அடிமை இந்தியா மற்றும் சுதந்திர இந்தியாவில் தலித் மக்களின் நிலை?இஸ்லாத்தின் தனிச் சிறப்புக்கள்!PART 2
- கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்!!
நன்றி: தலித் முரசு (அக். - நவம்பர் 2005)…!
? கொடிக்கால் செல்லப்பாவாக இருந்த நீங்கள், எந்த ஆண்டு கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்வாக மாறினீர்கள்?
! 1986ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக மாறினேன். 8,9 வயது இருக்கும்போது எங்கள் பகுதியில் தலித், அதற்கு அடுத்தபடியாக நாடார்கள்தான் அதிகமாக இருந்தார்கள். “உயர்சாதி” என்று சொல்லப்படுகிறவர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அறவே எங்கள் பகுதியில் இல்லை. நாடார்களும் தலித்துகளும் பல சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நாடார்களே, தலித்துகள் தங்களுக்குக் கீழ் இருக்க வேண்டும்; தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று அவமானப்படுத்தினார்கள். நாடார்கள் தலித்துகளிடத்தில் நடந்து கொண்ட முறையும் செயல்பாடுகளும் எனக்குள் காயத்தை ஏற்படுத்தியது. இந்தத் தலைமுறை முடிந்து அடுத்த தலைமுறை யாவது நம்மை மனிதர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. கன்னியாகுமரியில் நடைபெற்ற கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 1954ஆம் ஆண்டு கலந்து கொண்டு, சிறை சென்று வெளியில் வந்தோம். சிறைக்குச் சென்று வந்ததால் சமுதாயத்தில் என்னைப் பற்றி ஒரு பார்வை வருகிறது. இது, மிகமுக்கியமான கட்டம். ஏனென்றால், சிறு வயதில் எனக்குப் படிக்கின்ற வாய்ப்பு இல்லை. பொது அறிவு எனக்கு அதிகமாக ஏற்படக்கூடிய நிலை வரும்போது எங்கள் பகுதியில் இருக்கும் இளைஞர்களின் பார்வை மாறுகிறது. எந்தச் சமுதாயம் எங்களை அவமானப் படுத்தியதோ, என்னை ஒதுக்கி வைத்ததோ, அந்தச் சமுதாயத்தினுடைய அடுத்த தலைமுறை என்னை மதிக்கப் புறப்பட்டது.
அடிமை இந்தியாவில், ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன். கலைஞர் கருணாநிதி, முதலமைச்சராக இருந்தபோது, சட்ட மன்றத்தில் ஆதிதிராவிடர் மானியக் கோரிக்கையின் போது ஒரு செய்தியைச் சொல்கிறார்: “எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெளியிடப்பட்ட ஒரு துண்டுப் பிரசுரம் எனக்குக் கிடைத்தது. அதில், சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் ஒற்றைவாடை தியேட்டரில் “ஆரியமாலா” என்ற நாடகம் நடத்த இருப்பதாகவும், அதுகுறித்த செய்திகளைக் குறிப்பிட்டுவிட்டு - அடிக்குறிப்பொன்று அதில் சொல்லப் பட்டிருந்தது. தொழு நோயாளிகள் மற்றும் பஞ்சமர்களுக்கு எக்காரணம் கொண்டும் நாடகம் பார்ப்பதற்கு அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.”
ஒரு சமுதாயம் எவ்வாறு இழிவுபடுத்தப் பட்டிருந்தது என்பதைச் சொல்வதற்கு வேறு வார்த்தைகளே இல்லை. இது, அடிமை இந்தியாவில் நடந்த விஷயம்.
இன்னொரு சம்பவத்தையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஜெகஜீவன்ராம் அவர்கள், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், செல்வாக்கு மிகுந்த தலைவராகவும், துணைப் பிரதமராகவும் இருந்து, அவர் ராணுவ அமைச்சராக இருக்கும்போது ஒரு சம்பவம் நடக்கிறது. காசியிலே சம்பூராணந் சிலையை அவர் திறந்து வைத்துவிட்டு வந்த பிறகு, அவர் ஒரு தலித் என்ற காரணத்தால் அங்கு இருக்கிற சனாதனவாதிகள் எல்லாம் கங்கைக்குப் போய் - தண்ணீர் கொண்டு வந்து சிலையை சுத்தம் செய்து கழுவி, தங்களது சாதி வெறியை உலகிற்கு பகிரங்கமாக தெரிவித்தார்கள். இதை உலகமே பார்த்தது.
எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலைமைகள் இருந்தால், இப்படிப்பட்ட செய்திகள் வந்தால் அவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கக்கூடிய காலத்திலேயே இந்த சம்பவம் நடந்தது. அவர், முப்படைக்கும் தளபதியாக இருந்த காலத்திலேயே இது நடந்தது.