அதிரை மக்களின் அச்சம் தவிர்ப்பீர்
நமதூர் நடுத்தெருவைச் சார்ந்த தவ்பீக்கை படுபயங்கரச் சதித்திட்டத்தில் குற்றம்சாட்டி, என்கவுண்டர் செய்யத் திட்டமிட்டு கேரளா, கர்நாடகம் என்று தமிழகபோலீசார் தேடிவருவதைத் தொடர்ந்து ஊடகங்களின் கவனம் நமதூரை நோக்கித் திரும்பியுள்ளது. மத்திய மாநில அதிகாரிகளும், தேசிய ஊடக செய்தியாளர்களும் ஆங்காங்கு சுற்றி வருகிறார்கள். குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் இருப்பவர்களின் தொலைபேசி, செல்பேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டு கண்கானிக்கப்படுகிறார்கள்.
பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்டுள்ள ஊரென்றக் காரணத்திற்காக பத்திரிக்கைகள் நமதூரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக மிகைச் செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். தினமலர்,தினத்தந்தி, குமுதம் ரிப்போர்ட்டரைத் தொடர்ந்து ஜூனியர் விகடனும் தன் பங்குக்கு, தவ்பீக் மாறுவேடங்களில் சுற்றிவருவதாகப் புரளியைக் கிளப்பியுள்ளது.
தவ்பீக்கின் லேட்டஸ்ட் புகைப்படம் காவல்துறையினரிடம் இல்லையாம்; ஐந்து வருடங்களுக்குமுன் ஜு.வியில் வெளியான புகைப்படத்தை வைத்தே தேடிவருவதாக உண்மைக்குப் புறம்பாக ஜூனியர் விகடன் எழுதியுள்ளது. ஓரிரு மாதங்களுக்கு முன் குமுதம் ரிப்போர்ட்டரில் தவ்பீக்கின் பேட்டியுடன் புகைப்படமும் வெளியாகி இருந்ததை அதிரை-எக்ஸ்ப்ரஸிலும் மீள்பதிவு செய்திருந்தோம்.
மேலும், கடந்த சட்ட மன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் வேட்பாளராகப் போட்டியிட்டு, பாஜகவை வேட்பாளரைவிட அதிக வாக்குகளைப் பெற்று நான்காமிடம் பெற்ற விபரம் தேர்தல் ஆணையம் மற்றும் அதிகாரபூர்வ ஆவணங்களில் வெளியாகியது. இருந்தும் ஜூனியர் விகடன் திரித்து எழுதியிருப்பது, அதன்மீதான நம்பகத் தன்மையைக் குறைக்கிறது.
தமிழக முஸ்லிம் சமுதாய இயக்கங்கள் ஊடகங்களின் முஸ்லிம் விரோதப் போக்கை பெயரளவில் கண்டித்ததோடு ஒதுங்கிக் கொண்டனர். தவ்பீக்குடன் தொடர்பு படுத்தப்படும் இன்னொருவர், தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தினருடன் செயல்பட்டு, பிறகு நீக்கப்பட்டவராம். சமுதாய இயக்கங்களின் அழைப்பை ஏற்று, உணர்ச்சிப் பெருக்குடன் பொது நிகழ்ச்சிகளில் கோஷமிடும் முன்னாள் இயக்கத்தவர்களின் நிலையைப் பார்த்து, கண்ணை மூடிக்கொண்டு இயக்க வெறி பிடித்து அலைபவர்கள் விழிப்படைய வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் நமதூரில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்குச் சிறப்பு அழைப்பாளர்களாக நகர, வட்டாரக் காவல்துறை அதிகாரிகளை அழைத்து கண்ணியப்படுத்துகிறோம்.பைத்துல்மால்,அரிமா சங்கம் மற்றும் முஹல்லா சங்கங்களின் மூலம் அரசு/ காவல்துறை அதிகாரிகளுடனும் அரசியல் தலைவர்களுடனும் தொடர்பிலிருந்தும் ஊர்மக்களின் அச்சத்தைப் போக்க எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் மெளனமாக இருக்கிறார்கள்.
செல்வாக்குள்ளவர்கள் ஊடகம் மற்றும் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அதிராம்பட்டினம் குறித்த மிகையான, தவறானச் செய்திகளைக் களைய விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும், விளக்கக்கூட்டங்களையும் நடந்த முன்வர வேண்டும். வரவிருக்கும் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாட நமக்கும் உரிமை இருக்கிறது என்பதால் இதை உடனடியாகச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை அதிரை-எக்ஸ்ப்ரஸ் நினைவுறுத்த விரும்புகிறது.