பிணம் கிடக்கிறது. புதைக்க ஆளில்லை. சாதி இந்துக்கள் புதைக்கவே அனுமதிக்கவில்லை. தோழர்களே! என்ன நடந்தது தெரியுமா? எஸ்.பி.யும், கலெக்டரும் தலித் தலைவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து, “எங்களுக்காக, எங்களுடைய வேலையைக் காப்பாற்றுவதற்காக, தயவுசெய்து விட்டுக் கொடுங்கள்; நாங்கள் ஒரு சிக்கலான கட்டத்தில் இருக்கிறோம். ஆட்சியுமில்லை; எனவே, நாங்கள்தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டும். எனவே, நீங்கள் பிரச்சினை செய்யாதீர்கள்” என்று கெஞ்சுகிறார்கள்.
தெருவில் இருந்த பிணத்தை அவருடைய வீட்டு முற்றத்திலேயே அடக்கம் செய்தார்கள் என்பதுதான் கொடுமையான வரலாறு. இந்தப் பிரச்சினை இன்றுவரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. யாராவது மறுக்க முடியுமா?
ஆனால், ஒருவர் முஸ்லிமாகி விட்டால், அவருக்கு அந்தச் சமூகத்தில் அங்கீகாரம் இருக்கிறது. அவருக்கு முழு மரியாதை கிடைக்கிறது. அவன் ஒருபோதும் அனாதையாக சாக அந்த சமூகம் அனுமதிக்காது. ஆற்றங்கரையிலோ, குளத்து ஓரத்திலோ, ரோட்டு ஓரத்திலோ அல்ல; அந்தக் குறிப்பிட்ட இடத்தில்தான் அவனை அடக்கம் செய்ய வேண்டும். இதுதான் மிகமுக்கியமான சமூகக் காரணம்.
இறைவன் நாடினால் தொடரும்.......