விஷத்துடன் வாழ்க்கை!சென்னையைப் பற்றிய ஒரு அலசல்!!
ஏற்கெனவே சென்னை சிட்டிக்குள் வாடகை உயர்வால் கதிகலங்கிப் போயிருந்தனர் சென்னைவாசிகள். இப்போது புறநகர் ஏரியாவில் தஞ்சம் புகுந்த அவர்களை பிரச்னை வேறு ஒரு ரூபத்தில் விடாமல் விரட்டுகிறது.
பல்லாவரம், பள்ளிக்கரணை, மணலி, கொடுங்கையூர் திருவொற்றியூர் ஆகிய இடங்கள்தான் பஞ்சபூதங்களாய் பப்ளிக்கை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
தோல்தொழிற்சாலைகளின் கழிவு நீரால் மாசுபடும் மண், நிறம் மாறும் நிலத்தடி நீர், மாநகராட்சி குவித்து வைக்கும் மலை மலையான குப்பைகளின் துர்நாற்றத்தால் மூச்சுத்திணறும் ஆக்ஸிஜன், அடிக்கடி வாயுக் கசிவுகளை உண்டாக்கும் ரசாயன ஃபேக்ட்ரிகள் என்று `மல்டி' சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டு மரண அவஸ்தையில் தவிக்கிறார்கள்.
சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய அரசும் இதை மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதால் மக்களின் கோபப் பார்வை அரசின் மீது திரும்பியிருக்கிறது.
தோல் தொழிற்சாலைகள் சூழ்ந்திருக்கும் பல்லாவரம் சிவசங்கர் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் இயந்தரங்களின் சத்தத்தால் நிம்மதியாக உறங்கமுடியாமல் தவித்துப் போகிறார்கள். காற்று வாங்க. ஜன்னல் கதவைத் திறந்தால் அவ்வளவுதான். தோல் கழிவின் துர்நாற்றமும், அதன்மேல் அடிக்கப்படும் ஒருவித ஸ்ப்ரேயின் காற்றும் சேர்ந்து மூச்சு முட்ட வைக்கிறது. அதோடு நெஞ்சடைப்பும்.
இதுபற்றி கேட்டால், `கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டு நீங்கள் சொல்லும்போது பேக்டரியை ஓட்டவோ நிறுத்தவோ முடியாது' என்பதுதான் பதிலாக வருகிறது. பகல் நேரத்தில் மட்டும் பெரிய இயந்திரங்களை இயக்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக ஏரியாவாசிகள் தெரிவிக்கிறார்கள்.
குழந்தைகள், பள்ளிப் பிள்ளைகள் என்று எல்லோரின் நிலையும் பரிதாபம்தான். கழிவுத் தோல்களின் மேல் வைக்கப்படும் நெருப்பினால் புகைமூட்டம் சூழ, இருமலும் மூச்சிரைப்புமாக அன்றாடமும் திண்டாட்டம்தான். அதோடு இந்தப் பகுதியிலுள்ள கிணற்று நீரின் தன்மை கடல்நீரின் உப்பை விஞ்சிவிட்டது.
152 கம்பெனிகளிலிருந்து ஒரு நாளுக்கு 2 லட்சம் லிட்டர் சுத்திகரித்து அனுப்பப்படுகிறது. இப்படி மாதம் 50 லட்சத்திற்கும் அதிகமான லிட்டர் அளவில் தோல் கழிவு சுத்திகரிப்பு நடைபெறுகிறது. ஆனாலும் இவ்வளவு சுகாதாரக் கேட்டோடு இருக்கிறது ஏரியா.
பள்ளிக்கரணையில் டைடல் பார்க் ரேஞ்சிற்கு கம்ப்யூட்டர் கம்பெனிகள் வந்துவிட்ட போதும், மலையாக அங்கு குவிக்கப்பட்டுள்ள குப்பைகளால் அலுவலகம் செல்வோரெல்லாம் கண் எரிச்சலுக்கும் மூச்சுத் திணறலுக்கும் ஆளாவது பரிதாபம்.
மணலி, கொடுங்கையூர் திருவொற்றியூர் பகுதியில் வசிப்பவர்களுக்கும் இதே நிலை தான்.
``உலகம் முழுவதும் சுகாதாரத்தை ஒரு நாளாக அறிவித்துக் கொண்டாடும் அளவுக்கு விழிப்புணர்வு வந்து விட்டது. ஆனால் இங்கு இப்படிபட்ட சூழ்நிலை. அதோடு இது போன்ற பகுதியில் வாழுகிறவர்கள் அன்றாடம் கூலி வேலை செய்கிறவர்கள், நடுத்தர மக்கள் தான். எந்த பணக்காரர்களும், எந்த மந்திரிகளுடைய வீடும், நடிகர்களுடைய வீடும் இந்த ஏரியாவில் கிடையாது. அப்பாவிப் பொது மக்கள்தான். நிலைமை இப்படி இருக்க, சென்னை மெரினா பீச்சை அழகுபடுத்த கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்கிறார்கள்.
சமீபத்தில் மணலியில் உள்ள ஒரு ரசாயன ஃபேக்ட்ரியில் வாயுக் கசிவு ஏற்பட திருவொற்றியூர் மக்களுக்கு தொண்டையும், கண்ணும் திகுதிகுவென எரிய, ஊரே அல்லாடிப்போனது. இதை விட பரிதாபம், மணலியில் எப்போதும் மூக்கை நமநமக்கச் செய்யும் ரசாயன நெடி மற்றும் சுகாதாரக் கேட்டினாலே இங்குள்ள சில இளம் பெண்களுக்கு திருமணம் நடைபெறாமலே போயிருக்கிறது. அவர்களில் சிலர் சென்னைக்குள் குடியேறி தங்கள் பிள்ளைகளை கரை சேர்த்திருக்கிறார்கள்.
``இந்தப் பகுதியில் வாழுகிற எங்களுக்கு குறைந்தது மூணு மாசத்துக்கு ஒரு முறையாவது முழு மருத்துவ சோதனைக்கு ஏற்பாடு செய்யணும். அல்லது காற்று, நீர் இதெல்லாம் சுத்தமா இருக்கிறதான்னு பரிசோதனை மூலமா எங்களுக்கு தினமும் தெரியப்படுத்தணும். அப்படியும் இல்லேன்னா இந்த இடங்கள் மனிதர்களே வாழத் தகுதியில்லாத இடங்கள்னு அரசாங்கமே அறிவிச்சு எங்களை காலி பண்ணச் சொல்லட்டும்'' என்று கொட்டித் தீர்த்தார் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர்.
``நெருக்கடி கொடுக்கும் நெடிப் பிரச்னையிலிருந்து தப்பிக்க கரிம வேதியியல் துறை பேராசிரியர் பக்ததாஸ், ``தோல் பதனிடுதலில் குரோமியம், காரம், அமிலம் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்தாமல் போனால் நுரையீரல் பாதிக்கப்படும். ரத்தத்தில் கலப்பதால் மெல்ல உடல் முழுக்க பாதிப்புகள் ஏற்படும். குறைந்த பட்சம் மக்கள் வாழ்கிற பகுதியிலுள்ள கம்பெனிகள் வெளியேற்றும் கழிவையும், காற்றையும் பரிசோதனை செய்ய அரசாங்கம் ஏற்பாடு செய்யலாம். உலகில் வெப்பம் உயர்ந்து வருகிற இந்த நேரத்துல இது போன்ற தற்காப்புகளும் பரிசோதனைகளும் ரொம்ப அவசியம்'' என்றார் அக்கறையாக.
இது தொடர்பாக அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டால் இது எங்க லிமிட் இல்லை, இது வேற ``ஏரியா'' என்கிற பதிலே வருகிறது. ஆனால் ``சென்னையோட குப்பையை மட்டும் பள்ளிக்கரணை, கொடுங்கையூர் ஏரியாவில் கொட்டுகிறார்களே இது நியாயமா?'' என்று கோபத்தோடு கேட்கிற குரல்களுக்கு பதிலை உரியவர்கள்தான் தரவேண்டும்.
thanks kumudam.